இலங்கையில் அனைத்து துறையும் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நிலை தொடருமேயானால் லிபியா, ஈராக் போன்று எமது நாடும் மாறிவிடும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி எச்சரித்தார்.
மேலும் வடக்கில் காணி அபகரிப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க பொலிஸாரிற்கு முடியுமாயின் ஏன் அளுத்கமவில் பொது பல சேனாவின் கூட்டத்தை தடை செய்ய முடியவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
தற்போது ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளர் பதுளை மாவட்டத்தினுடைய பிரதிநிதித்துவத்தை குறைத்து மொனராகலை மாவட்டத்தினுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். இது அசாதாரணமான செயலாகும். ஐ.தே. கட்சி மீதான அச்சத்தின் காரணமாகவே பதுளையின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடமே காணப்படுகிறது. நீதிமன்றத்தை மதிக்காமலேயே அரசாங்கம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்துள்ளது. இதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டமை சிறந்த உதாரணமாகும்.
இதேவேளைஇ தற்போது நாட்டின் அனைத்து துறையும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைக்கு சென்றால் அதிபர்படை வீரர்இ தூதரகத்துக்கு சென்றாலும் படை வீரர் என அனைத்திலும் இராணுவ வீரர்கள் காணப்படுகின்றனர்.
இந்நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதேபோன்று கிராம உத்தியோகத்தர்களின் நிலையும் அவ்வாறே காணப்படுகிறதுடன் இன்னும் சில நாட்களில் இராணுவ உடையிலேயே கடமைக்கு வரும் நிலை ஏற்படும். மேலும், வடக்கில் காணி அபகரிக்கப்படுவதற்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பொலிஸாரினால் தடை விதிக்க முடியுமாயின் ஏன் அளுத்கமவில் பொதுபல சேனாவின் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியவில்லை.
எனவே, நாடு இராணுவ மயப்ப டுத்தப்பட்டு வருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment