முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ள நல்லிணக்கம், நல்லுறவு, என்பன பாதிக்கப்பட்டு அதனால் இனமுறுகல் ஏற்படாதவிதத்தில் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.கடந்த திங்கள் கிழமை (6) முற்பகல் முல்லைத்தீவு செயலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) திரு. என்.ஏ. வேதநாயகம், மேலதிக மாவட்டச் செயலாளர் மோகனதாஸ், பிரதேச செயலாளர் பி. குகநாதன், வலயக் கல்விப் பணிப்பாளர் மு. ராஜகுமார், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. வில்வராஜா உட்பட அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
முல்லைத்தீவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான எம்.எச்.எம். நஜாத்தின் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்களும், பிரதேசவாசிகள் சிலரும் இச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
காணிக் கச்சேரிகளை நடாத்தி, காணி விவகாரங்களை உரிய அதிகாரிகள் பொறுப்புணர்ச்சியுடன் கையாள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தேவையற்ற அரசியல் தலையீடுகள் நிலைமையை சிக்கலாக்கிவிடும் எனக் கூறிய அமைச்சர் ஹக்கீம், வனபரிபாலன திணைக்களம், இராணுவம் என்பவற்றின் தலையீடும் காணப்படுகின்றது என்றார்.
யுத்த சூழ்நிலையில், அவசரமாகவும், பலவந்தமாகவும் வெளியேற்றப்பட்டதன் காரணமாக பலர் தங்களது காணி உறுதிகள், பிறப்பு அத்தாட்;சிப் பத்திரம் என்பனவற்றுடன் ஆவணங்களை இழந்துள்ளதன் காரணமாக மீள்குடியேறும் மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு உரிமைக் கோருவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நீண்டகால இடைவெளியில் குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள காரணத்தினால் காணி இல்லாத குடும்பங்களுக்கு அரச காணிகளை உரிய முறையில் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
தேசிய வீடமைப்புத் திட்டம், மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டம், இந்திய வீடமைப்புத் திட்டம் என்பவற்றைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் முன்னர் வசித்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு ஏற்ற மாற்று வழிவகைகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கல்வி, மற்றும் வாழ்வாதார, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் இக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
0 comments :
Post a Comment