நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் ஒரு வர்த்தக திட்டத்தை வகுப்பதற்கு உலக வங்கியால் ஆலோசகராக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள கிரஹம் மெர்ஸி, அதன் செயலாக்க சாத்தியக்கூறுகள் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கிக் கூறினார்.
ஆலோசகர் கிரஹம் மற்றும் அவருடன் வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள் உத்தேச நடுத்தீர்ப்பு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், சந்தை வாய்ப்பு தொடர்பான அம்சங்கள் ஏனைய செயல்பாடுகள் என்பன பற்றி விபரித்தனர்.
நடுத்தீர்ப்பு மையத்தோடு தொடர்புடைய இதர பங்குதாரர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோரையும் ஆலோசகர் கிரஹம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பல்வேறு நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு நிறுவனங்களுடனான வர்த்தக, தொழில் முதலான அநேக சட்ட ரீதியான பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காண்பதற்கு இலங்கையில் நிறுவப்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் உதவும். இதனூடாக இலங்கை அரசாங்கத்திற்கு பெருந்தொகையான அந்நியசெலாவணி வருமானமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் கைசேர்ந்த தலைசிறந்த சட்டத்தரணிகள் இங்கு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடனான சந்திப்பின் போது நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனுஷா முனசிங்க, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம். மன்சூர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.



0 comments :
Post a Comment