கவிஞர் வேலழகனின் பவள விழாவினை முன்னிட்டு 'சந்தனக்காடு' எனும் சிறப்பு கவிதைத் தொகுப்பு நூலின் அறிமுக விழா

 த.நவோஜ்-

விஞர்.ஆ.மு.சி.வேலழகனின் பவள விழாவினை முன்னிட்டு 'சந்தனக்காடு' எனும் சிறப்பு கவிதைத் தொகுப்பு நூலின் அறிமுக விழாவும், பவள விழா நாயகரை கௌரவிக்கும் நிகழ்வும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

திருப்பழுகாமத்தில் பிறந்த கவிஞர்.ஆ.மு.சி.வேலழகனின் பவள விழாவினை முன்னிட்டு 37 தமிழ்க் கவிஞர்கள் பாடிய வாழ்த்துக் கவிதைகளோடு, கவிஞரின் சில கவிதைகளும் அடங்கிய சந்தனக்காடு எனும் சிறப்பு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கவிஞரின் பிறந்த ஊரான திருப்பழுகாமத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நூலினை மன்றத்தின் இணைச் செயலாளர் எஸ்.ஏ.ஸ்ரீதர் தொகுத்துள்ளார். அதன் பின்னர், நூலின் அறிமுக விழாவும், பவள விழா நாயகரை கௌரவிக்கும் நிகழ்வும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை தமிழ் - கலை, இலக்கிய மன்றத்தின் தலைவர் வ.சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெ.தினேஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக எழுத்தாளரும், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான மு.தவராஜா, கவிஞர். கறுவாக்கேணி முத்துமாதவன், மன்றத்தின் செயலாளர் ஆ.ஜெயச்சந்திரன், மதகுருமார்கள், கல்குடா வலயப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியர் து.கௌரீஸ்வரனின் நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற கலாசார இன்னிய அணியினரின் வரவேற்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

இதன்போது தமிழ்மொழி வாழ்த்தினை அடுத்து, வ.சின்னத்தம்பியினால் வரவேற்புரையினையும், தலைமையுரையினையும் நிகழ்த்தினார். வாழைச்சேனை தமிழ் -கலை, இலக்கிய மன்றத்தின் கடந்த கால செயற்பாடுகள் குறித்தும், கவிஞர். ஆ.மு.சி.வேலழகனின் பவள விழாவினைச் சிறப்பிக்கும் முகமாக நிகழும் இந்த விழா குறித்தும் பேசினார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளரும், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான மு.தவராஜாவினால் நூலையும், நூலாசிரியரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

மன்றத்தின் தலைவர் வ.சின்னத்தம்பி நூலின் முதல் பிரதியை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெ.தினேஸிக்கு வழங்கி வைத்;தார்.

நூலின் நயவுரையினை கவிஞரும், ஆசிரியருமான எ.த.ஜெயரஞ்சித் நிகழ்த்தினார், அதனையடுத்து பவள விழா நாயகரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது மன்றத்தின் தலைவர் வ.சின்னத்தம்பி மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்த, கவிஞர். கறுவாக்கேணி முத்துமாதவன் பாடிய வாழ்த்துப் பா மடலினை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெ.தினேஸ் வழங்கி வைத்தார்.

அதனையடுத்து பிரதேச செயலாளர் சிறப்புரையாற்றிய போது, கோறளைப்பற்று பிரதேசத்தில் ஏராளமான கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை யெல்லாம் இனங்கண்டு, இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என வாழைச்சேனை தமிழ் - கலை, இலக்கிய மன்றத்தினருக்கு வேண்டுகோள் விடுத்த அவர், பிரதேச மக்களின் கலாசாரம் விழுமியங்களைப் பேணவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், பாடசாலை மட்டத்திலிருந்தே இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வந்திருந்த அதிபர்களை வினயமாக வேண்டிக் கொண்டார்.

இறுதியாக பவள விழா நாயகர் ஏற்புரை நிகழ்த்திய போது, கடந்த யுத்த காலங்களில் 20 வருடங்களுக்கு மேலாக வாழைச்சேனையில் வாழ்ந்திருந்த காலகட்டம் பற்றியும், வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபை சாலையில் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அவர், வாழைச்சேனை தமிழ்-கலை, இலக்கிய மன்றத்தினருக்கு தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

விழாவினை மன்றத்தின் மன்றத்தின் செயலாளர் ஆ.ஜெயச்சந்திரன், விழாக்குழு ஏற்பாட்டாளர்களான பா.கணேசமூர்த்தி, க.ஜெகதீஸ்வரன், மு.ஜெயச்சந்திரன், திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், திருமதி.தவலெட்சுமி யோகேந்திரன், செல்வி.கே.விமலா, எஸ்.ஏ.ஸ்ரீதர் ஆகியோர். ஏற்பாடு செய்து நடத்தி முடித்தனர்.

தொடர்ந்தும் வருகின்ற காலங்களில் மன்றத்தின் மூலம் வாழைச்சேனை பிரதேசத்தில் பல கலை, இலக்கிய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்படவுள்ளதாக மன்றத்தின் செயலாளர் ஆ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் இலக்கிய வெளிதனில் பல எழுத்தாளர்களோடு சேர்ந்து பல கலை, இலக்கிய மன்றங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், 2013இல் தோன்றிய கலை - இலக்கிய அமைப்பான வாழைச்சேனை தமிழ் - கலை, இலக்கிய மன்றமானது கடந்த வருடம் தவத்திரு.தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :