ஊடகவியலாளர்களின் நலன் கருதி தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கான பொதுத் தங்குமிடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர ஊடகவியலாளர் கலாசார அமைப்பு மற்றும் கொழும்பு ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய இணைந்து வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளன
இவ்வூடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் ஊடகத்துறை என்பன ஒரு நாட்டின் முக்கிய துறைகளாகவும் முக்கிய தூண்களாகவும் செயற்படுகின்றன. இந்நிலையில், ஊடகத்துறை தவிர்ந்த ஏனைய துறைகளைச் சார்ந்தோர் அரசினால் பெறுகின்ற நலன்களை ஒப்பிடுகையில் ஊடகத்துறையில் உள்ளோர் குறைந்த நலன்களையே பெறுகின்றனர்.
இலங்கை குறித்த நல்லெண்ணத்தை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்துவதிலும், நாட்டின் அபிவிருத்தியிலும் சமூக ஒருமைப்பாடு மற்றும் சமாதானம் என்பற்றுக்காக ஊடகத்துறையும் ஊடகவியலாளர்களும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
இத்தகைய பாரிய பணியைப் புரிகின்ற ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் அவர்கள் நலன்களும் மேம்படுத்தப்படுவது அவசியம்.
இருப்பினும், ஏனைய துறைசார்ந்தோருடன் ஒப்பிட்டு நோக்குகையில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கீழ்மட்டத்திலேயே உள்ளனர் என்பது யதார்த்த நிலையாகும்.
இவ்வாறான நிலையில், பல துறைசார் பணிகளில் ஈடுபடுவோருக்காக தலைநகர் கொழும்பில் பொதுவான தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்களுக்காக பொதுவான தங்குமிட வசதி இதுவரை காலமும் ஏற்படுத்தப் படவில்லை.
தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் அல்லது அரச, அரச சார்பற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வரும் ஊடகவியலாளர்கள் கொழும்பில் தங்கி தங்களது தேவைகளை, பணிகளை நிறைவு செய்துகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
நாட்டின் கௌரவத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யும் ஊடகவியலாளர்கள் கொழும்பில் தங்கி தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு பொதுவான தங்குமிடமின்றி சிரமத்தை எதிர்நோக்குவது துரஷ்டவசமாகும். இலங்கையில், 15 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 41 வானொலி சேவைகளும் 31 தினசரி பத்திரிகைகளும் 61 வாராந்த மற்றும் மாதாந்த பத்திரிகைகளும் அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களும் மக்களுக்கான தகவல்களை வழங்கி வருகின்றன.
இவ்வூடங்களினூடாக நாட்டின் இறைமைக்கும் கௌரவத்திற்கும் பங்கம் ஏற்படாத வகையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்திகளைத் திரட்டி ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பதன் மூலமே பல மில்லின் பேர் அன்றாடம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிகழும் சம்பங்களுக்குகான தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறான சக்திமிக்க ஊடகவியலாளர்களின் நலன்களைப் பேணுவதில் கவனம் செலுத்தப்படுவது இன்றியமையாதது. ஊடகவியலாளர்களின் நலன்களைப் பேண எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கான பொதுவான தங்குமிட வசதி ஏற்படுத்தப்படுவது அவசியமெனக் கருதப்படுதல் வேண்டும்.
இந்த வகையில், பொது ஊடகவியலாளர் இல்லம் என்ற பெயரில் ஊடகவியலாளர்களுக்கான பொதுவான தங்குமிடமொன்றை தலைநகர் கொழும்பில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு கோரு வதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய சுதந்திர ஊடகவியலாளர் கலாசார அமைப்பு மற்றும் கொழும்பு ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன மாவட்டம் தோரும் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாகவும் இரு ஊடக அமைப்புக்களும் தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment