அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேச மக்கள் முகம் கொடுத்துள்ள அரசியல் நெருக்கடி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் பாண்டிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்கும் உரிமைக்கும் இருப்புக்கும் சவாலாக இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளார்கள்.
இதனை இங்குள்ள அனைத்து தமிழ் மக்களும் நன்குணர்வார்கள். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்து மாவட்ட தமிழ் மக்களை அவர்களிடம் அடகுவைக்கும் நடவடிக்கையில் திரைமறைவில் ஈடுபட்டுள்ளனர்.
காலம் காலமாக இங்குள்ள தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி வாக்களித்து கண்ட பயன் ஏதுமில்லை. இன்று கூட்டமைப்புக் குள்ளே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இங்குள்ள தமிழ் மக்கள் முஸ்லிம் பேரினவாதிகளால் பாதிக்கப்படும் வரலாறே தொடர்கதையாய் உள்ளது. இதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் போக்கும் துணையாகவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இன்னும் பத்து வருடங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்குமானால் இம்மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கள் பறி போய் விடும். வெறும் பத்திரிகை அரசியல் மட்டும் செய்துகொண்டு மக்களை ஏமாற்றும் அரசியலையே கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
என்றைக்கு தமிழரசுக்கட்சியை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் விலகியதோ அன்றைக்கே அச்சமூகம் உயர்ந்தது. இன்னும் பழைய பல்லவிகளை பாடிக்கொண்டு ஈழக்கனவில் மிதக்கும் கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் ஒரு அபிலாஷையைத் தானும் நிறைவேற்ற முடியாது.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதோடு பொருளாதாரத்தையும் மீளக்கட்டியெழுப்ப முடியும்.
இம்முறை இம்மாவட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி விட்டு எனக்கு அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு அனுமதி தந்தால் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை 10 வருடங்களுக்குள் மாற்றிக்காட்டுவேன். எதிர்வரும் தேர்தல் களில் அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பா ட்டில் தமிழ் மக்கள் களமிறங்க வேண்டும் எனவும் கூறினார்.

0 comments :
Post a Comment