பழைய தபாற்கந்தோர் வீதி, பழைய சந்தை வீதி என்றெல்லாம் இந்த ஊரின் வரலாறு வருங்கால சந்ததிக்கும் தெரியவேண்டும் என்பது போலிருக்கும் போது, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் அழிந்து போன சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை சரியோ பிழையோ பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்காக, அதன் வரலாற்றை அழிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ஒருபுறமிருக்க, இன்னும் மக்கள் அந்த வைத்தியசாலையை கடற்கரை ஆஸ்பத்திரி என்று தான் அழைக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
ஊரின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் பெயர்களை வைத்துக் கௌரவப்படுத்துவதில் தவறில்லை. அவர்களினால் இந்த ஊர் நன்மையடைந்திருக்குமானால் நிச்சயமாக அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆகவே, அப்படிப்பெயர் வைக்கப்படுகின்றவர்கள் இந்த ஊருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
குறித்த வீதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கின்ற மக்கள் இந்தப்பெயர் மாற்றம் எதுவும் அறியாதவர்களாகவும், தற்போது அவர்கள் இந்த வீதியின் பெயரை சடுதியாக இப்போது மாற்றுவதற்கான தேவை என்னவெனவும், இந்தப்பெயர் மாற்றத்திலே தங்களுக்கு உடன்பாடில்லை எனவும் அங்கலாய்ப்பதைக் காணமுடிகின்றது.
அதுமட்டுமல்ல, ஊரிலே கவனிக்கப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் கவனிப்பாரற்றும், செவிடன் காதிலே ஊதிய சங்கு போலவும் கிடக்கின்ற போது, இந்த வீதிப்பெயர் மாற்றம் தானா இப்போதுள்ள முக்கியமான விடயம் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள். பாரம்பரியமான எமதூரின் எல்லைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்ற வேளையில், எது எல்லை என்று தெரியாமலே அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லவிருப்பது போல, அதனைப்பற்றியெல்லாம் அக்கறை எடுப்பதற்கு ஆட்களில்லையே என்றும் சலித்துக்கொள்கின்றார்கள்.
ஊரின் பிரதானமான வீதிகளில் ஒன்றான ஆஸ்பத்திரி வீதியை வேறு பெயர்களைக்கொண்டு மாற்றுவதை விட, அந்தப் பெயர் அப்படியே தொடரவேண்டும் அல்லது பழைய ஆஸ்பத்திரி வீதி என்று மாற்றி வரலாறு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக இருக்கின்றது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வீதிப்பெயர் மாற்றத்தைக் கைவிடவேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
டாக்டர் என். ஆரிப்,
தலைவர் - பிறைட் பியுச்சர் பவுண்டேசன்.

0 comments :
Post a Comment