வெலிவேரிய துப்பாக்கிச்சூட்டுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும் - ரணில்

வெலிவேரிய - ரத்துபஸ்வெல பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டிருக்கின்றன. மக்கள் சக்தி என்றால் என்னவென்பதை அரசாங்கம் இன்று உணர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெலிவேரிய சம்பவத்தினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கூறுகையில்,

நாட்டில் நடைபெறும் இராணுவ ஆட்சியினை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டும். வெலிவேரிய சம்பவத்தில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியது யார்? இதற்கு ஏன் அரசாங்கம் பதில் கூறாது மௌனம் காக்கின்றது. சர்வ மதங்களும், சகல இனத்தவரும் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்துவதால் ஆட்சியினை நடத்தமுடியும் என அரசாங்கம் நினைத்தால் அது முட்டாள்தனமாகும்.

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் தீர்வினைக் காண முன்னர் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து மக்களையும் தாக்குவதனால் இறுதியில் மக்களே ஆட்சியினை மாற்றியமைக்க நேரிடும்.

அரசாங்கம் செய்யும் தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக தேர்தலையும் அபிவிருத்தி கண்துடைப்புக்களையும் செய்கின்றனர். இவற்றினைச் செய்வதன் மூலமாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது. எனவே, இந்த குடும்ப அரசியலில் இருந்து நாட்டினையும், மக்களையும் வெகுவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சி விடுவிக்கும்.

இதற்கு மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகம் தொடருமானால் மக்கள் அதற்கு சரியானதொரு தண்டனையினை பெற்றுக் கொடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -