மலையகத்தில் படித்த இளைஞர்களின் வெற்றிக்கு தலைநகரில் வாழும் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மனோ கணேசன்


லையகத்தின் இரண்டு பிரதான மாவட்டங்களான கண்டி, நுவரெலியா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் படித்த பட்டதாரி இளைஞர்களை ஜனநாயக தேர்தல்கள் மூலம் பதவி அதிகாரத்துக்கு கொண்டு வர விரும்பும் எமது முயற்சிக்கு தலைநகரத்தில் வாழும் தமிழர்கள், குறிப்பாக வர்த்தக துறையில் பரிணமிக்கும் மலையக தமிழ் நண்பர்கள் ஒத்துழைத்து உதவிட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்

முன்னணியின் பிரச்சார செயலாளரும், மாநகரசபை உறுப்பினருமான கே.ரி. குருசாமியின் ஏற்பாட்டில் "தலைநகர நண்பர்கள் ஒன்றுகூடல்' நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் நடைபெற்றது. முன்னணியின் தவிசாளர் வி.ஜெயபாலன், நிதி செயலாளர் எஸ். கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்த ஒன்றுகூடலில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த ஒன்று கூடல் என் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றது. நான் நான்கு பேருடன் இந்த கட்சியை ஆரம்பித்து கொழும்பிலே களமிறங்கிய முதல் நாளில் எனக்கு நம்பிக்கையுடன் மாலையிட்ட என் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள்.

தொடர்ந்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிக்கையுடன் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த என் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள். என் மீது திட்டமிட்டு அவதூறு சேற்றை அள்ளி எவர் எறிந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து, அவதூறு சொன்னவர்களையே நிராகரித்த என் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள். 

நமது கட்சியில் நேரடியாக அங்கத்துவம் பெற்று கட்சி அரசியல் செய்ய நேரம் இல்லாவிட்டாலும் கூட, நேர்மையான அரசியல் செய்யும் மனோ கணேசன், தமிழ் மக்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வார் என உறுதியுடன் என்னை நம்பும் என் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள். என்னை விட்டு யார் போனாலும், உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் என்று என் கரங்களை பற்றி அழுத்தி சொல்லும் என் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த சந்திப்பு மெய்யாகவே அர்த்தமுள்ள நண்பர்கள் ஒன்றுகூடல்தான். அதற்காக நமது கட்சியின் பிரச்சார செயலர், மாநகரசபை உறுப்பினர் தம்பி குருசாமியை, இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தமைக்காக பாராட்டுகின்றேன்.

இங்கு எனக்கு இன்னொரு விடயமும் மகிழ்ச்சியை தருகின்றது. நான் உரையாற்றுவதற்கு முன்னர் உங்களில் பலர் சபையிலிருந்து உங்கள் கருத்துகளை தெரிவித்தீர்கள். 

இந்த கருத்துகளில் மிக, மிக பெரும்பாலானவை, மலையக கல்வி அபிவிருத்தியை பற்றியதுதான். மலையகத்தில் இருந்து இங்கே வந்து உழைப்பில் முன்னேறி வாழும் உங்களில் அநேகமானோர் மட்டும் அல்ல, இங்கு வந்துள்ள ஒரு சில வடக்கை பின்னணியாக கொண்ட நண்பர்கள்கூட மலையக தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தியை பற்றியே பேசுகின்றீர்கள். இதைவிட இனவுணர்வுகொண்ட எனக்கு எது மகிழ்ச்சியை தரப்போகின்றது?

இன்று எமக்கு இரண்டு ஆயுதங்கள் உள்ளன. ஒன்று, வாக்கு. அடுத்தது, கல்வி. இதை நாம் தமிழர்கள் இந்த காலகட்டத்தில் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இது புரியாவிட்டால் நமது கதி அதோ கதிதான்.

வாக்குரிமை இல்லாத அனைவரும் வாக்காளர்களாக நம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்குரிமை இருக்கின்ற அனைவரும், தேர்தல் அன்று வாக்காளர் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். எனக்கு வாக்களியுங்கள். என்னைவிட தகுதியானவர் இருந்தால் அவருக்கு வாக்களியுங்கள். யாருக்காவது கட்டாயமாக வாக்களியுங்கள். அதுதான் முக்கியம்.

அடுத்தது கல்வி. பின்தங்கிய ஏழை, நடுத்தர வர்க்க தமிழ் பிள்ளைகளின் கல்வி. குறிப்பாக, மலையக கல்வி. மலையகத்திலிருந்து தலைநகருக்கு வந்து உழைத்து வாழும் வர்த்தக சகோதர்கள், தொழில் அதிபர்கள், ஊழியர்கள் மலையகத்தின் கல்வி நிலையை பற்றி சிந்திப்பது எனக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. 

மலையகத்தில் இருந்து கொழும்பு வந்து புது நாகரீகம் கற்றவுடன் மலையகமாவது, மண்ணாவது என பிறந்த மண்ணை நீங்கள் மறக்கவில்லை. தலைநகரிலே சொந்த உழைப்பால் முன்னேறி வருகின்ற உங்களுக்கு, தாயக மண்ணான மலைநாட்டு தோட்டங்களில் உழைத்து கொண்டிருக்கும் நமது மக்கள் தொடர்பாக அக்கறை இருக்கின்றது என்பதை நீங்கள் எடுத்து காட்டி வருகின்றீர்கள். அங்கே காலம் காலமாக உழைக்கும் நம் சமூகம் மலையக மண்ணுக்கு உரமாகவே போககூடாது என நினைக்கின்றீர்கள்.

மலையக கல்வி வளர்ச்சி தொடர்பிலே நீங்கள் மன்றங்களாகவும், கழகங்களாகவும், சங்கங்களாகவும் உங்களை அமைப்புரீதியாக கட்டமைத்துகொண்டு பணியாற்றுவதை எதிர்கால வரலாறு பதிவு செய்யும். பெருந்தலைவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை நீங்கள் தன்னலமின்றி ஆற்றுகின்றீர்கள். 

உங்கள் அமைப்புகளை அரசியல் கலப்பு இல்லாமல் நீங்கள் செய்யுங்கள். அதை நான் வரவேற்கின்றேன். அதேவேளை ஒரு வாக்காளராக, பொறுப்புள்ள பிரஜையாக, மலையக மண்ணை நேசிக்கும் மைந்தர்களாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிடும் தலைமையை மலையகத்தில் ஏற்படுத்த நீங்கள் விளைய வேண்டும்.

பல்வேறு எதிர்பார்ப்புகள் உங்களுக்கு, எங்களுக்கு இருந்தாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் ஒரு மட்டத்திற்கு மேலே செயல்பட முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும். 

ஆகவே உங்கள் பணிகளை நீங்கள் ஆற்றும் அதேவேளையில், மலையகத்தில் புதிய படித்த தலைமைக்கு வழி ஏற்படுத்தி விடுங்கள். அந்த தலைமை வளர்ந்து ஒரு காலத்தில் முழு மலையகத்தையும் தலைமையேற்கும் காலம் வரும். 

அப்போது நான் இருப்பேனோ, இல்லையோ எனக்கு தெரியாது. உயிரோடு இருந்தாலும் அரசியலில் இருப்பேனோ தெரியாது.ஆனால் இளைஞர்களாகிய நீங்கள் இருப்பீர்கள். ஆகவே, இன்று திட்டமிட்டு பிற்படுத்தப்பட்டுள்ள மலையகம் எழுச்சி பெற்று வாழ வழி செய்வோம்.

இன்றைய புதிய உலகின் புதிய நவீன சிந்தனை போக்கை முன்னெடுக்கும் தலைமை மலைநாட்டின் உருவாக நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய படித்த சிந்தனையாளர்களின் கரங்களுக்கு மலையகத்தின் தலைமை மாறவேண்டும். இந்த மலையக மறுமலர்ச்சி மாற்றத்தை தலைநகரில் வாழும் மலையக இளைஞர்கள் இனவுணர்வுடன் முன்னிருந்து உறுதி செய்ய வேண்டும். இதை தவிர மலையக விடிவிற்கு வேறு வழியே கிடையாது

இந்த கொள்கையை நமது ஜனநாயக மக்கள் முன்னணி இன்று முன்னெடுக்கின்றது. நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலே படித்த பட்டதாரி இளைஞர்களை நாம், இதற்காகவே எதிர்வரும் மாகாணசபை தேர்தலிலே களமிறக்குகின்றோம்.(vk)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -