ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்க பலத்துடன் கோலோச்சுகின்ற கிழக்கு மாகான சபையின் ஆட்சி தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா என்பதை கட்சியின் உயர்பீடம் அவசரமாகக் கூடி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் கட்சிகள் தமது தேவைகளுக்காக முஸ்லிம் சமூகத்தை பகடைக்காயாக பாவிப்பதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ரீதியிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவான கல்முனை ஸாஹிறா கல்லூரி அணியினரை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது;
"சாதனைகள் நிலைநாட்டுவதென்பது சாமான்யமான காரியமல்ல. அதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. இங்கு சாதனை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறுகின்ற போது நாட்டில் அரசியல் கள நிலைவரம் சூடுபிடித்துள்ளதை நாமறிவோம்.
விரைவில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இச்சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முஸ்லிம் மக்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு மற்றும் அபிலாஷைகள் தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள பட்ஜெட் வாக்கெடுப்பில் எமது கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தேன். எமது மக்களின் உணர்வுகளை மதித்து நாம் செயற்பட வேண்டும் நான் வலியுறுத்தியிருந்தேன்.
அதுபோன்று எமது கட்சியின் தயவில் உள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பதையும் அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டுமா என்பதையும் எமது கட்சியின் உயர்பீடம் அவசரமாகக் கூடி தீர்க்கமான முடிவினை அறிவிக்க வேண்டும் என நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படி நான் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஏனெனில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவதற்கு இந்த அரசாங்கம் எமது ஆதரவை நாடியபோது முஸ்லிம் காங்கிரஸ் பல கோரிக்கைகளை முன்வைத்து- அவை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு- நிறைவற்றித் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் பேரிலேயே நாம் அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஆட்சியை நிறுவினோம். இன்றுவரை இந்த ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களே தக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் சமூகத்திற்கு எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. எமது கோரிக்கைகளில் எதுவும் இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை. முஸ்லிம் சமூகமும் எமது கட்சியும் இந்த அரசாங்கத்தினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகின்றது என்றால் நாம் எமது முடிவை மீள்பரிசீலனை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று நான் கேட்க விரும்புகின்றேன். இதுவே இன்று முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதை நான் விளக்கிக் கூறத் தேவை இல்லை. எல்லோரும் கண்முன்னே அதனைக் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
அதனால் தான் தற்போது தேசிய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை தோன்றியுள்ள நிலையில் எமது சமூகத்தினதும் கட்சியினதும் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய தருணத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். சாதாரண காலங்களில் பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்றின் ஆட்சிக்கு மத்தியில் எதுவும் செய்ய முடியாத சங்கடத்தில் காலத்தை ஓட்டிய நாம் இப்போது கிடைத்திருக்கும் பேரம் பேசும் சந்தர்ப்பத்தை இழந்து விடக் கூடாது என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனையே நான் பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றேன்.
இதற்கு முதல் படியாக பாராளுமன்றத்தின் பட்ஜெட்டும் அடுத்த படியாக கிழக்கு மாகாண சபையின் பட்ஜெட்டும் நமது சமூகத்தின் நிலைப்பாட்டையும் உணர்வுகளையும் இந்த அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பங்களைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆகையினால் இவை தொடர்பிலும் எம்மை ஏமாற்றி- வஞ்சித்து- எமது கோரிக்கைகளை இழுத்தடிப்பு செய்து கொண்டு எமது பலத்துடனேயே கிழக்கு மாகாண சபை ஆட்சியை நடாத்துகின்ற அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நாம் ஆதரவளிப்பதற்கான தேவை என்ன என்பது தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு எமது கட்சியின் உயர்பீடத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
இது விடயத்தில் இனியும் கால தாமதம் காட்ட முடியாது. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் உணர்வுகளுக்கு கட்சியின் தலைமைத்துவமும் உயர் பீடமும் நிச்சயம் மதிப்பளிக்கும் என்றும் மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ள மாட்டார்கள் என்றும் நான் திடமாக நம்புகின்றேன்.
சமூகத்தின் விடுதலை, உரிமை, பாதுகாப்பு போன்ற விடயங்களை முன்னிறுத்தியே முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானங்களை மேற்கொள்ளும் என நான் திடமாக நம்புகின்றேன். தனி நபர்களின் விருப்பங்களுக்கு இனிவரும் காலங்களில் இடமாளிக்கப்பட மாட்டாது என்பதில் தலைமைத்துவமும் உயர் பீடமும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன். அதனால்தான் இன்று கட்சியின் உயர் மட்டத்தில் மாத்திரமல்லாமல் அடி மட்டத்திலும் பரந்துபட்ட ரீதியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எமது அதிரடித் தீர்மானங்கள் ஜனாதிபத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்க வேண்டும். இம்மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள பட்ஜெட் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் அரசினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்ற எமது கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றித் தரப்பட வேண்டும். இல்லையேல் நாம் எதிர்த்து வாக்களிக்க வேண்டும். கிழக்கின் ஆட்சியையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துவத்திற்கும் உயர் பீடத்தினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளாகும்.
எமது கரையோர மாவட்ட்டக் கோரிக்கையை அரசாங்கம் மாத்திரம் நிராகரிக்கவில்லை. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும் எதிரான கருத்துகளை கூறியுள்ளார். ஆகையினால் இவ்வாறான தேசியக் கட்சிகளுடன் மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் இனிவரும் காலங்களில் மிகவும் நிதானமான முறையில் சமூக நலன்களை முன்னிறுத்துவது தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் கைக்கொள்ள வேண்டியுள்ளது.
எந்தவொரு சக்திக்கும் நாம் அடியபணிய வேண்டிய அவசியம் கிடையாது. நமது கொள்கை, கோட்பாடுகளில் உளத்தூய்மையுடன் உறுதியாக இருந்து செயற்படுவோமானால் எவருக்கும் அஞ்சத் தேவை இல்லை. எந்தவொரு தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி முஸ்லிம் சமூக நலனுக்கு அப்பால் சென்று கறிவேப்பிலையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கான உரிமையும் எவருக்கும் கிடையாது.
எமது மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு போதுமான வழிகாட்டல்களை காட்டிச் சென்றுள்ளார். சில இக்கட்டான சூழ்நிலைகளில் எவ்வித தடுமாற்றமுமின்றி தீர்மானங்களை உறுதியாகவும் தைரியமாகவும் மேற்கொண்டுள்ளார் என்பதை நாமறிவோம். அவற்றை இந்த சந்தர்ப்பத்தில் நாம் மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்படி ஒரு பெரும் தலைவன் வாழ்ந்த கல்முனை மண்ணில்- தேசிய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்திய கல்முனைத் தொகுதியில் இன்று ஒரு துணிச்சலான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் பெற்றிருக்கின்றோம்.
கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதக் கருத்துக்களை பெரும்பான்மை மக்களிடம் பரப்பிவரும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இனவாதக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தினை மிகத் தைரியமாக எமது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கொடுத்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் அமைக்கப்பட்ட மொரகொட ஆணைக்குழுவின் சிபாரிசாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் கையிலெடுத்து இன்றுவரை அதனை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
அம்பாறை கரையோர மாவட்ட மக்கள் தங்களது நிர்வாக கடமைகளை அம்பாறை கச்சேரிக்கு சென்று மேற்கொள்வதற்கு மொழி ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதனை உணர்ந்து மொரகொட ஆணைக்குழு கல்முனை, பொத்துவில, சம்மாந்துறை போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அன்று சிபாரிசு செய்திருந்தது.
இக்கரையோர மாவட்டத்தினை இன்று முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதனால், இதற்கு பேரினவாதிகள் இனவாதச் சாயம்பூசி, நாட்டை இனரீதியாக துண்டாட அனுமதிக்க முடியாது என பிரச்சாரங்களை சிங்கள மக்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த இனவாதக் கருத்துக்களுக்கு தெளிவான விளக்கத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் வழங்கியுள்ளார். இவ்விளக்கத்தினால் பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களும், பேரினவாதிகளும் தெளிவடைந்துள்ளதுடன் இக்கரையோர மாவட்ட கோரிக்கையினை கொள்கையளவிலும்; ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனை மிகக் கட்சிதமாக செய்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் செயற்பாட்டினையும், தைரியத்தினையும், அவர் முஸ்லிம் சமூகம் மீது வைத்துள்ள பற்றினையும் பாராட்டுகின்றோம்" என்று ஜெமீல் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment