ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. அரசாங்கம் தன்னை பலப்படுத்த வேண்டுமாயின் இணக்கப்பாடு தொடர்பில் சிந்திக்க வேண்டும் என தெரிவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றரை இலட்சம் முஸ்லிம் வாக்குகள் எம்மில் தங்கியுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் சுட்டிக் காட்டியது.
அரசாங்க பங்காளிக்கட்சிகளுடனான பேச்சுவார்த்தையினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகின்றது. யாரை ஆதரிக்கப் போகின்றது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. எமக்கென்ற கொள்கைத் திட்டம் உள்ளது. முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கும் பிரதான கட்சியென்ற வகையில் எமக்கு முஸ்லிம் மக்களை பற்றிய அக்கறையும் சிந்தனையும் உள்ளது.
எனவே, அவர்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு ஏற்பட வேண்டும். நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை பலப்படுத்த முன்வந்த போதும் அரசாங்கம் எமக்கு பல வாக்குகளை வழங்கியது. ஆனால், அவை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
இப்போது கோரிக்கைகளுக்கான வாக்குறுதிகளை நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் அப்பாற்சென்று முஸ்லிம் மக்களுக்கான உடனடித் தீர்வினையே எதிர்பார்க்கின்றோம். எனவே, இப்போதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் மிக கவனமாக உள்ளோம்.
அதேபோல் நாங்கள் தீர்மானமிக்க முஸ்லிம் கட்சி. இன்று மூன்றரை இலட்சம் முஸ்லிம் வாக்குகள் எம்மிடம் உள்ளன.
அதை பெற்று அரசாங்கத்தை பலப்படுத்துவது குறித்து அரசாங்கமே சிந்திக்க வேண்டும். பங்காளிக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டால் மாத்திரமே பலமான அரசாங்கத்தை உருவாக்க முடியும். அதேபோல் தொடர்ந்தும் நாங்கள் தீர்மானங்கள் எடுப்பதற்கும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் காலம் உள்ளது.
நாங்கள் ஆரோக்கியமான முடிவுகளையே எப்போதும் எடுப்போம். எனவே, தகுந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரியான முடிவினை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment