SM-
ஒரு காலத்தில் செய்கின்ற, செய்விக்கின்ற வடிவில் ராசாவை ஆக்குகின்ற ராசி கூட தமிழ் பேசும் இனங்களிடம் காணப்பட்டது. ராசாவையும் உருவாக்கி ராசதானியையும் அழகு பார்க்கின்ற இயலுமை மலையகத்துக்கும் கிழக்குக்கும் இருந்தது. ஆட்டிப் படைக்கின்ற வல்லமை வடக்குக்கும் கூட இருந்தது.தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக வரக் கூடிய எத்தகைய முன் மொழிவுகளின் போதும் காவிக்காரர்கள் சுமாரான எதிர்ப்புகளை ஏற்படுத்தித் தடுத்து நிறுத்திவிட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்தன.
இன்று மலையகம், கிழக்கு வெறும் ஆள்கணக்களவில் இருப்பினும் அரசனையும் அரசாங்கத்தையும் தீர்மானிக்கவும் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுமான பலத்தினை சமகால அரசில் தட்டிக் கொண்டவர்கள் பிக்குகளே.
சமய மனோபாவ காய்நகர்த்தல்கள் ஊடாக அரசிலும் அரசுக் குள்ளும் ஊடுருவிக் காணப்படுகின்ற பிக்குகள் அரசியலென்றும் இயக்கங்கள் என்றும் பௌத்த மதம் என்றும் பேரினவாதம் என்றும் தேசிய வாதம் என்றும் அரங்கில் அகலக் கால் விரித்து ஆட்டிப் படைக்கின்றனர். வணங்கி வழிபடுவதான பாரம்பரிய முறைமையை தங்களுக்கே உரித்தானதாகக் கொண்டுள்ள பிக்குகள் மன்னிப்புக் கோரல் உட்பட முக்கியஸ்தர்கள் பலரை மண்டியிடச் செய்து விட்டனர்.
சுக்கு நூறாக்கும் சமய மனோபாவம்
சமய வாதத்தை விடப் பொல்லாதது சமய மனோபாவம். பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இலங்கையில் எத்தகைய சமய மனோபாவமாக இருந்தாலும் பிற சமயங்களின் எண்ணங்களையும் அபிலாஷைகளையும் சுட்டெரித்து விடக் கூடிய வாய்ப்புகளுண்டு. தங்களுக்கிருக்கின்ற வரப் பிரசாதத்தைப் பயன்படுத்தி அளவோடன்றி அளவு கடந்து செயலாற்ற முனைகையில் செம்மையாக இருப்பவையும் சீர்குலைந்து போக இடமுண்டு.
பௌத்த மத மனோபாவத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படையான சமய ரீதியானதும் சடங்கு ரீதியானதுமான அநேக கிரியைகள் கிண்டலடிக்கப்படுவதான பிரமையுண்டு. வாக்குகளைக் கணக்குப் போடுகின்ற அரசியல் சிலரது போக்குகளுக்கு முழுக்குப் போடத் தவறிக் கொண்டிருக்கிறது. சமய மனோபாவங்களுக்கு வாய்ப்பளிப்பது பரஸ்பர புரிந்துணர்வு, சமூக பொருளாதார முன்னேற்றம் , இனங்களுக்கு இடையிலான சகவாசம், சௌஜன்யம், சகோதரத்துவம், சாந்தி போன்ற அனைத்தையும் சுக்கு நூறாக்கி விடும்.
ராவயவின் எச்சரிக்கை
இந்தப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட காலமாக முஸ்லிம்களுக்கு ஹலால் பதார்த்தம், சிங்களவர்களுக்கு ஹராம் என்ற சுலோகத்துடன் பொதுபலசேனா இயக்கம் இன்று வரை நின்றாடிக் கொண்டிருப்பதை நாடறியும். அதேபோன்று மிருக வதை அல்லது கால்நடைக் கொலை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் சிஹல ராவய இயக்கம் பணியாற்றிக் கொண்டுள்ளதையும் நாடறியும்.
சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் . கால் நடைகளை கொலை செய்வது தொடர்பாக தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு நாட்டிலிருந்து முக்கியஸ்தர்கள் எவருமே செவி சாய்க்கவில்லை. தாங்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைக்கு ஜனாதிபதியும் அரசுமே முழுப் பொறுப்பு . இலங்கையில் கால்நடைகளைக் கொலை செய்வதற்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில் தீவிர நடவடிக்கையில் குதிக்கப் போகிறோம் எனக் குறிப்பிட்டார்.
தங்களது கோரிக்கைக்குப் பதிலளிக்குமாறு ஏற்கனவே 18 மாத கால அவகாசம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டாயிற்று. அதிகாரத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அலட்சியமாக உள்ளனர். ஜனாதிபதி ஒரு கரிசனையுள்ளவராக இருந்திருந்தால் தங்களது இயக்கம் கண்டியிலிருந்து ஆரம்பித்த போராட்டம் கொழும்பை வந்தடைவதற்கு முன்பே தக்க நடவடிக்கை எடுத்திருப்பார். இது தொடர்பில் எத்தகைய பேச்சுக்களிலும் தாங்கள் ஈடுபடப் போவதில்லை, தங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய தார்மீக உரிமை சம்பந்தப்பட்டோருக்குக் கிடையாது என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது.
முன்னரே கூறப்பட்டவாறும் எதிர்பார்த்த வாறும் சிஹல ராவய பிக்கு ஒருவர் சாகும் வரை உண்ணா விரதம் இருந்தமை தொடர்பிலும் உயிரை விட முற்பட்டமை தொடர்பிலும் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகமிருந்த ராவயவின் பிக்கு காரணமாக மூன்றாவது நாளில் பதற்றம் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட பிக்கு கோட்டை பொலிஸாரால் பின்னர் விடுவிக்கப்பட்ட போதும் கால் நடைகளைக் கொலை செய்தல் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலும் கோஷத்திலும் தணிவு தென்பட்டிருக்கவில்லை. கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து நிலைமைகள் மோசமாகின. குவிந்திருந்த பொலிஸாரிடையே சிவில் ஆடையில் இருந்த ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. பிக்குகளால் வீதிகளில் பயணத்தை மேற்கொள்ள முடியாதவாறு வழியடைப்பும், தடையரணும் செய்யப்பட்டன.
சத்தியாக் கிரகம்
தமது கோரிக்கைக்கு எழுத்து மூலமானதொரு பதில் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் அது கால் நடைகளை கொல்வது தொடர்பான எத்தகைய வாசகங்களையும் கொண்டிராததால் ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. தாங்கள் ஏற்கத் தக்க விதமாக அரசு பதிலளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. தாங்களே சக்திமிக்க வலுவானவர்கள் என்பதைக் காண்பிக்க பிக்குகள் முயற்சித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கால் நடைகளைக் கெ õல்வதை தடை செய்ய வேண்டும் என்பதற்காக பெப்ரவரி 9 ஆம் திகதி தமது பயணத்தை ஆரம்பித்த ராவய பிக்குகள் 16 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்ததாகவும் தேகத்தை வருத்தி மூன்றாவது நாளாக (18 ஆம் திகதி ) இடை விடாத சத்தியாக்கிரக மூடாக போராட்டத்தைத் தொடர்வதாகவும் சட்ட வாக்கத்தினைக் கொண்டு கால் நடைக் கொலைகளைத் தடை செய்ய வேண்டும் என்ற அமைதியான தமது கோரிக்கை கருத்திற் கொள்ளப்படவில்லை என்றும் சத்தியாக்கிரக களத்தில் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் 17 ஆம் திகதி களத்திற்கு சமுகமளித்த பொலிஸ் அதிகாரியிடம் , ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டு பிக்குகளினால் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் உயிரைத் தியாகம் செய்யும் வகையில் தீக் குளிப்பதற்காக பிக்கு ஒருவர் தயாராக இருப்பதாகவும் கடிதத்தின் அடிக்குறிப்பு மூலம் அச் சுறுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்தே வீதி மறிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை முயற்சிக்கு முன்வந்த பிக்குவைக் கைது செய்து கெ õழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர்படுத்திய கோட்டை பொலிஸார் குறித்த பிக்குவின் தற்கொலை முயற்சி ஈடேறியிருந்தால் அது மக்கள் அமைதியின்மைக்கும், இன வன்முறைக்கும் இட்டுச் சென்றிருக்கும் என்று தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பிக்கு மற்றுமொரு தற்கொலை முயற்சிக்கு உந்தப்படும் சாத்தியம் இருப்பதால் இவர் பிணையில் விடுவிக்கப்படக் கூடாது என்றும் பொலிஸார் மஜிஸ்ட்ரேட்டை கேட்டுக் கொண்டனர்.
ஜனாதிபதியின் கடிதம்
எவ்வாறாயினும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதி மொழியைத் தொடர்ந்து சாகும் வரை உண்ணா விரதம் இருந்த ராவயவின் மூன்று பௌத்த பிக்குகள் தங்களது உண்ணா விரதத்தைக் கைவிட்டனர். ஜனாதிபதி தனது கடிதத்தில் கால் நடைகள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என உறுதியளித்திருந்ததாக ராவயவின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறிருந்தும் சம்பந்தப்பட்ட பிக்குகள் ஜனாதிபதியின் உடன்பாட்டை ஏற்க மறுத்தனர். நீராகாரம் எடுப்பதற்குக் கூட மறுத்தனராம் . உடல் நிலை கஷ்டமான நிலையை எட்டியது . நிலைமை மோசமடைந்தால் மருந்தும் கூட பலிதமாகாது என்ற நிலை உணர்த்தப்பட்டது.
தர்க்கமும் கருத்தும்
இப் பேர்ப்பட்ட விதமாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கலாமா ? அவ்வாறு செய்வது உரிமையா ? என்று கேட்டதற்குப் பதிலளித்த பிக்கு தாங்கள் சாகும் வரை உண்ணா விரதமிருப்பது பிழையானதா என்று கேட்டார். தேசத்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது போனால் இது போன்று செயற்படுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறப்பட்டது.
நாங்கள் ஆயுதங்களுடன் போராட வில்லை . இது இறுதித் தருணம். ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். இது சிறிய விடயமல்ல. நாங்கள் பசுவதை தொடர்பாக மாத்திரமன்றி சகல வகையான மிருகக் கொலைகளுக்கும் எதிரானவர்கள். தாய்ப்பாலுக்கு அடுத்ததாக பசும் பாலைப் பார்க்கிறோம். அதனை பிள்ளைகளுக்கும் கொடுக்கிறோம். பசுவை கொல்வது ஒருவரது சொந்தத் தாயைக் கொல்வதற்கு ஒப்பானது என்று தர்க்கித்தனர்.
இறைச்சிக்காக எருதுகளை காளைகளை அறுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா ?என்று கேட்டதற்கு பசு என்ற பதப் பிரயோகம் ஆண், பெண் இன கால் நடை வகைகளை உ ள்ளடக்குவதாக தெரிவிக்கப்பட்டது. எவரும் எதனை சாப்பிட விரும்புகின்றனரோ அதனைச் சாப்பிட முடியும் .ஆனால், மிருகத்தைக் கொல்ல வேண்டாம் என்றே கூறுகிறோம் என்று கூறிய பிக்குகள் பசுக்களையும் காளைகளையும் இலங்கையில் கொல்ல வேண்டாம் என்றே தெரிவிக்கிறோம் என்றனர்.
முஸ்லிம் நோக்கு
எவ்வாறாயினும் இறைச்சிக்காக மாடறுப்பதை முஸ்லிம்கள் அதனைக் கொல்வதாகப் பொருட்படுத்தவில்லை. பிக்குகளின் வாதம் எது எப்படியிருப்பினும் வெட்டுதல் , அறுத்தல் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் காணப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது. குறித்த கால்நடையை வதைப்படுத்தாமலும் நோகடிக்கச் செய்யாமலும் உரிய முறையாக இறைச்சிக்காக ஹலாலான முறையில் அறுப்பதை இஸ்லாம் கோடிட்டுக் காண்பிக்கிறது.
உரிய முறையில் அறுத்தல் நிறைவேற்றப்படுகையில் வலியை கால் நடை உணராத வகையில் உணர்விழந்து செல்கிறது. மிகக் கூரான கத்தியை பயன்படுத்தி கால் நடையின் தொண்டையை அறுப்பது ம், வைத்த கத்தியை வெளியே எடுக்காமல் முன்னும் பின்னுமாக நகர்த்தி அறுவையை நிறைவு செய்வதிலும் வலியின் கடுமைத் தன்மை குறைவடையச் செய்யப்படுகிறது.
கால்வாய் நோய்
எது எவ்வாறாக இருந்த போதிலும் ராவயவின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பேரணி, உண்ணாவிரதம் , தீக் குளிப்பு முயற்சி , சாலை மறியல் , ஜனாதிபதியின் உறுதி மொழி யாவும் ஒட்டு மொத்தமாக கால்வாய்களிலும் சுதந்திரமாக நகர்ந்து திரிந்த கால்நடைகளை கால் , வாய் நோய் பிரகடனத்துக்குள்ளாக்கிற்று. இந்த நோய்க்குள்ளாகியுள்ள கால் நடைகளை வெட்டுவதற்குப் பதிலாக தடுப்பூசி ஏற்றப்படும் என்ற செய்தி வெளியானது.
ஜனாதிபதியின் கடிதத்தின் மூலமான உறுதி மொழி கால் நடைகளுக்கு கால் வாய் நோயை ஏற்படுத்திய அற்புதத்தை எண்ணி சிலர் திகைக்கின்றனர். முதற் கட்டமாக அநுராதபுரம் , புத்தளம் , திருமலை , அம்பாறை, வவுனியா போன்ற ஐந்து மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நோய் பிற மாவட்டங்களுக்கும் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவித்தலும் திணைக்களத்தின் கருத்தும்
பிக்குகளின் உண்ணா விரதத்ததோடு ஆரம்பமாகியிருப்பதாக உணரப்படுகின்ற இந்த நோய் மிருக சுகாதாரத்துக்கான உலக ஸ்தாபனத்தின் துணையுடன் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருந்து துரத்தியடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மிருக உற்பத்தித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி , ஆட்டிறைச்சி விற்பனை, மிருகங்களையோ அல்லது உற்பத்திகளையோ ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லல் தடை செய்யப்பட்டுள்ளது.
நோய் பீடித்துள்ளதாகக் கருதப்படுகின்ற ஐந்து மாவட்டங்களுக்கும் பொருந்துகின்ற இந்த விடயத்தில் சகல இறைச்சி விற்பனைக் கடைகளும் மூடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மேலும் கருத்துக் கூறுகையில்; இப் பேர்ப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் போன்ற நாடுகளில் மிருகங்கள் கொல்லப்படுகின்ற போதிலும் அதே அணுகு முறையை இலங்கையில் பின்பற்ற முடியாது என்றும் நோய் பரவுவதை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் தொற்றுக்குள்ளாகியுள்ள கால் நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுவரையில் 82,000 கால் நடைகளின் தலைகளில் தடுப்பூசி ஏற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இறைச்சி கிடைக்கத் தக்க நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றாலும் வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளும் அதிகாரிகள் நிலைமைகளை அவதானித்து அடுத்த மூன்று மாத காலத்துள் தடையை நீக்கவும் இடமுண்டு என்றனர்.
பலரதும் கேள்வி
பறவைக் காய்ச்சல் நோய் வந்த போது கூட கோழி இறைச்சி சாப்பிடுதல் தொடர்பான விழிப்புணர்வே ஏற்படுத்தப்பட்டது. மாறாக அதன் விற்பனையோ அதனை அறுப்பதனையோ எவரும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது வரையில் 84 கால் நடைகள் இறந்துள்ளதாகவும் 3,364 கால் நடைகளும் பசுக்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்ற தருணத்தே இது பற்றி அறிவிப்பதற்காக பிக்குகளின் உண்ணா விரதம் வரை அரசு காத்திருந்ததா என்ற ஒரு பலமான கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆதங்கம்
முஸ்லிம்களின் இறைச்சிக்காக மாடறுக்கும் விற்கும் உரிமை குறித்த தடைப்படுத்துகை மூலம் மீறப்படுவதாகக் கூறப்படுகிறது. தங்களது அடிப்படை உரிமைகளுக்கு வேட்டுவைக்கும் இத்தகைய இடையூறுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாக ஒரு பிரிவினரால் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தண்டனைக் கோவையின் பிரிவுகளான 291 (ச்) 300, 301, 485 போன்ற பிரிவுகள் மீறப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற மஜிஸ்ட்ரேட்டின் உத்தரவுகள் பிக்குகளால் அசட்டை செய்யப்பட்டுள்ளன.
இதனையும் மீறி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இது நீதித் துறையை அவமானப்படுத்திய செயலாகும். நாட்டில் நிலவும் அமைதிச் சூழலுக்குக் கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.
முஸ்லிம்களின் சமய நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்களை கொச்சைப்படுத்துகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தைத் தூண்டிவிடுகின்றனர். பௌத்த தர்மத்துக்கு குந்தகம் ஏற்படும் விதமாக புத்தரால் கூறப்படாத பிழையான எண்ணங்களையும் மக்கள் மத்தியில் விதைக்கின்றனர். புத்தரும் அவரை பின்பற்றுவோரும் தீக்குளிப்பதையோ தற்கொலை புரிவதையோ ஏற்க வில்லை.
எது எப்படியிருப்பினும் வரக் கூடிய காலம் சமயப் பழக்க வழக்கங்கள், அனுஷ்டானங்கள் , கிரியைகள், உணவு முறைகள் போன்றன சமய ரீதியான ஊடுருவல்களுக்குள்ளாகி இனங்களுக் கிடையிலான பதற்றத்தை தோற்றுவிக்காது என எப்படிக் கூறுவது .
0 comments :
Post a Comment