ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினை வெற்றிக் கொள்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்ள நான் தயார். எனவே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றியினூடாக ஆட்சியினை நானே கைப்பற்றுவேன் என எதிர்க்கட்சிதலைவரும் ஐ.தே.க.தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி நாட்டிற்கு செய்த துரோகங்களில் முதன்மையானது. சரத் பொன்சேகாவிற்கு வழங்காத வாக்குரிமை தற்போது கே.பி.க்கு வழங்கப்பட்டுள்ளதாகும். எனவே, இந்த துரோகங்களுக்கு மக்களே முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
ஆட்சி மாற்றத்திற்கு யானை பலம் என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களுடனான மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன்போது குறித்த தேர்தலினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவை வெற்றிக் கொள்ளத் தயார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஐ.தே.க.வினால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று மக்கள் கூறினர். இதன் காரணமாக எமது கட்சியை விட்டு பலர் பிரிந்து சென்றனர். மேலும் சிலர் எம்மை மறந்து விட்டனர். எனினும் ஒரு சிலரே கட்சியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தனர்.
ஊவா தேர்தலின் முடிவினூடாக தற்போது மக்களுக்கு நம்பிக்கை எழுந்துள்ளது. இனிமேல் மக்கள் துன்பப்பட்டது போதும் ஊவா தேர்தலை வெற்றி கொண்டதை போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களினூடாக இந்த யுத்தத்திற்கு தயாராக வேண்டும்.
எனவே, குடும்ப ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை ஸ்தாபிக்க வேண்டும். அதேபோன்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து 17 ஆவது திருத்த சட்டத்தை மீள கொண்டு வரவேண்டும்.
தற்போது எனது இலண்டன் விஜயம் தொடர்பில் அரசு சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது.
எனினும் நாட்டின் உண்மையான துரோகி யார்? வீரர் யார்? என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாக்குரிமையை பறித்து விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பின்பு தலைவராக இருந்த கே.பி.என்ற குமரன் பத்மநாதனுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது நாட்டிற்கு செய்த துரோகமில்லையா?
அதேபோன்று ஐரோப்பிய நீதிமன்றில் புலிகளின் தடை நீக்கத்திற்கு எதிராக தலையிடாமை துரோகமில்லையா?
இந்நிலையில் நான் அரசிடம் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு இதுவரை ஜனாதிபதியோ அரசாங்கமோ பதிலளிக்கவில்லை எனவே இதிலிருந்து யார் துரோகி என்பது புலப்படுகிறது.
எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தது துரோகங்களில் முதன்மையானது என்றார்.
<வீரகேசரி>

0 comments :
Post a Comment