தமிழர்களுக்கான சிங்களவர்களின் குரலை அரசு தடுக்கின்றது: மனோ

சிங்கள மக்கள், தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் குரல் எழுப்ப ஆரம்பிக்கும் இந்த நிகழ்வுதான் இன்றைய தினத்திலே பிரதான நிகழ்வாகும். இதுதான் உண்மையான தேசிய ஐக்கியத்துக்கான வழியாகும் என்று கூறியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழர்களுக்கான சிங்களவர்களின் குரலை அரசாங்கம் தடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நண்பர் ஹெர்மன் குமார தலைமையிலான தேசிய மீனவர் ஒத்துழைப்பு சம்மேளனம், தென்னிலங்கையிளிருந்து சிங்கள இனத்தை சார்ந்த மீனவர்களை, விவசாயிகளை, தொழிலாளிகளை, தேரர்களை, சிவில் செயற்பாட்டாளர்களை வடக்கே அழைத்து சென்று, அங்கே இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளது. 

தேசிய மீனவர் ஒத்துழைப்பு சம்மேளனம், தமிழ் கட்சிகளுடன் இணைந்து நடத்தவிருந்த அமைதி ஆர்ப்பாட்டத்தையும், ஊர்வலத்தையும் தடுக்க போலிஸ், நீதிமன்றம் சென்று தடை உத்தரவை வாங்கியது. எனினும் அந்த போராட்டம் ஒரு எழுச்சி கூட்டமாக யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்துள்ளது. அங்கே ஏனைய கோஷங்களுடன் தமிழ் மக்களின் காணிகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பாக குரல் எழுப்பப்பட்டுள்ளது. 

அதனால்தான் இதை இந்த காணிக்கொள்ளைக்கார, கடத்தல்கார அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தடையுத்தரவை கேட்டு வாங்குகிறார்கள். 

ஆனால், உண்மைகளை நீண்ட காலத்துக்கு மூடி போட்டு மறைத்து வைக்க முடியாது. இந்த உண்மைகளின் எதிரே இன்று இந்த அரசாங்கம் ஆடைகளை இழந்து நிர்வாணமாகியுள்ளது. யாழ்ப்பாணம் போய் சிங்கள மக்களே இவர்களை அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் துன்பங்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நிகழ்வுகளை தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் ஊடகங்களும் ஆதரிக்க வேண்டும். இது எங்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கையுடன் வெகுவாக உடன்படுகிறது. 

நாங்கள் இதை பிரதானமாக எப்போதும் செய்கிறோம். வேறு பணிகள் இருந்ததால் என்னால் யாழ்ப்பாணம் வந்து, நண்பர் ஹெர்மன் குமாரவின் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனது சார்பாக எங்கள் ஊடக செயலாளர் பாஸ்கரா கலந்து கொண்டார். இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். இந்த அரசாங்கம் எத்தனை முறை நீதிமன்ற தடை உத்தரவுகளை வாங்கும் என நாம் பார்ப்போம். 

கடந்த வாரம் இந்த அரசு தென்னாபிரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி ரமபோஷாவை அழைத்து, அழைப்பை ஏற்று வந்தவரை, ஒரு சுற்றுலா பயணி என எள்ளி நகையாடி அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளது. அவர் இனி இந்நாட்டுக்கு மீண்டும் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. தென்னாபிரிக்கா, ஆபிரிக்க கண்டத்தில் செல்வாக்குள்ள பெரிய நாடு. இந்த செய்கை மூலம் ஆபிரிக்காவின் ஆதரவு முடிந்தது. 

நேற்று சர்வதேச விசாரணைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதவுரிமை ஆணையகததில் இலங்கை விவகாரம் எடுக்கப்படும் போது ஆபிரிக்க ஆதரவு இல்லை. அளுத்தகமை எரிப்பின் பின் மத்திய கிழக்கு ஆதரவும் இல்லை. 

மேற்குலகின் ஆதரவு எப்போதும் இல்லை. படிப்படியாக நண்பர்களை எல்லாம் இலங்கை இழந்து வருகிறது. இதுதான் இந்நாட்டின் தோல்வியடைந்துள்ள வெளிவிவகார கொள்கை. இதன் மூலம் இன்று இந்த நாடும் ஒரு தோல்வியடைந்த நாடாக வேகமாக மாறி வருகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஒன்றில் பதவி விலக வேண்டும். அல்லது வெளிவகாரம் தொடர்பாக தான் ஒரு பொம்மையே தவிர, எந்த வித அதிகாரமும் தனக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :