கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதக் கருத்துக்களை பெரும்பான்மை மக்களிடம் பரப்பிவரும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இனவாதக் கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தினை மிகத் தைரியமாக கொடுத்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற்ற கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடாந்து உரையாற்றுகையில்,
கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் அமைக்கப்பட்ட மொரகொட ஆணைக்குழுவின் சிபாரிசாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் கையிலெடுத்து இன்றுவரை அதனை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
அம்பாறை கரையோர மாவட்ட மக்கள் தங்களது நிர்வாக கடமைகளை அம்பாறை கச்சேரிக்கு சென்று மேற்கொள்வதற்கு மொழி ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதனை உணர்ந்து மொரகொட ஆணைக்குழு கல்முனை, பொத்துவில, சம்மாந்துறை போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அன்று சிபாரிசு செய்திருந்தது.
இக்கரையோர மாவட்டத்தினை இன்று முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதனால், இதற்கு பேரினவாதிகள் இனவாதச் சாயம்பூசி, நாட்டை இனரீதியாக துண்டாட அனுமதிக்க முடியாது என பிரச்சாரங்களை சிங்கள மக்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த இனவாதக் கருத்துக்களுக்கு தெளிவான விளக்கத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் வழங்கியுள்ளார். இவ்விளக்கத்தினால் பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களும், பேரினவாதிகளும் தெளிவடைந்துள்ளதுடன் இக்கரையோர மாவட்ட கோரிக்கையினை கொள்கையளவிலும்; ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனை மிகக் கட்சிதமாக செய்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் செயற்பாட்டினையும், தைரியத்தினையும், அவர் முஸ்லிம் சமூகம் மீது வைத்துள்ள பற்றினையும் பாராட்டுகின்றோம்.
கல்முனைத் தொகுதியில் நான் உட்பட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகிய நான்கு அரசியல் தலைமைகளும் மக்களின் தேவைகள் அறிந்து, சமூகத்தின் விடிவுக்காக கட்சி பேதங்கள் மறந்து செயற்பட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment