( எஸ்.அஷ்ரப்கான் )அஸாத் சாலியின் விடுதலைக்காக முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு குரல்
எழுப்பினால் மட்டுமே அஸாத் சாலி விடுதலை செய்யப்படும் சாத்தியம் உள்ளது.
இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதன் மூலம் எதனையும் சாதித்து
விட முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
அஸாத் சாலி கைது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது
இதனைத் தெரிவித்தார்.
நபார் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,
பதவி பட்டங்கள் சொகுசு வாழ்க்கைகளுக்கப்பால் முஸ்லிம் சமூகத்திற்காக
குரல்கொடுத்த தனி மனிதன் இன்று அடக்கி ஒடுக்கப்படுகிறான். இதன் மூலம்
மனிதனுக்கு இருக்கின்ற கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்படுகிறது.
அஸாத் சாலியை கைது செய்ததானது அரசியல் பழிவாங்கலின் முதற்படியாகும். இதன்
தொடரில் எமது சமூகத்திற்காக நடந்தேறும் அநீதிகளை எடுத்துக் கூற முற்படும்
அணைவருக்கும் எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படலாம். இதன்மூலம்
சுதந்திரமாக தமது கருத்தை வெளியிட நினைக்கும் அணைவரும் அச்சத்தில்
இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான தலைவர்கள் வாய்மூடி இருக்க கூடாது.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அரசுக்கு தாரை
வார்த்துக்கொண்ட நிலையில் முஸ்லிம் தலைமைகள் சொகுசு வாழ்க்கை வாழந்து வர
ஏன் தனிமனிதன் அஸாத் சாலி மட்டும் பலிக்கடாவாக ஆகவேண்டும் ?
இன்று ஆட்சியில் அதிகமான முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்துடன் இருந்த
போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மத
அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்கிய போது துணிவுடன் குரல்
கொடுத்தவர் ஆஸாத் சாலி அவரது கைது விடயத்திற்கு வேறு காரணங்களை காட்டி
நியாயப்படுத்த முடியாது.
இன்று ஆஸாத் சாலி கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் முஸ்லிம்கள் அரசு
மீது வைத்துள்ள நம்பிக்கையை பரீட்சித்துப்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்காக என்ன விதமான நியாயங்களை தெரிவித்தாலும் அதனை முஸ்லிம்கள்
ஏற்றுக் கொள்கின்ற மனநிலையில் இல்லை.
ஆஸாத் சாலி தான் குற்றமற்றவர் என்றும், தனது குற்றம் நிரூபிக்கப்பட
வேண்டும் எனவும் கோரி நோயுற்ற நிலையிலும் உண்ணாவிரதம் இருந்து வரும்
நிலையில், முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஆஸாத் சாலியை
விடுதலை செய்வதற்கு கட்சி, இனமத, பேதங்களுக்கு அப்பால் அனைத்து அரசியல்
தலைமைகளும் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment