இலங்கை முஸ்லீம்களின் பேரம் பேசும் சக்தியை மீட்டெடுப்புத ஊவா முஸ்லிம்களின் கைகளில்-முபீன்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை முஸ்லிம்களின் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றுக் கொள்வது பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்காளரின் கைகளிலேயே தங்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீன் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பதுளபிட்டியவில் 13-09-2014 நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த முபீன் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலே முஸ்லீம்கள் இன்று பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன தங்களது மார்க்க ரீதியான கடமைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகிறது.

முஸ்லீம்களின் அடிவயிற்றில் கை வைத்து வரும் பௌத்த தீவிரவாதிகள் இன்று முஸ்லீம்களின் ஷரீஆ சட்டத்திலும் கைவைத்துள்ளனர். நூற்றாண்டு காலமாக முஸ்லீம்கள் அனுபவித்து வரும் இச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று இன்று பொது பலசேனா கோஷமிட தொடங்கியுள்ளது.

இவ்வராஜகங்களையும் அநியாயங்களையும் இந்த அரசு கண்டும் காணாதது போல் நடந்து கொள்கிறது. இவ்வாறு முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் பேரினவாதிகள் கைவைப்பதற்கு யார் காரணம்? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

இதற்கு வேறு யாரும் காரணமல்ல முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இருந்து சமூகத்தை பணத்துக்கும் பதவிகளுக்கும் காட்டிக் கொடுத்த புல்லுரிவி அரசியல்வாதிகளே காரணம்.

நாட்டில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பலத்த தியாகங்களுக்கு மத்தியில் நமது மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் கட்டி எழுப்பினார். முன்னாள் ஜனாதிபதிகளான ரனசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர்களை நாட்டின் ஆட்சி தலைவர்களாக தீர்மானிக்கின்ற வல்லமை கொண்ட சமூகமாக இலங்கை முஸ்லீம்கள் சக்தி பெற்றனர். பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களின் அடிச்சுவற்றை பின்பற்றி தற்போதைய தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் மிக பலவீனமுற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடமேற்றும் பேரம் பேசும் சக்தியை 2002ல் மீண்டும் ஒரு தடவை நமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரூபித்துக் காட்டியது இது பேரினவாதிகளுக்கு பெரும் எரிச்சலை ஊட்டியது. ஆக முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் ஆற்றலை இல்லாமல் செய்ய திரைமறைவில் பேரினவாதிகள் திட்டமிட்டனர்.

இதே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டான பொது ஜன ஐக்கிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸை துண்டு துண்டாக உடைத்தது.

முஸ்லீம்களுக்குள்ளேய பல கட்சிகளை உருவாக்கியது. முஸ்லீம்களின் அரசியல் பலம் சிதறடிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டதின் விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எமது ஹலால் உணவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, பள்ளிவாயலை உடைக்கின்றனர், தாய்மார்களின் பர்தாவை இழுக்கின்றனர், பள்ளிக்குள் பன்றி இறைச்சியை வீசுகின்றனர், குர்ஆனை பழிக்கின்றனர் இறுதியாக ஷரீஆவில் கைவைக்க வந்துள்ளனர். இவ் ஆபத்துகளிலிருந்து முஸ்லிம் சமூகம் மீண்டெழ முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு அரசியல் ரீதியாக ஓரணியில் திரண்டு இழந்து போன பேரம் பேசும் சக்தியை மீழப் பெறவேண்டிய தேவை உள்ளது. அதற்கு முத்தாய்பாத்தான் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் இன்று ஓரணியில் இனைந்து ஊவாவிலே களம் இறங்கி உள்ளனர். மலையக முஸ்லிம் கவுன்ஷிலையும் இனைத்துக் கொண்டு இரட்டை இலையிலே போட்டியிடுகின்றனர். 

இலங்கை முஸ்லிம்களை ஒற்றுமைப் படுத்துவதற்கு ஊவா முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டி உள்ளது. ஊவா முஸ்லி;ம்கள் ஒற்றுமைப்படுவதன் ஊடாக எதிர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட முடியும்.

ஊவா மாகாண சபையிலே இழந்து போன உறுப்புரிமையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஊவா மாகாண சபை தேர்தலின் பின்னால் எல்லோரும் எதிர் பார்க்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே இலங்கையிலுள்ள 20 இலட்சம் முஸ்லீம்களை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சமூகம் இந்த நாட்டின் முஸ்லீம்களே என்ற பேரம் பேசும் வல்லமையை பெற்றுக் கொண்டு நாம் எதிர் நோக்கும் இன்னல்களிலும் சவால்களிலும் இருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் விடுபட ஊவா முஸ்லிம்களுக்குள் எற்படும் ஒற்றுமையே முதற்படியாக உள்ளது. ஆக ஊவாவிலே இரட்டையிலை வெற்றி பெற்றால் அது எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் வெற்றியாக அமையும். எனவே பதுளை மாவட்ட முஸ்லீம்கள் மிகப் பொறுப்புடனும் நிதானத்துடனும் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென முபீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :