த.நவோஜ்-
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றக்கோரி, மட்டு, மங்களராம விகாரையில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் எதிர்ப்புப் பேரணி விகாராதிபதி அம்பேபிட்டிய சுமணரத்தின தேரர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த புலுகுணாவ, கெவிலியாமடு பிரதேச சிங்கள் மக்கள், பட்டிப்பளை பிரதேச செயலாளரால் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், அவரை இடமாற்றுமாறு கோரியுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றள்ளது.
இப்பேரணியில் சிங்களராவய தேசிய சங்கத்தின் உபதலைவர் ராஜகீய பண்டித பூலத்தே சுதம்ம தேரர், பொதுச் செயலாளர் ராஜகீய பண்டிதஹெல்லே பஞ்சாலோக தேரர் ஆகியோருடன் சிங்கள ராவய தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் கெவிலியாமடு புலுகுணாவ பிரதேச சிங்கள மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள், யுத்தத்திற்கு முன்னர் இப்பிரதேசங்களில் வசித்ததாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து யுத்தம் முடிவுற்றதும் 06 வருட காலமாக பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுவரையில் தங்களுக்கு கிரம சேவகர் சான்றிதழ், வதிவுச் சான்றிதழ் போன்றன வழங்கப்படாமல் இருப்பதாகவும் இதற்கு பிரதேச செயலாளர் முட்டுக்கட்டையதாக இருப்பதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டப் பேரணி இடம்பெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டப் பேரணியானது மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் ஆரம்பித்து மாவட்டசெயலகம் வரை சென்றது பின்னர் அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம் சாள்ஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பின்னர் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி வில்வரெட்ணம் அவர்களும் அழைக்கப்பட்டு பேச்சுக்கள் இடம்பெற்றன. முடிவில் தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்க அதிபர் கவனம் செலுத்துவதாகவும் கிராம சேவகர் சான்று தேவைப்படுவோருக்கு தாம் அதனை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதன்பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. மகஜரில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பெரும்பான்மையின மக்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும். இம்மக்களுக்கான வதிவிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும், கிராம அலுவலகரின்; சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் மகஜரில் முன்வைத்தனர்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 106 பெரும்பான்மையினக் குடும்பங்கள் வசிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment