மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்முனையில் அபிவிருத்தி

அஸ்லம் எஸ்.மௌலானா-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் கல்முனை மாநகர முதல்வராக சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் நாளை ஒக்டோபர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

இவ்வைபவங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என அறிவிக்கப்படுகிறது.

நாளை வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

இதன்போது கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் ஒரு வருட பதவிக் காலத்தினுள் அவரது துரித முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் திறந்து வைக்கப்படவிருப்பத்துடன் அவரால் முன்னெடுக்கப்படவுள்ள சில புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சாய்ந்தமருதில் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மாநகர சபையின் பிரதான வரவேற்புக் கோபுரம் திறந்து வைக்கப்படவிருப்பத்துடன் சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் சுமார் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பீச் பார்க் பொழுதுபோக்கு பூங்காவும் திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் கல்முனை நகரில் ஐந்து கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்கத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இந்த ஐக்கிய சதுக்கத்தில் கேட்போர் கூடம், கடைத் தொகுதி, விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு, வாகனத் தரிப்பிடம், உணவகம், பொழுதுபோக்கு நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானமும் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேலும் கல்முனை நகரில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கு அதன் பிதா மகனான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை சூட்டி திறந்து வைக்கும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு இந்நூலகம் கல்முனை மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருதமுனை பொது நூலகத்தில் அமைக்கப்படவுள்ள பிரஜைகள் வள நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருப்பதுடன் நற்பிட்டிமுனை மணற்சேனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது நூலகமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :