இலஞ்சம் பெற்ற ஹோமாகம மாவட்ட நீதிபதிக்கு இன்று மீண்டும் விளக்கமறியல்.


மூன்று இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஹோமாகம மாவட்ட நீதிபதி உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம மாவட்ட நீதிபதி எச்.பீ.சுனில் விக்ரம அபேசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எம்.மஹிந்த கித்சிறி ஆகியோரே இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

சந்தேகநபரான நீதிபதி வீடொன்றை கட்டிவருவதாகவும் இதற்காக கட்டட வேலையாட்களை தேடிச்சென்றபோதே இந்த சம்பவத்தை அவர்கள் எதிர்கொண்டதாகவும் சட்டத்தரணிகள் கூறினர்.

ஹோமாகம மாவட்ட நீதிபதி இலஞ்சம் பெறவில்லை எனவும் நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த சம்பவத்தை உருவாக்கியதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளில் சந்தேகத்திற்கு இடமின்றி இவர்கள் விடுதலையாவார்கள் என்பதால் அவர்களுக்கு தற்போது பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பிரதிநிதி, சந்தேகநபரான நீதிபதியின் காருக்கு அருகே சென்று பணத்தை வழங்கியதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அப்படியாயின் 'நான் எனது வேலையைச் செய்கிறேன்' என இதன்போது நீதிபதி தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரவித்தனர்.

இலஞ்சம் பெறுவது தொடர்பில் வழக்கின் முதலாவது சந்தேகநபருக்கும் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் இடையே 15 தடவைகள் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளனவா என இதன்போது பிரதம நீதவான் அதிகாரிகளிடம் வினவினார்.

இந்த தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபரான நீதிபதியை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :