MM-
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லர்க்கானா நகரத்தில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் நேற்றிரவு நுழைந்த கும்பல் ஒன்று அங்குள்ள தர்மசாலையைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.
அதன் பின் அருகில் இருந்த இந்து மதத்தவர் ஒருவரின் வீட்டை அந்தக் கும்பல் சுற்றி வளைத்தது. அங்கு வசித்துவரும் மனிதனே புனித அல்குர்ஆனை எரித்ததாக அவர்கள் கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாப்புப்படையினர் எச்சரிக்கை குண்டுகளையும், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசி கலவரக் கும்பலை அங்கிருந்து கலைந்து போகச் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜின்னாபாக் மற்றும் சில பகுதிகளில் துணை இராணுவத்தினரின் கடும் கண்காணிப்புடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்களது புனித அல்குர்ஆனை அவமதித்ததை அறிந்து வெகுண்டெழுந்த மாணவர்களும், உள்ளூர் மத நம்பிக்கையாளர்களுமே ஜின்னாபாகில் இருந்த முக்கிய இந்துக் கோவிலுக்குத் தீவைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புனித அல்குர்ஆனை எரித்தவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என்றும் லர்க்கானாவில் வாழும் இந்து சமூகம் மற்ற எந்த சமூகத்தினரின் மத நம்பிககையையும் அவமதித்ததில்லை என்றும் உள்ளூர் இந்து பஞ்சாயத்துத் தலைவரான கல்பனா தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment