(எஸ்.எம்.லெவ்வை)
முஸ்லிம் காங்கிரஸ் அமைதியாக இருந்து அவர்கள் அறியாப்புறத்தில் அதிகம் சாதித்து விட்டதாக இப்போது அதிகாரத்தில் இருக்கும் சில பௌத்த கடும் போக்குவாதிகள் நினைக்கிறார்கள். அதனால், இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்களை மிக வேகமாகத் தொடங்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளை குறிவைத்து, அமைச்சுப்பதவிகளையும், கொந்தராத்துக்களையும் காட்டி ஆசையூட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பு, முஸ்லிம் காங்கிரசை உடைப்பதற்கு பம்பரமாய்ச் சுழல்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.அம்பாரை மாவட்ட வணிகத்துறை பட்டதரிகள் சங்க ஒன்றுகூடல் அண்மையில் சம்மாந்துறையில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்- பல்கலைக்கழக நண்பர்கள் பலர் இங்கே இருக்கிறீர்கள். கடந்த காலங்களிவல் என்னையும் எனது செயற்பாட்டையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எந்த முகாமில் நான் இருந்தாலும் சமூகத்திற்கு ஒரு அபாயம் வருகின்றபோது வெறும் பார்வையாளனாக மட்டும் ஒரு போதும் நான் இருந்தது கிடையாது. அப்படித்தான், பொதுபலசேனாவின் விரோதச் செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, கீழ்த்தரமான அரசியல் லாபங்களை மட்டும் மனதிற் கொண்டு செயற்படும் ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை இருந்திருக்குமாக இருந்தால், நான் எப்போதே எனது பதவியை திறந்திருப்பேன்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த இயக்கம் சலசலப்பில்லாமல் செய்து முடித்திருக்கும் மிக நுணுக்கமான ராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை, தலைவர் ரஊப் ஹக்கீமுடன் மிக நெருக்கமாக இருந்து கண்ணூடாகப் பார்த்தும் அறிந்தும் இருப்பதால் இந்த இயக்கத்தின், முஸ்லிம்கள் பற்றிய பிரக்ஞையும், அதனை அடைந்து கொள்ள அது கைக்கொள்ளும் யாருக்கும் நோகாத, குறிப்பாக இந்த இயக்கத்தையும் சமூகத்தையும் யாரும் நொந்து கொள்ளாத அணுகுமுறையும்தான் இன்னும் இந்த இயக்கத்தை நம்பவைத்து என்னை சமாதானப்படுத்துகிறது.
இன்று சிலர் கேட்கின்றார்கள், பொதுபலசேனாவின் அட்டகாசத்தை நிறுத்த முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது? என்று முஸ்லிம் காங்கிரஸ் பொதுபல சேனாவின் மூக்கணாம் கயிற்றை இழுத்துக்கட்டி வைக்க வைத்திருக்கிறது என்று அவர்களுக்கு நான் பதில் கூறுகின்றேன். பொதுபலசேனாவை பின்னின்று இயக்கியவர்கள் இன்று கண் பிதுங்கிப்போய் இருக்கின்றார்கள், அரபு நாடுகளின் ஆத்திரத்தில் அதிர்ந்து போய்க்கிடக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் மூடிக்கொண்டிருந்தால் இந்த முழு அழுத்தமும் எப்படி வந்திருக்க முடியும்? என்றும் நான் கேட்கவிரும்புகின்றேன். எல்லாவற்றையும் ஊடகங்களில் திறந்து கொட்டுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. இப்போது நான் முழு விடயங்களையும் விபரித்துச் சொல்ல முடியாது. மெதுவாய்க் கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
கடந்த காலங்களிலும் சிலரை கட்சிக்குள் வைத்தும் இன்னும் சிலரை கட்சியை விட்டு வெளியேற்றியும் அமைச்சுப்பதவிகளைக் கொடுத்து இந்தக்கட்சியை உடைக்கப்பார்த்தார்கள். அதில் தோல்வியைத்தான் தழுவினார்கள். இப்போது அதுதான் நடக்கப்போகிறது. ஏனெனில், இந்தக்கட்சி தனிநபர்களில் தங்கியுள்ள கட்சி அல்ல. இது மக்களுடைய இயக்கம். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், மகாணசபை உறுப்பினர்களாக இருந்தாலும், இந்தக்கட்சியில் இருந்து தனிநபராக மட்டும்தான் வெளியிறங்க முடியுமே தவிர மக்கள் அவர்களோடு போக மாட்டார்கள். அதுமட்டுமல்ல கட்சியை உடைக்க நினைப்பவர்களுக்கும், கட்சியில் இருந்து உடைந்து செல்பவர்களுக்கும் தகுந்த பாடத்தையும் மக்கள் கற்றுக்கொடுப்பார்கள் என்பதனையும் நான் கூற விரும்புகிறேன்.
முஸ்லிம்களுக்கு பிரச்சினை உண்டுபண்ணி அப்பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமாக முகம் கொடுக்கின்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உடைத்து தமது இலக்கை அடையும் முயற்சி காலம் காலமாக நடைபெற்று வந்திருக்கிறது. 2002ம் ஆண்டில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு அதாஉல்லா, றிசாட் போன்றவர்கள் எவ்வாறு பிரிந்தார்களோ அதே பாணியில் இப்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment