நபி வழியில் நமது நோன்புப்பெருநாளை கொண்டாடுவோம்.முபாறக் அப்துல் மஜீத், கபூரி


ரு மாதகாலம் பகற்காலங்களில் நோன்பு நோற்ற மக்களுக்கு இறைவனால் கிடைக்கப்பெற்ற சந்தோசமான வெகுமதிதான் ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் நோன்பு பெருநாளாகும். 

நோன்பு என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த முஸ்லிம்கள் மீதும் கடமையாக இருந்த போதும் அவர்களுக்கு நோன்பு பெருநாள் இருந்ததாக காணவில்லை.

 காரணம் நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த போது மடமைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மத்தியில் பல பெருநாட்கள் இருந்ததை கவனித்த நபியவர்கள் நோன்பு, மற்றும் ஹஜ் பெருநாட்களை அறிமுகப்படுத்தி இது முஸ்லிம்கள் நமக்கான பெருநாட்கள் என கூறினார்கள். 

இதன் மூலம் இந்த இரண்டு பெருநாட்களும் ரசூலுள்ளாஹ்வின் சமுதாயத்தைச்சேர்ந்த முஸ்லிம்களுக்கான பெருநாள் என்பது தெளிவாகிறது.

ஒரு மாதம் உணவுகளை கட்டுப்படுத்தி நோன்பு பிடித்த மக்களுக்கு இறைவன் உடனடியாக தருகின்ற வெகுமதியாகவே இந்த நோன்பு பெருநாள் அமைகின்றது. அந்த வகையில் இந்தப்பெருநாளை இறைவனுக்கு நன்றி சொல்லத்தக்கதாகவும், நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாகவும் ஆக்கி;க்கொள்ள வேண்டும்.

ரமழான் மாதம் முடிவுற்று ஷவ்வால் தலைப்பிறை கண்டது முதல் நோன்புப் பெருநாள் ஆரம்பிக்கிறது. பிறை கண்டது முதல் நபியவர்கள் தக்பீர் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஹதீத்களில் காணக்கிடைக்கிறது. பெருநாளை தீர்மானிக்கும் பிறை தேசங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது சர்வதேச பிறையை பார்த்து பெருநாளை தீர்மானிக்க வேண்டுமா என்பது நவீன கால கருத்து வேறுபாடுகளாகும். 

மக்காவின் பிறையை வைத்து பிறையை தீர்மானிப்பதன் மூலம் உலகளாவிய முஸ்லிம்கள் ஒரே நாளில் பெருநாளை கொண்டாட முடியும் என்பது நமது கருத்தாக இருப்பினும் இக்கருத்தை நடைமுறைப்படுத்தும் சூழ்நிலை இன்னமும் நமது நாட்டில் வராததால் நமது நாட்டு முஸ்லிம்கள் எந்த நாளை பெருநாளாக தீர்மானிக்கின்றார்களோ அந்த நாளை நாம் அனைவரும் பெருநாளாக கொண்டாடுவோம். 

அதனை விடுத்து ஒரு ஊரில் சர்வதேச பிறை இன்னொரு ஊரில் கனிப்பு பிறை மற்றுமொரு ஊரில் மக்கா பிறை என்பது தவிர்க்கப்பட வேண்டும். 'முஸ்லிம்கள் நீங்கள் தீர்மானிப்பதுதான் பெருநாள் தினமாகும்' எனும் நபிகளாரின் அழகிய கருத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

உலகளாவிய முஸ்லிம்கள் இந்தப்பெருநாளை தாம் விரும்பிய முறையில் கொண்டாடுவதை நாம் கண்டாலும் பொதுவாக பெருநாள் தினத்தன்று எவ்வாறு நபியவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து அதன்படி நடப்பது இறைவனின் பொருத்தத்தை தரும்.

பெருநாள் தினத்தன்று புத்தாடை அணியும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதோடு அதனை செயலிலும் காட்டியுள்ளார்கள். புத்தாடை எனும் போது அது விலையுயர்ந்த ஆடையாக இருக்க வேண்டும் என பலரும் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பல ஏழைகள் தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ புத்தாடை அணியாமல் இருப்பதை நாம் காண்கிறோம். 

நமது நாட்டின் இன்றைய பொருளாதார நிலைமைகளின் படி ஓர் ஆண் 150 ரூபாவுக்கு சாதாரண சேட்டும் 200 ரூபாவுக்கு சாரமும் வாங்கக்கூடிய நிலை உள்ளது. இது ஒரு நாள் சாப்பாட்டுக்குரிய பணமாகும். ஒரு சாதாரண பிச்சைக்காரன் கூட ஒரு நாளைக்கு 500 ரூபாவுக்கு மேல் தேடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடை வாங்குவது என்பது கஷ்டமான ஒன்றல்ல.

இன்னும் சிலர் நோன்பு முழுவதும் சதக்கா, ஸக்காத் என பெற்று விட்டு பெருநாள் தினத்தன்று வேண்டுமென்றே பழைய கந்தலை கட்டிக்கொண்டு வருவதை காண்கிறோம். அத்தகையவர்கள் தம்மை தாமே ஏமாற்றுவதோடு அடுத்தவர்களையும் ஏமாற்றவதுடன் இறைவனுக்கு நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் அத்தகையவர்களுக்கு அழகாக விளக்க வேண்டும்.

ஆக புத்தாடை என்பது விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை. அதே நேரம் ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கேற்ப ஆடை அணிவது அவசியமாகும். ஏனெனில் 'நிச்சமாக இறைவன் தனது அடியான் மீது தான் புரி;ந்துள்ள அருட்கொடையின் அடையாளத்தை அவன் மீது காண விரும்புகின்றான்' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே ஒரு கோடீஸ்வரன் விலையுயர்ந்த ஆடை அணிந்தால் அதனை நாம் விமர்சிக்க முடியாது. அதே நேரம் அவன் கஞ்சத்தனமாக நடந்து கொள்ளவும் கூடாது. நிச்சயம் அவனது வசதிக்கேற்ப அவனது ஆடையும், ஏனையவைகளும் இருக்க வேண்டும் என்பது என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

நோன்பு பெருநாள் தினத்தன்று இலேசான உணவை சாப்பிட்டு விட்டு காலையில் தொழுகைக்குப்போவது சுன்னத்தானதாகும். அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது, அள்ளாஹ்வின் தூதர் (ஸல்), நோன்பு பெருநாள் தினத்தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்படமாட்டார்கள், அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி 953.

சிலர் நினைக்கலாம் மாதம் முழுவதும் உண்ணாமல்த்தான் இருந்தோம். இப்போது மட்டும் உண்ணாமல் தொழுதுவிட்டு வந்து உண்டால் என்னதான் குறையப்போகிறது? என. ஆனால் இவ்வாறு நினைப்பது நபிவழிக்கு முரணானதாகும்.

இப்னு அப்பாஸ், ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) கூறியதாவது, நபி (ஸல்) காலத்தில் நோன்பு பெருநாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை. தொழுகைக்குப்பிறகுதான் உரையும் அமைந்திருந்தது. –புகாரி 959

நபி(ஸல்) எழுந்து முதலில் தொழுதார்கள். அதற்குப்பின் மக்களுக்கு உரையாற்றினார்கள். நபியவர்கள் உரையாற்றி முடித்ததும் அங்கிருந்து கிளம்பி பெண்கள் பகுதிக்கு சென்று பிலால் அவர்களது கையை தாங்கலாக கொண்டு பெண்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது பிலால் (ரழி) தமது ஆடையொன்றை விரித்துப்பிடிக்க அதில் பெண்கள் தம் தர்மத்தை இட்டுக்கொண்டிருந்தனர். –புகாரி 961

இதன் படி ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொழுகையை நடத்தி விட்டு பெண்களுக்கு தனியாக உபதேசம் செய்வது சுன்னத்தானதாகும். இந்தக்காலத்தில் ஸ்பீக்கர் வசதிகள் இருப்பதால் உரை அனைவரையும் சென்றடையம் என்பதால் அதிலும் குற்றமில்லை. ஆனாலும் பெண்களுக்கு தனியாக உபதேசம் செய்வது சுன்னத்தானதாகும். உபதேசம் என்ற பெயரில் மக்களை அலுக்க வைக்காமல் ஒரு சி நிமிடங்களுள் முடித்துக் கொள்ள வேண்டும்.

'ஒருவரின் தொழுகை நீளமாகவும், உரை சிறியதாகவும் இருப்பது அவரின் அறிவைக்காட்டும்' என நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். அதன் படி தொழுகை 15 நிமிடங்கள் என்றிருந்தால் உரை 10 அல்லது 12 நிமிடங்களுக்குள் அடங்க வேண்டும். இது விடயத்தில் நமது கதீப்மார் இன்னமும் இந்த ஹதீதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

உம்மு அத்திய்யா கூறியதாவது, பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட்டுச்செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப்பெண்களையும் புறப்படச்செய்ய வேண்டுமெனவும் கட்டiயிடப்பட்டிருந்தோம்.

 எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூட புறப்பட செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் ஆண்களுக்குப்பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும், தூய்மையையும் எதிர் பார்ப்பார்கள். –புகாரி 971.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கியிருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஆண்கள் பெண்கள் என அனைவரும் திடலுக்கு தொழ போக வேண்டுமென்பதையும் ஆண்களும் பெண்களும் சத்தமாக தக்பீர் சொல்ல வேண்டும் என்பதையும் சத்தமாக துஆச்செய்ய வேண்டும் என்பதையும் விளங்குகிறோம்.

ஆக, ஆண்களுக்கு பின்னால் உள்ள பெண்களுக்கு ஆண்களின் பிராhத்தனை கேட்டுள்ளது என்பதன் மூலம் சத்தமிட்டும் பிரார்த்திப்பது சுன்னத்தானது என்பதை புரிகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட்டுச்செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் கைத்தடி எடுத்துச்செல்லப்பட்டு தொழும் திடலில் அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக – சுத்ராவாக) நட்டு வைக்கப்படும். அதை நோக்கி நபியவர்கள் தொழுவார்கள். – புகாரி 973

திடல் போன்ற வெளி இடங்களில் தொழும்போது நபியவர்கள் கம்பை அல்லது ஈட்டியை அல்லது ஏதாவது பொருளை தமக்கு சுத்ராவாக தடுப்பாக வைத்து தொழுதுள்ளார்கள். 

ஏனைய தொழுகைகளை பள்ளிவாயலினுள் தொழும்போது இவ்வாறு கம்பை நாட்டியதாக சொல்லப்படவில்லை. ஆனால் இன்று சிலர் பள்ளிவாயலுக்குள் சுத்ரா என்ற பெயரில் மீஸான் கட்டை போன்ற சில கட்டைகளை வைத்துள்ளமை பித்அத்தானதாகும். நபியவர்கள் தமது பள்ளிவாயலுக்குள் இவ்வாறு சில கட்டைகளை வைத்து விட்டு அவற்றை சுத்ராவாக பயன்படுத்துங்கள் என காட்டித்தரவில்லை. ஆகவே இவ்வாறு கட்டைகளை வைப்பது நபிவழிக்கு முரணானதாகும்.

ஒருவருக்கு பெருநாள் தொழுகை தொழ தவறிவிட்டால் அவர் தனியாக அல்லது குடும்பத்தாரை இணைத்துக்கொண்டு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என புகாரியின் 985வது ஹதீத் சொல்கிறது.

பெருநாள் தினத்தில் தொழுகையை மறக்கச்செய்யாத கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அவற்றை பள்ளிவாயலிலும் செய்யலாம். ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) என்னை மறைத்தபடி நிற்க நான் பள்ளிவாசலில் (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர்களை பாhத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களை உமர் (ரழி) அவர்கள் அதட்டினார்கள். உடனே நபியவர்கள் (உமரே) அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டு அச்சமின்றி விளையாடுங்கள் அர்ஃபிதாவின் (அபீசீனிய) மக்களே என கூறினார்கள். – புகாரி 988

இதன் மூலம் பள்ளிவாயல் உள்ளே அல்லது முன்பாக பெருநாளில் விளையாட்டுக்களில் ஈடுபடலாம் என்பதையும் அங்கு பெண்களும் மறைவாக நின்று கொண்டு ரசிக்கலாம் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்கிறோம். இது போன்ற கேளிக்கைகள் பெருநாளில் அதுவும் பள்ளிவாயலல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறுவர்கள், இளைஞர்கள் பெருநாளில் கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதை நாம் தடுக்க முடியாது என்பதையம் பெண்கள் இத்தகைய பகிரங்க இடங்களில் முகத்தை மூடாமல் மறைந்து நின்று பார்க்கலாம் என்பதும் தெளிவாகிறது. ஆயிஷா அவர்கள் முகம் மூடியிருந்தால் நபியவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்க வேண்டியதில்லை.


பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியால் சென்று மறுவழியாக திரும்புவதும் நபியவர்களின் சுன்னத்தான வழிமுறையாகும். அதே போல் சிறுவர்களோடு அன்பாக உரையாடுவது, அவர்களுக்கு இனிப்பு வழங்குதல் போன்றவை அழகிய வழிமுறைகளாகும்.


எனவே நபிவழியல் நமது பெருநாட்களை கொண்டாடி நமது குடும்பத்தாருடன் இன்புற்றிருந்து இறை திருப்தியை பெறுவோமாக!

- மௌலவி முபாறக் அப்துல் மஜீத், கபூரி, நத்வி, பீ. ஏ. மதீனா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :