அன்று வியாழன் நோன்பா.? பெருநாளா.? குழப்பமான விளக்கம்.

( அஸ்லம் அலி)

ம்முறை புனிதமான நோன்பை நோற்ற இலங்கை முஸ்லிம்களின் மன
மகிழ்ச்சிக்காகவும், நிறைவுக்காகவும் இஸ்லாம் வழங்கிய சிறப்பு மிகுந்த
நோன்புப்பெருநாளை கொண்டாடுவதில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டு
விட்டது. 

இதனால் பல்வேறு எதிர்பார்ப்புடனிருந்து இலங்கையின் எல்லா இன
மக்களையும் இணைத்து சந்தோசமாக கொண்டாடப்பட இருந்த பெருநாள்
திருப்தியற்றதாக, பலராலும் விமர்சனத்திற்குட்பட்டதாக மாறியது. இதனை
யாவரும் அறிவோம்.

இந்த குழப்பத்தால் இலங்கை முஸ்லிம்கள் ஒரே தினத்தில் பலர் நோன்பு
நோற்றனர், பெரும்பாலானோர் பெருநாள் கொண்டாடினர். இதில் சிலர் பெருநாளா ?
நோன்பா என்று தெரியாமல் தாங்கள் பிடித்த நோன்பை இடைநடுவில் விட்டனர்.

இவ்வாறான நிலையில் படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை மக்கள்
மனங்களில் பெரும் சந்தேகமும், குழப்பமும் தோன்றிய நிலையில் இம்முறை
நோன்புப் பெருநாள் நம்மை விட்டு பிரிந்திருக்கின்றது.

இந்த நிலையில் இவ்வாறான சர்ச்சைகளை எதிர்வரும் காலங்களில் பிறை
பார்க்கின்ற முறைகளில் அல்லது பிறை தீர்மானிக்கப்படுகின்ற விடயத்தில் ஒரு
பெரும் விட்டுக்கொடுப்புடன் பிறைக்குழுவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்
என்பது இந்நாட்டு முஸ்லிம்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை
இலங்கையின் நாலா புறங்களிலுமுள்ள மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்
வெளிப்படுத்தி நிற்கிறது. 

இந்த சமகால பிரச்சினை தொடர்பாக சமூகத்தின் பலதரப்பட்டோரை தொடர்பு கொண்டேன்.
அவர்கள் கூறும் கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறேன்.

கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மட் றிபாய் என்ற கூலித் தொழில் செய்துவரும்
குடும்பஸ்தர் குறிப்பிடும்போது,


உண்மையில் நான் இவ்வளவு காலமும் அறிந்திருக்காத ஒரு பிரச்சினையே இது.
நாங்கள் காலாகாலமாக இஸ்லாம் கூறியது போன்று பிறை கண்டால் றமழான் நோன்பை
எவ்வாறு பிடித்தோமோ அவ்வாறே பிறை கண்டால் பெருநாள் கொண்டாடியிருக்கிறோம்.
இந்த குழப்பத்திற்கு முழுப்பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவே
பொறுப்பேற்க வேண்டும். இங்கு கிண்ணியாவில் பிறை கண்டதாக
தெரியப்படுத்தியும் அதனை ஏற்க மறுத்த பிறைக்குழுவும், ஜம்இய்யதுல்
உலமாவும் பிறை கண்டதாக அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று
கூறியிருந்தார்கள். ஆனால்பிறை கண்டது மட்டும் உண்மை என்பதை கிண்ணியா
சகோதரர்கள் நிரூபிப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களை செய்திருந்தார்கள்
என்றும், என்றாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றும் அப்போது
தெரிவிக்கப்பட்டடது. இதில் ஜம்இய்யதுல் உலமாவால் தெரிவுசெய்யப்பட்ட
கிண்ணியா கிளையினர் தமது உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதேவேளை பெரும்பாலானவர்களால் கூறப்படுகின்ற விடயம் இந்த பிரச்சினைக்கு
காரணம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவே என்று குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் நோன்பின் இறுதிப்பகுதியிலேயே இம்முறை 30 நோன்புகள் தான்பிடிக்க
வேண்டும் என்று தீர்மானித்து விட்டதாக கதைகள் வெளியானதாக தகவல் எட்டிய
மக்கள் தெரிவித்தாக கூறுகின்றனர். “அல்லாஹ்தான் யாவற்றையும் அறிந்தவன்”.
முடிந்த விடயத்தை அலட்டிக்கொள்ளாமல் இனிவரும் காலங்களிலாவது இந்த
பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற சம்மந்தப்பட்டவர்கள் முனைய வேண்டும்.
எனது கருத்து இலங்கையின் எல்லா பிரதேச மக்களையும் உள்ளடக்கியதாக ஒரு
விசேட பிறைக்குழு நி்யமிக்கப்பட வேண்டும். ஜம்இய்யதுல் உலமா இந்த
பொறுப்பிலிருந்து நீங்க வேண்டும். அப்போதுதான் சுமுகமான நல்ல தீர்வு
கிடைக்கும் மட்டுமல்லாது ஜம்இய்யதுல் உலமா சபைக்கான பழிச்சொல்லும்
நீங்கும் என்பது எனது கருத்தாகும்.



இது விடயமாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர் கே.எம். சுபைர் குறிப்பிடும்போது,
உண்மையில் இன்றைய நாட்டின் சூழ்நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய்
ஊற்றுவதுபோன்று வந்த சர்ச்சையே இந்த பிறைப்பிரச்சினையாகும். ஜம்இய்யதுல்
உலமா விட்டுக்கொடுப்பிற்கு தயாரில்லை. கிண்ணியாவில் பிறை காண்டதனால்,
அங்கு பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா
கிளை எடுத்த முடிவு இஸ்லாமிய வரம்புக்குட்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
“ கண்டு பிடி, கண்டு விடு ” என்ற அடிப்படையில் கிண்ணியாவில் இந்த முடிவு
எடுக்கப்பட்டிருந்தது. அதனை ஆதரிக்கும் வகையில் அங்கு எல்லா கொள்கைச்
சகோதரர்களும் பெருநாள் கொண்டாடியிருந்தனர். இதனை பலமுறை விசாரித்து
உறுதிப்படுத்திய பின்னரே தௌஹீத் ஜமாஅத்தினரும் பெருநாள்
கொண்டாடியிருந்தனர்.

எது எவ்வாறு இருந்தாலும் முஸ்லிம்களின் அதி உச்ச கௌரவ சபையின் தலைவர்
மதிப்புக்குரிய மௌலவி றிஸ்வி முப்தி றமழானின் 30வது நாளான
சந்தேகத்திற்குரிய நாளாக கருதிய நாளில் நோன்பு நோற்பதை விட்டுவிடச்
சொல்லவில்லை, நோன்பைத் தொடருமாறு பணித்திருந்தார். இவ்வாறான பிரச்சினை
இனிமேலும் வந்து பிற மதத்தவர்கள் எங்களை எள்ளிநகையாடும் நிலைக்கு நாம்
ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அதற்காக சுதந்திரமான பிறைக்குழு ஒன்றை
நிறுவி அந்த சபை எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வாய்ப்பை
ஏற்படுத்துமாறு வேண்டுகிறேன்.

சாய்ந்தமருதை சேர்ந்த அம்பாரை மாவட்ட அஹ்லுல் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா
சபையின் செயலாளரும், ஆசிரியருமான அல்-ஹாஜ் மௌலவி எம்.எஸ்.ஏ.எம். அப்துர்
ரஹீம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

உண்மையில் இந்த பிரச்சனை சுமுகமாக பேசி தீர்வினைப்பெற்றிருக்க வேண்டிய
விடயமாகும். ஆனாலும் தலைமைத்துவக் கட்டுப்பாடு எமது முஸ்லிம்களுக்கு
மத்தியில் இருக்க வேண்டும். இது இந்த பிறை விடயத்தில்
மீறப்பட்டிருக்கின்றது. தலைமைத்துவம் பற்றி இஸ்லாம்
தெளிவாகக்குறிப்பிடுகின்றது. உங்கள் மத்தியில் கறுப்பு அடிமை தலைவராக
நியமிக்கப்பட்டாலும் அவருக்கு கட்டுப்படுங்கள். என்று இஸ்லாம்
கூறியிருக்கின்றது.

கிண்ணியாவில் பிறை கண்டதை உறுதிப்படுத்தியவர்கள் உறுதிப்பட
தெரிவித்திருந்தார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இந்த பிரச்சினை
எதிர்காலத்தில் தொடர்ந்தும் எமது சமூகத்திற்கு மத்தியில் இருக்க கூடாது.
இதற்காக தீர்கமான முடிவினை நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கின்றோம். நானும் ஒரு உலமா என்ற அடிப்படையில் எதிர்காலத்தில்
இவ்வாறான பிரச்சினை ஏற்படாமலிருக்க வேண்டுமாக இருந்தால் அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா சபையின் கட்டுப்பாட்டிலில்லாமல் சுதந்திரமாக
அல்லாஹ்விற்குப்பயந்து நடக்கக்கூடிய பிறைக்குழு சபை ஒன்று மிக அவசரமாக
நிறுவப்பட வேண்டும். அத்துடன் அச்சபை எடுக்கும் தீர்மானத்தை இந்நாட்டு
முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றாக வேண்டும். இச்சபை மக்கள் கருத்திற்கும்
செவிசாய்க்க வேண்டும். இந்த சபையை நிறுவும் விடயத்ததை அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா சபை மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டும். என்றும் தனது
கருத்தில் குறிப்பிட்டார்.

மேலும் களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகரைச் சேர்ந்த எம்.எஸ். பிர்தௌஸ்
என்ற ஆட்டோ சாரதி குறிப்பிட்டவை வருமாறு,


தம்பி நாட்டுல மக்களுக்கு எவ்வவவோ பிரச்சினை இருக்கு. அதில புனிதமான
பெருநாளை தீர்மானிக்கித்திலயுமா ? எம்மிடவங்க பிரச்சனை படனும், ஒற்றுமை
என்ற கயிற்ற பலமா பற்றி பிடிச்சி கொள்ளுங்க. பிரிஞ்சிடாதிங்க எண்டுதானே
வாப்பா இஸ்லாம் சொல்லுது. எங்கிட அரசியல்வதியளும் இப்படித்தான்
இரிக்கானுவள். வெறுத்துப்போகுது தம்பி.

மதிப்புக்கு உரிய ஜம்மிய்யதுல் உலமா சபைத்தலைவர் அன்று ரேடியோக்கு சொன்ன
கருத்தில குழப்பம் இருக்கி. என்னன்டா, கிண்ணியா உலமா சபட கிளத் தலைவர் கை
எழுத்துப்போட்டு நாங்க பொறய கண்டத பல முற ஆராஞ்சிட்டம் அது உண்மதான்.
எண்டு சொல்லி கை எழுத்து போட்டு தெரிவிச்ச கருத்து பொறகு பொய் என்றும்
அதிலுள்ள கை எழுத்து என்ட இல்ல. என்டும் தன்னிடம் கிண்ணியா உலமா கிளைத்
தலைவர் சொன்னதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத்தலைவர் றிஸ்வி
முப்தி அவங்க கூறினாங்க. ஆனா, இப்ப பல ஊடகங்களில அந்த கை எழுத்து நானே
எழுதினேன் என்டும், பிறை கண்டது உண்மை என்டும், குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் யார் உண்மையானவர் என்று சொல்வது தம்பி.

இதில எத மக்கள் எடுக்கிற. மக்கள குழப்புற வேலய இந்த மார்க்க தலைவர்கள்
விடனும். இனிமேலும் இந்த பிரச்சின வராம நல்ல தீர்வ பெற்றால் அதுவே எங்கள
போன்ற பாமர மக்களுக்கு போதும். சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த
விடயத்த கருத்தில எடுக்கனும். என்றார்.

மக்கள் சில வேளைகளில் தெளிவாக உள்ள விடயங்களில் கூட தமது மார்க்க
அறிஞர்கள் தெளிவற்ற தன்மையை உண்டுபண்ணிவிடுகின்றனர். இது
கண்டிக்கத்தக்கதாகும். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களின்
வேண்டுகோளாக இருக்கும் பிறை பார்ப்பதில் உள்ள நடைமுறையான பிறைக்குழு அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலிருந்து தனியான அதிகாரம் கொண்டதாகவும்,
சுயாதீனமாக இயங்கக்கூடியதுமாக அமைய வேண்டும் என்பதே இன்றைய இந்த
பிரச்சினையில் இலங்கை வாழ் மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் விடயமாகும்.
இதற்கான அழுத்தத்தை தெளிவாக முஸ்லிம் சமூகத்தினர் இயக்க
வேறுபாடுகளுக்கப்பால் ஒற்றுமையாக ஒன்றித்து ஜம்இய்யதுல் உலமாவுக்கு
கொடுக்க வேண்டும். இது காலத்தின் உடனடித் தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :