அரசியல் தீர்வைக் காண்பதற்கு விரைவில் கதவு திறக்கப்படும்- சம்பந்தன் நம்பிக்கை

“தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு விரைவில் ஏதுமொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனை அடைவதற்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். அதேவேளை, ஐ.நா. மற்றும் அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் இலங்கைத் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.”

- இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

“அரசு – கூட்டமைப்பு இரு தரப்பு பேச்சில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சிக் குழுவில் உள்ள அரச தரப்பினர் திருப்திகரமாக நடக்கும் வரையில் நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றமாட்டோம்” என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி சந்தியப் பிரமாணம் செய்து அடுத்த நாள் அவருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற முதல் பேச்சில் தமிழர்களுடைய பிரச்சினை சம்பந்தமாகப் பேசப்பட்டிருக்கின்றது. எனவே, தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு விரைவில் ஏதுமொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனை அடைவதற்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பதற்குரிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தொடர்பில் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சி சம்பந்தமாக ஒரு தெளிவு எதிர்வரும் வாரங்களில் வெளிப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இலங்கை அரசு பிடிவாதமாக இருக்காமல் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் இலங்கைத் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எமக்கு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது வடக்கு மாகாண சபையின் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் அங்கு நடக்கும் இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வுகள் காணப்படும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கில் வெல்ல வைத்த தமிழ் மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் குழப்ப முயல்வதே அரசின் நோக்கம் என்றும், இதற்கு நாம் துணைபோகக்கூடாது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் – முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க அம்மாகாண முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆதரவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தட்டிக்கழித்து விட்டது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, தற்போது முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடரவேண்டும் என்றும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழமாக சிந்தித்து முடிவொன்றை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :