TNA யில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தாய் கட்சி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே-அரியநேந்திரன் MP



த.நவோஜ்-

மிழ் தேசியக் கூட்டமைப்பானது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். இதில் கொள்கையில் இருந்து விலகிச் சென்ற ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையும், சித்தார்த்தனின் புளொட் அமைப்பையும் இணைத்தமைக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் பெரும் எதிர்ப்பினையே தெரிவித்திருக்கின்றோம். எமது ஆட்சேபனையை எப்போதும் தெரிவித்துக் கொண்டே இருப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தாய்க்கட்சியாக விளங்குவது எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாகும். தந்தை செல்வா அவர்கள் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து மலையக மக்களின் நலனுக்கு பொன்னம்பலம் அவர்கள் சார்பாக இல்லாமையால் அவர் அதிலிருந்து வி;லகி 1949ம் ஆண்டு டிசெம்பர் 18ம் திகதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்ததாக வரலாறு இருக்கின்றது.

இந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது 64 வருடங்களைக் கடந்து 65வது வருடத்தில் காலடி வைக்கும் நிலையில் இதன் செயற்பாடானது பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளது. எமது கட்சியினால் பல்வேறு பட்ட அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்றது. ஏனெனில் இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் இருந்து இன்று வரைக்கும் ஒரு இனவாத அரசாங்கமாகவே இருந்து வந்தன.

அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஜன ஐக்கிய முன்னனியாக இருக்கலாம் இவ்வாறான அரசாங்கத்தில் இருந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தந்தை செல்வா அவர்கள் அகிம்சைப் போராட்டங்களை நடாத்தினார். பல்வேறு பட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்டதன் விளைவாக 1976 மே 14ம் திகதி வட்டுனக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர் எமது தமிழரசுக்கட்சி 1972ம் ஆண்டு தமிழர் கூட்டணியாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் வட்டுனக்கோட்டைத் தீர்மானத்தின் போது அது தமிழர் விடுதலைக் கூட்டணியாக தோற்றம் பெற்றது. இந்த வட்டுக் கோட்டைப் பிரகடணத்திலே வடகிழக்கு எமது தமிழர்களின் தாயகம், சுதந்திர தமிழிழத்தை நிறுவுவது தான் எமது நோக்கம் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்கீகாரம் கொடுக்கும் முகமாக 1977ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் எமது மக்கள் முன் இந்த தீர்மானத்தினை முன்வைத்தார்கள்.

அதில் எமது மக்களால் சிறப்பான முறையில் ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னரே எமது தந்தை செல்வா அவர்கள் இறந்து விட்டார். அதன் பிறகு அந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 36 இயக்கங்கள் தோற்றம் பெற்று பல்வேறுபட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். இதில் 1986ம் ஆண்டு வரை மற்றை இயக்கங்கள் காலத்தில் கட்டாயத்தில் வேறு பாதையில் சென்று ஸ்தம்பிதம் அடைந்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார்கள். சிலர் அரசுடன் இணைந்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு விடுதலை இயக்கம் மாத்திரம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையும் போராடிக் கொண்டிருந்தது இது வரலாறு. இக்காலகட்டத்தில் 2001 பெப்ரவரி மாதம் 21ம் திகதி தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டக்களப்பு கிழக்கி;லங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் சில ஆர்வலர்களின் முயற்சியால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட சின்னம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் இதில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அப்போது எமது கட்சியில் ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் இருந்தார். அப்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தீர்மானம் மேற்கொண்டார்கள்.

அப்போது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் விலகிச் சென்றார். இதற்கிடையில் 2002ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அப்போது இருந்த ரணி;ல் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் பின் 2004ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாவது தேர்தலை சந்தித்தது இதில் ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் அமைப்பின் சின்னத்தினை தரமுடியாது என மறுத்தார். அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய சின்னமாகிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமாகும்.

இந்தத் தேர்தல் இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியற்ற அமைப்பு என ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் வழக்குத் தாக்கல் செய்து அதில் நாம் வெற்றி பெற்று தேர்தலிலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றோம். ஆனால் நாம் முழுநேர அரசியலை மேற்கொள்ளவில்லை. 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்துவிட்டது என அரசாங்கம் அறிவித்ததில் இருந்தே நாம் முழு நேர அரசியல் பணியை மேற்கொண்டோம். அது வரை எமது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த அந்த அமைப்பே அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டது.

அதன் பிற்பாடு 2011ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் எம்மை விட்டு விலகிச் சென்ற ஆனந்தசங்;கரி அவர்களும், சித்தார்த்தன் அவர்களும் எம்முடன் இணைந்தார்கள். எமக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் இது வரைக்கும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மூவரும் அதற்கு இணப்பாடு தெரிவிக்கவில்லை என்பதே உண்மை.

இவர்கள் இருவருக்கும் நாம் பெரும் ஆட்சேபனையை தெரிவத்தோம். அதாவது தமிழ் தேசி;யக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக வளர்ந்த கட்சி இதில் ஒரு கொள்கையாளர்கள் இணைந்து கொள்ள வேண்டுமே தவிர இடையில் வந்து அவர்கள் சொருகிக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் அங்கீகாரம் கொடுக்கப்படாத இந்த இரண்டு அமைப்புகளையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என பகிரங்கமாக தெரிவித்தோம்.

ஆனால் சர்வதேசத்திற்கு ஒற்றுமையை காட்ட வேண்டும் என்பதற்காக அவர்களும் இப்போது இணைந்திருக்கின்றார்கள். இவ்வாறுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு இருக்கின்றது. இவ்வாறு அனைவரையும் அணைத்து சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. அந்த தேவையின் நிமிர்த்தமாகத்தான் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பலர் இருக்கின்றார்கள். பல கட்சிக்கும் யாப்பு, கொள்கை இருக்கின்றது. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்தும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. அவற்றுக்கு தங்கள் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாநாடு, கிளைகள் அமைப்பதற்கு உரித்து இருக்கின்றது. அவற்றை மற்ற மற்ற கட்சிகள் மேற்கொண்டும் வருகின்றன.

அந்த வகையில் தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் கொள்கை இருக்கின்றது. யாப்பு இருக்கின்றது. இதற்கென ஒரு மாவட்ட அமைப்பு, பிரதேச அமைப்பு, தொகுதி அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலாச்சார அமைப்பு என பல அமைப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அல்ல இதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியில் அங்கம் வகிப்பதன் காரணமாக இந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதன் காரணமாக அதிலும் நாம் அங்கம் பெறுகின்றோமே தவிர நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாம் செல்ல முடியாது இதுதான் விதி. இந்த அமைப்பானது எமது ஒற்றுமைக்காகவும், தேர்தலுக்காகவும் இணைக்கப்பட்டது. தற்போது இதனைப் பதிய வேண்டும் என்று கூறுகின்றார்கள் அப்படி பதிவு இடம்பெற்றதன் பின்னர் அதற்கான விதி ஏற்படுத்தப்படலாம். அதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டதிட்ட ஒழுக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் அங்கம் வகிக்கின்றவர் இன்னுமொரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்க முடியாது. சட்டரீதியாக அது பிழை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தாலும் கூட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அனுமதி இன்றி வேறு ஒரு கட்சி சார்பில் பிரச்சாரமோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது. இவை சட்டரீதியான சில பிரச்சனைகள்.

எமது இளைஞர்கள் எமது கட்சியின் கொள்கை பற்றி அறிந்திருக்க வேண்டும். தந்தை செல்வா அவர்களை தீர்க்கதரிசி என்கின்றார்கள். தந்தை செல்வா அவர்கள் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பிக்கும் போது இஸ்லாமியர்களையும் இணைத்துக் கொண்டார். அவர் யாரையும் தமிழ் பேசும் மக்களாக கருதவில்லை. அனைவரையும் தமிழர் என்ற ரீதியிலேயே கருதினார். அதனால் தான் இனம் என்பது ஒன்று மதம் என்பது மூன்று என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் கொடியில் மூன்று நிறங்களைக் கொடுத்தார்.

ஆனால் தற்போது சில முஸ்லீம் அரசியல் வாதிகளினால் இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு கொண்டுவரப்பட்டு நாங்கள் கூட தமிழ் பேசும் மக்கள் என்றே கருதப்பட்டுவிட்டோம். எம்மால் கூட இன்று தமிழர் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம். நாம் தமிழ் பேசும் மக்கள் அல்ல அனைவரும் தமிழர்கள் இதனை நாம் உணர வேண்டும். நாம் தமிழ் பேசும் மக்கள் என்று தமிழனே கூறுகின்ற கேவலம் இந்த நாட்டில் இருக்கின்றது.

இந்த அரசியல் அவ்வாறு பேச வைக்கின்றது. ஆனால் நாம் தமிழர்கள். தற்போது நாங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த அனுபவ முதிர்ச்சி பெற்ற 65 வருட கால பின்னனி கொண்ட கட்சியில் இருக்கின்றோம். ஆனால் இடைநடுவில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டது. ஏனெனில் இந்த இலங்கை அரசாங்கம் அவர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்ததன் காரணமாக நாம் இன்று பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம்.

இளைஞர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் எமது மக்களின் தியாகத்திற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். இன்று எமக்கான ஒரு அரசியல் பலம் தேவையாக இருக்கின்றது. இன்று இந்த அரசியல் பலம் எஞ்சியிருக்கின்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. இராஜதந்திர ரீதியாக பலப்படுத்தி மக்களின் பலத்தினால் எமது பிரச்சனை சர்வதேச மயப்படுத்தி சர்வதேச ரீதியில் எமது பிரச்சனை விசாரிக்கப்பட இருப்பதற்கும் விசாரணை நடடத்தப்படுவதற்கும் காரணம் எமது மக்கள் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தந்த ஆணைதான்.

இதை விடுத்து எமது பிரதியமைச்சர் முரளிதரன் சொல்லுகின்ற அமைச்சர் பதவியையோ அல்லது முன்னாள் முதலமைச்சர் சொல்லுகின்ற முதலமைச்சர் பதவியையோ அல்லது அருண்தம்பிமுத்து, சாணக்கியன் கூறுகின்ற அபிவிருத்தியையோ எமது மக்கள் வேண்டவில்லை. அப்படி எமது மக்கள் நினைத்திருந்தால் இந்த சிங்கள இனவாத அரசிற்கு அடிவருடிகளாக எமது வடகிழக்கு தாயகம் சென்றிருக்கும். தற்போது வடகிழக்கு தாயகம் கிழக்கு மாகாண சபை, வடக்கு மாகாண சபை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அண்மையில் முன்னாள் முதலமைச்சர் கூறியிருந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட பிழையின் காரணத்தால் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற முடியாமற் போய்விட்டது என்று. உண்மையில் எமது மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டது. ஆட்சியைக் கைப்பற்றி மண்முனைக்கு பாலம் கட்டுவதற்கோ அல்லது காப்பட் வீதி போடுவதற்கோ அல்லது விளையாட்டு மைதானங்களை நிரப்புவதற்கோ அல்ல நாம் எமது மக்களிடம் கேட்டது ஒன்று தான் வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் இருக்கின்றதா இல்லையா என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று கூறியிருந்தோம். அதன் நிமித்தமாகத்தான் எமது மக்கள் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆணையைத் தந்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை என்பது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் வடகிழக்கு இணைந்த நிலத்தில் எமது வடகிழக்கு மக்களால் நிர்வாகிக்கப்படும் எங்களை நாமே ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தினைப் பெறுவது தான் எமது நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது போராடிக் கொண்டே இருக்கும். எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதில் கிடைத்த வெற்றி என்னவென்றால் அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் பியசேனாவை மட்டும் தான் அவர்களால் பிரிக்க முடிந்தது.

இதன் பின் பலரை பிரிப்பதற்கு சதிகளை மேற்கொண்டது. முஸ்லீம் காங்கிரஸ், ஜேவிபி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகள் அரசாங்கத்தின் சதிகளால் பிரிக்கப்பட்டன. ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சியைப் பிரிப்பதற்கு பல சதித்திட்டங்கள் மேற்கொண்டுள்ளது. அது எமக்கும் தெரியும் எமது கட்சிக்குள் இருப்பவர்களும் அதற்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதும் நாம் அறிந்ததே. அதற்கும் நாம் பல மாற்று வியூகங்களை வைத்திருக்கின்றோம்.

இவ்வாறு எமது கட்சியை உடைப்பதற்கு பல சதி வேலைகள் இடம்பெறுவதன் காரணமாக எமது இளைஞர்களே எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இதனைப் பலப்படுத்தினால் மாத்திரமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :