(எஸ்.அஷ்ரப்கான்)மௌலவிமாரும் பெண் மௌலவியாக்களும் ஜனநாயக ரீதியான அரசியலில் எம்மோடு
இணைந்து போராட முன்வராத வரை மௌலவி ஆசிரியர் நியமனம் மீண்டும் கிடைக்கக்கூடிய
சாத்தியக்கூறுகள் இல்லை என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக்
அப்துல் மஜீத் தெரிவித்தார்.
பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்க மௌலவி ஆசிரியர் இல்லாமை காரணமாக,
சுகாதார, கணித ஆசிரியர்கள் இஸ்லாம் பாடம் கற்பிற்கும் கேவலமான நிலை பற்றி
இறக்காமம் ஊடகவியலாளர் அப்துர் ரஊப் அவர்களால்; கேட்கப்பட்ட கேள்விக்கு
வழங்கிய பதிலிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டை பொறுத்த வரை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1935 முதல்
மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டு வந்தது. இடையில் 1992ம் ஆண்டு ஐ தே க
ஆட்சியில் சில நியமனம் வழங்கப்பட்டதோடு அதற்குப்பின் இந்த நியமனம்
வழங்கப்படவில்லை. பின்னர் ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளராக இருந்த
மௌலவி ரியாழ் அவர்கள் இதற்காக பெரு முயற்சி செய்தார். ஆனால் ஒரு நியமனம் கூட
வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2005ம் ஆண்டு உலமாக்கள் தலைமையிலான எமது
கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இதனை அரசியல் மயப்படுத்துவதில் வெற்றி
கண்டோம். அதிகமான மௌலவிமார் எமக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் சில
நூற்றுக்கணக்கான மௌலவிமாரின் ஒத்துழைப்புடன் இதற்காக பாரிய போராட்டங்கள்
நடத்தினோம்.
இது சம்பந்தமாக நாம் வகுத்த அரசியல் வியூகம் இறையுதவியால் வெற்றியளித்ததன்
பயனாக 2010ம் ஆண்டு 150 மௌலவிமாருக்கு இந்நியமனம் கிடைக்கச் செய்தோம்.
அதற்குப்பின் இந்நியமனம் வழங்கப்படவே இல்லை. அதற்கு பல்வேறு காரணங்கள்
இருக்கின்றன.
2010ம் ஆண்டு இந்நியமனம் வழங்கப்பட்ட போது தம்மால்தான் இந்நியமனம்
வழங்கப்பட்டது என சிலர் உரிமை கோரியதால் உங்களால் முடிந்தால் மீண்டும்
அந்நியமனத்தை வழங்கிப்பாருங்கள் என சவால் விடும் நிலை எமக்கு ஏற்பட்டது. மூன்று
வருடங்கள் தாண்டியும் 2008ல் போட்டிப்பரீட்சை எழுதியோருக்கு இன்னமும்
இந்நியமனம் கிடைக்காமை காரணமாக ஏற்கனவே கிடைத்தமைக்கு எமது அரசியல் முயற்சி
காரணம் என்பது இப்போது பலருக்கு புரிகிறது.
அதுபோல் பரீட்சை எழுதிய மற்றும் ஏனைய மௌலவிமாரின் பொடுபோக்கு நியமனம்
தாமதமாவதற்கு காரணமாக உள்ளது. எம்மை பொறுத்த வரை இதனை அரசியல் ரீதியாகவே
வென்றெடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். மௌலவிமார் எமது
கட்சியில் சேர்ந்து பகிரங்கமாக எமக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயம் இதனை
வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
அத்துடன் ஜம்இய்யத்துல் உலமா, இதற்கான எமது முயற்சிக்கு ஒத்துழைக்காமை இன்னொரு
காரணம். இந்நியமனம் பற்றி அம்பாரை மாவட்ட உலமா சபை போன்றோர் பல
கடிதங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பியும் அவை அத்தனையும் குப்பைத்தொட்டியில்
போடப்பட்டு விட்டன. அதே போல் ஜம்இய்யத்துல் உலமா நம்பிய முஸ்லிம்
கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் இது விடயத்தில் அக்கறை காட்டவில்லை. இதனை
ஒரு படிப்பினையாகக்கொண்டு ஜம்இய்யத்துல் உலமா எம்மை அழைத்து எமது கட்சிக்கு
பூரண ஒத்துழைப்பை தாங்கள் வழங்குவதாக பகிரங்கமாக ஒரு அறிக்கை விடட்டும்.
உடனடியாக அமைச்சர்களும், அரசாங்கமும் விழுந்தடித்துக்கொண்டு உலமா சபையை அணுகி
இந்த நியமனத்தை உடனடியாக பெற்றுத்தருகிறோம் முபாறக் அப்துல் மஜீத் மௌலவிக்கு
ஆதரவு தர வேண்டாம் என கூறுவார்கள். இவ்வாறு செய்வதற்குரிய துணிவு ஜம்இயத்துல்
உலமாவிடம் இல்லாமை இஸ்லாம் பாடம் அதற்குரியவர்களால் படிப்பிக்க முடியாத
நிலைக்கு காரணமாகும்.
மிக முக்கியமாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமா சபைகள், தஃவா அமைப்புக்கள்
இதற்கான எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துழையாமை இன்னொரு காரணமாகும்.
இத்தகைய பிராந்திய உலமா சபைகள் முன் வந்தால் மிக இலகுவாக இதனை பெற முடியும்.
உதாரணமாக அக்கரைப்பற்று உலமா சபை எமது கட்சியை அழைத்து எமக்கு பூரண ஆதரவு
வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தால் அமைச்சர் அதாவுள்ளா திடுக்கிட்டெழுந்து
இந்த நியமனம் கிடைக்க அவரே போராடுவார். அதே போல் கல்முனை மாநகர
எல்லைக்குள் உள்ள உலமா சபைகள், சம்மாந்துறை, காத்தான்குடி கிண்ணியா, கண்டி,
கொழும்பு என அனைத்து உலமா சபைகளும் இவ்வாறு செய்தால் எங்கே தமது வாக்குகளை
இழந்து விடுவோமோ என்ற அச்சத்தால் இந்நியமனம் மீண்டும் கிடைக்க வழி
செய்வர். அவ்வாறு செய்ய உலமா சபைகள் முன் வராவிட்டால்; மௌலவி ஆசிரிய
நியமனம் வழங்காவிட்டாலும் இந்த வெட்கங்கெட்ட மௌலவிமார்
தமக்குப்பின்னால்தான் அலைவார்கள் என்பதை; முஸ்லிம் அமைச்சர்கள்
உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.
இவ்வாறு நாம் சொi ல்பவற்றை செய்ய முன்வராமல் மூலைக்குள் இருந்து கொண்டு
ஒப்பாரி வைப்பதாலோ ஏமாற்று முஸ்லிம் கட்சிகளின் பின்னால் அலைவதாலோ
இந்நியமனம் கிடைக்கப்போவதில்லை என்பதை மௌலவிமாரும், முஸ்லிம்
பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இனவாதம் பெருக்கெடுத்து ஓடும்
இன்றைய சூழ் நிலையில் இது பற்றி அரசியல் சார்பற்ற அமைப்புக்களால் மூச்சு
விடக்கூட முடியாது. ஜம்இய்யத்துல் உலமாவே தலை தப்பியது பெரும் புண்ணியம்
என்றிருக்கும் நிலையில் அவர்களால் இதற்கு நாம் சொன்னது தவிர வேறு வழிகளில்
தீர்வு காண முடியாது.
இந்த நாட்டில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவிமாரும் மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பெண் மௌலவியாக்களும்; உள்ளனர். இவர்கள் அனைவரும் எமது கட்சியில்
சேர்ந்தால் அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி மிக இலகுவாக மௌலவி ஆசிரியர்
நியமனத்தை மீண்டும் பெற முடியும். இவர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களில்
ஆகக்குறைந்தது பத்து வாக்குகளாவது இருந்தால் மொத்தம் என்பதினாயிரம் வாக்ககளால்
நாம் இதனை மிக இலகுவாக வென்றெடுக்க முடியும். இதுதான் இந்த நாட்டின் அரசியல்
களம்.
ஆக இன்று இஸ்லாம் பாடம் அந்நியர்களால் கூட கற்பிக்கப்படுகிறது. இத்தகைய
நிலைக்கு இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு ஒத்துழைக்க முன்வராத
உலமாக்களும் முஸ்லிம் சமூகமுமேயாகும் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment