
சர்வதேசத்தின் முன்னிலையில் அரசாங்கத்தை குற்றவாளியாக்கும் வகையில் இலங்கையில் இடம்பெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படும் அனைவரும் தேசத்துரோகிகளே என்று தெரிவிக்கும் அரசாங்க பங்காளிக் கட்சிகள், நாட்டின் சட்டதிட்டங்களை மீறியும் நீதிக்கு முரணாகவும் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளை கண்டித்து வடக்கில் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையிலேயே இக் கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்;
அரசாங்கத்தை குற்றவாளியாக்கும் முயற்சியில் இன்று நாட்டில் பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச சந்திப்புக்களையும், இலங்கைக்குள் ஆர்ப்பாட்டங்களையும் சிவில் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் மக்களின் உரிமைகள் என்ற கொள்கையிலேயே முப்பது வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் போராட ஆரம்பித்தார்கள். இறுதியில் தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்காது தமது சுயநலத்திற்காக ஆயுதமேந்தி போராட ஆரம்பித்ததன் விளைவு என்னவானது என்பதை இன்று அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
எனினும் வடக்கில் மீண்டும் ஒருமுறை போராட்டத்ததை ஆரம்பிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து புலிகளை ஆதரிக்கும் இங்குள்ள சிவில் அமைப்புகடகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முயற்சிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகள் என்ற பெயரில் சர்வதேசத்திற்கு தேவையான வகையில் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பும் முயற்சியினையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டிற்கு எதிராக சட்டங்களையும் நீதியையும் மதிக்காது செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தை தூண்டும் இவர்களை கைது செய்து இவர்களின் அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி
இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவிக்கையில்;
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பிரிவினைவாதக் கொள்கையினை வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி தனி நாட்டினை வடக்கில் உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது ஆர்ப்பாட்டங்களோ, புரட்சிகளோ அல்ல. அவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டியதே இப்போதைய தேவையாக உள்ளது. ஆயினும் அரசாங்கம் அதற்குத் தயாராக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இடம்கொடுக்காது செயற்படுகின்றது.
நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக எவரும் செயற்பட்டால் அது குற்றமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் குற்றத்தினையே தற்போது செய்து வருகின்றது. இதை உடனடியாக இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக செயற்பட்டு தமக்கென சட்ட திட்டங்களை மீறி செயற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு உள்நாட்டிற்குள் மக்களை தூண்டி விடுவது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
விகே
விகே
0 comments :
Post a Comment