நான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளேன். என்னை கைது செய்தாலும் அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பில் இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்துவேன் என தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி., அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு செயலாளரே உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
மங்கள எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் குழப்பகரமான சூழலுக்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம் தமிழ் இனத்தவர் மிக கொடூரமாக தாக்கப்படுகின்றமைக்கும் சிங்கள மக்களின் மத்தியில் இனவாதத்தினை பரப்பி நாட்டில் அமைதியை சீரழிக்கின்றமைக்கும் அரசாங்கமே காரணம்.
இன்று அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைகளுக்காக புலனாய்வு பிரிவினை பயன்படுத்தி பல அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றனர். நான் வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மைகளேயாகும்.
அதேபோல் நான் குறிப்பிட்ட கருத்துக்கள் பாதுகாப்பு பிரிவின் இரகசியங்களோ அல்லது இந்த நாட்டை பாதிக்கும் இரகசிய தகவல்களோ அல்ல. இவை இந்த நாட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்களும் அதற்கு துணை போகும் நபர்களின் பெயர்களுமேயாகும்.
இதை வெளியிடுவது இந்த நாட்டை நேசிப்பவன் என்ற வகையில் எனது கடமையாகும். எனது கடமையினையே நான் செய்துள்ளேன்.
கேள்வி: நீங்கள் வெளியிட்ட கருத்தினால் இப்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதே?
பதில்: எனது கருத்துக்கள் நான் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை. புலனாய்வு பிரிவின் தகவல்களை வெளியிட்டதனாலோ அல்லது பாதுகாப்பு செயலாளர் செய்யும் தவறுகளை வெளியிட்டதனாலோ இவர்கள் என்னை விசாரிக்க போவதில்லை. அவர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட்டதே இப்போது இவர்களின் பிரச்சினையாக உள்ளது. எனது கருத்துக்கள் தொடர்பில் என்மீது எந்தவொரு விசாரணையினை மேற்கொண்டாலும் அதற்கு முகம்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை.
கேள்வி: புலனாய்வு பிரிவு தொடர்பில் நீங்கள் வெளியிட்ட செய்திகளுக்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா..?
பதில்: இந்த அரசாங்கம் செய்யும் கடந்த காலங்களில் செய்த குற்றங்கள் தொடர்பில் சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. புலனாய்வு பிரிவினை பயன்படுத்தி இந்த அரசாங்கம் பெரிய குற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது.
அளுத்கம இனக்கலவரம் மட்டுமல்ல இன்றும் சில சம்பவங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பு செயலாளரின் கட்டளையுடன் இடம்பெற்றுள்ளது. என்னைக் கைது செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பிலான இன்னும் பல உண்மைகளை வெளியிடுவேன். இந்த நாட்டில் அப்பாவி மக்களை கொடுமைப்படுத்தும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது.
கேள்வி: பாதுகாப்பு செயலாளர் மீது வெளிப்படையாகவே குற்றம் சுமத்துவது ஏன்?
பதில்: நாட்டில் இராணுவ ஆதிக்கம் அதிகரிப்பதற்கும் தீவிரவாத அமைப்புகள் பலப்படுவதற்கும் பாதுகாப்பு செயலாளர் காரணம் என நான் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே தெரிவித்து விட்டேன். இப்போது குறிப்பிடுவது புதிய விடயமல்ல. இன்று பொதுபலசேனா என்ற பௌத்த அமைப்பு தலைதூக்கவும் அவர்கள் சிறுபான்மை இனத்திற்கு அடக்கு முறைகளை பயன்படுத்தவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே காரணம். அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டது என்பதே உண்மை. இவ் அமைப்பிற்கான உதவிகளையும் பாதுகாப்பினையும் பாதுகாப்பு செயலாளரே செய்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பொதுபலசேனா அமைப்பினை இவர் சந்தித்துள்ளார். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயலையும் பொதுபலசேனாவுக்கு உதவிகளையும் பாதுகாப்பினையும் வழங்குவது பாதுகாப்பு செயலாளரே. அவர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகளையும் இவரே செய்து கொண்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த இனிமேல் இடமளிக்கக்கூடாது. சர்வதேச சக்திகள் அரசாங்கத்திற்கு எதிராக பலமடைந்து விட்டன. இனிமேல் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்கு முறைகளை கையாள்வது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இது சிங்கள மக்களையே பாதிக்கும் என்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

0 comments :
Post a Comment