யுத்த வெற்றியின் நான்காவது வருட நிறைவு ஜனாதிபதி தலைமையில்.

பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ பிரதம அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை அடுத்து யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனையடுத்து, மங்கள வாத்திய முழக்கத்துடன் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்காக 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

அடுத்தாக, முப்படையினருக்கும் ஜனாதிபதி மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதனையடுத்து, முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

இந்த அணிவகுப்பு மரியாதையில் முப்படை மற்றும் பொலிஸ் தரப்புகளைச் சேர்ந்த 583 அதிகாரிகளின் கீழ் 9090 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

யுத்தவெற்றிக் கொண்டாட்ட வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடபகுதி மக்கள் சூழ்ச்சிமிக்க பாதுகாவலர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

வடபகுதி மக்களின் கலாசாரங்களைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக பிரபாகரன் அவற்றை அழிவடையச் செய்ததாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பிரபாகரன் மற்றும் கொலையாளிகள் அந்த கலாசாரங்களை அழிவடையச் செய்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களும், தமிழ்க் கட்சிகளும் தமிழர் சமூகத்தை மேலும் அழிவுக்கு இட்டுச்செல்ல முயற்சிப்பதாக கூறினார்.

இத்தகைய குழுவினர் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு வேறு எதிரிகள் தேவைப்படமாட்டார்கள் என்றும், தமக்காக முன்நிற்கின்றவர்களின் நேர்மை குறித்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுமார் 30 வருடங்களின் பின்னர் வடபகுதி மீனவர்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட போதிலும் வேறு தரப்பினர் அங்கு வந்து மீன்களை பிடித்துச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறு மீன்களை பறித்துச் செல்கின்றவர்களே வடபகுதி தமிழ் மக்களுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முற்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சூழ்ச்சி மிக்க பாதுகாவலர்களிடம் இருந்து தமிழ் மக்கள் எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.

பணயக் கைதிகளாக வடபகுதியில் இருந்து மூன்று இலட்சம் தமிழ் மக்கள் தப்பிவந்த போது அவர்களுக்கு உணவளிப்பதற்காக இலங்கை இராணுவமும் அரசாங்கமும் மாத்திரமே முன்நின்றதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உயிர் தியாகத்துடன் மீட்டெடுத்த தேசத்தின் ஓர் அங்குல நிலத்தையேனும் பறித்தெடுப்பதற்கோ அல்லது பிரிப்பதற்கோ எந்த விதத்திலும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ஜனாதிபதியால் முப்படையினருக்கு கையளிக்கப்பட்ட வர்ணக்கொடிகளும், யுத்த சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட யுத்த வாகனங்களும் காலிமுகத்திடலில் அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள், காலி முகத்திடலுக்கு அருகால் வானில் பறந்ததுடன், கடற்படைப் படகுகள் கடலில் சஞ்சரித்தவாறு இலங்கை இராணுவ வீரர்களின் திறமைகளைப் பறைசாற்றின.

யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இந்த வைபவத்தின்போது உணர்வுபூர்வமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :