ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் வடமாகாண சபை முதலமைச்சராக பதவி வகிக்க முடியுமென்றால் ஏன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் வடமாகாண சபை ஆளுநராக பதவி வகிக்க முடியாது? எனக் கேள்வியெழுப்பும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளாத நிலையில் அரசு ஏன் கூட்டமைப்பின் யோசனைகளை கேட்க வேண்டுமென்றும் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய மாகாண ஆளுநரை நியமிக்கும் அதிகாரமும் பதவி வகிக்கும் ஆளுநரின் பதவி நீடிப்பை மேற்கொள்வதற்குமான அதிகாரம், நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி உள்ளது.
அதற்கமையவே ஜனாதிபதி வடமாகாண ஆளுநராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ளார். அத்தோடு வடமாகாணத்தை சார்ந்த பெரும்பாலான அரச ஊழியர்கள் சந்திரசிறி ஆளுநராக பதவி வகிப்பதை விரும்புகின்றனர்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு என்பது வெறுமனே அரசியல் உள்நோக்கங்கள் கொண்டதாகும். கிழக்கு மாகாண சபை ஆளுநரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட போது கூட்டமைப்பினர் எதிர்க்கவில்லை. மெளனமாகத்தான் இருந்தார்கள்.
இன்று வடமாகாண சபை ஆளுனரின் பதவிக்காலத்தை நீடிக்கும் போது மட்டும் அவர் இராணுவத்தை சேர்ந்த ஓய்வு பெற்றவர் என்பதால் எதிர்ப்பதாக கூறுகின்றனர்.
இவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். ஓய்வு பெற்ற நீதியரசரான சி.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண சபை முதலமைச்சராக பதவி வகிக்க முடியுமென்றால் ஏன் ஓய்வு பெற்ற இராணுவத்தை சேர்ந்த சந்திரசிறி ஆளுநராக பதவி வகிக்க முடியாது.
அத்தோடு, கூட்டமைப்பினர் அரசாங்கத்தோடு எந்த விதமான இணக்கப்பாட்டையும் கண்டு அதற்கமைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இவ்வாறானதோர் நிலையில் அரசாங்கம் ஏன் கூட்டமைப்பினரின் யோசனைகளைக் கேட்க வேண்டும் அதற்கான அவசியமே கிடையாது.
ஆளுனரை நியமிப்பதும் பதவிக்காலத்தை நீடிப்பதும் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரத்தை தட்டிப்பறிக்கவோ, விமர்சிக்கவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
VK

0 comments :
Post a Comment