( எஸ்.அஷ்ரப்கான் )
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டம் ஒரு இக்கட்டான காலமாக
அமையப் பெற்றுள்ளமையை சம காலத்தில் இடம்பெறும் சம்பவங்கள் எடுத்துக்
காட்டுகின்றன. ஆஸாத் சாலி தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எந்தச் சட்டம் அஸாத் சாலியைக் கைது செய்து தடுத்து வைக்க உதவியுள்ளதோ அதே சட்டம்
இனத்துவேசக் கருத்துக்களை இனங்களுக்கிடையே பரப்பி பிரச்சினைகளை
உருவாக்குபவர்களையும் கைது செய்து தடுத்து வைக்க பயன்படுத்தப்பட வேண்டும்.
என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப்
சம்சுடீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் சொந்த நிதி
ஓதுக்கீட்டின் கீழ் சுனாமி மற்றும் சமூர்த்தி நிவாரணம் பெறும்
குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 30 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவசக் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் அவரின் கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,
90 நாட்களுக்குள் ஒரு நபரை நீதி மன்றில் ஆஜர் படுத்தாமல் தடுத்து
வைத்திருப்பதற்கு எமது பாதுகாப்பு செயலாளருக்கு எச்சட்டம் அதிகாரம்
வழங்குகின்றதோ, அதே போல் 2007ம் ஆண்டின் 51ம் இலக்கச் சட்டம்
மக்களுக்கிடையில் இனத்துவேசமான கருத்துக்களை பரப்புகின்ற நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுகின்ற ஒரு முறைப்பாட்டின் மூலம் இனத்துவேசக் கருத்துக்களை இனங்களுக்கிடையே பரப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றவர்களை, நீதிமன்றுக்கு முன்னால் ஆஜர் படுத்தி பத்து வருடத்துக்கு மேற்படாத தண்டனையினை இச்சட்டத்தின் மூலம் வழங்க முடியும்.
அமைச்சர் வாசுதேவ நானயக்கார இந்த சட்டத்தினை தன்டனை சட்டக்கோவைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பணிந்துரை ஒன்றினை முன்வைத்துள்ளார். அனைத்து நாடுகளும் இணைந்து இனங்களுக்கிடையே முறன்பாடுகள் ஏற்படக் கூடாது என்பதற்காக ICCPR என்று அழைக்கப்படுகின்ற தீர்மானமொன்றை ஜெனிவாவில் நிறைவேற்றின. 1960ல் இவ்வொப்பந்தம் கைச்சாத்தாகியது.
1980ல் அதனை சட்டமாக்குவதற்கு இலங்கையும்
உறுதியளித்திருந்தது. இச்சட்டத்தை ஐக்கிய நாடுகள் பேரவையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு நாடும் சட்டமாக்க வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ் 2007ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது இச்சட்டத்தின் மூலம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் வரையப்பட்டுள்ளது. இச்சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டம் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. அமைச்சர் வாசுதேவா
நாணயக்காராவுக்கு இச்சட்டத்தினை நான் அனுப்பினேன். தேசிய காங்கிரஸின்
தேசியத் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் அனுப்பியுள்ளேன். நாங்கள்
எதிர் நோக்குகின்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்கான
முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது சமூகத்துக்காக குரல்
கொடுப்பவர்களுக்காகவும் குரல் கொடுத்து அதனால் தண்டனையை
அனுபவிப்பவர்களுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் நாம்
பிரார்த்திப்போம்.
முஸ்லிம்களின் கடைகளுக்கு சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது
என்று சொன்னவர்கள், பகிரங்கமாவே இஸ்லாத்தையும் இஸ்லாமிய ஷரியாச்
சட்டத்தையும் கேவலப்படுத்தியவர்கள், ஒரு இனத்தை கொச்சைப்படுத்தி
அவ்வினத்தின் மனதைப் புன்படுத்தி மதச் சுதந்திரத்திற்கு ஊறு
விளைவித்தவர்கள் எந்தச் சட்டத்தினூடாகவும் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்படவில்லை என்பதையும் அவ்வாறு கைது செய்யப்பட்டும் அவர்கள்
சமாதானம் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையையும் நாம் அறிவோம்.
எமது பிரதேச மக்களின் வறுமையைப் போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக்
கட்டியெழுப்புவதே எனது இலக்காகும். இந்த இலக்கின் ஓரங்கமாகவே தெரிவு
செய்யப்பட்ட குடும்பங்களுக்கான குடி நீர் வழங்கப்பட்டுள்ளது. இது எனது
இலக்கின் முதற்கட்ட அறுவடையாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளை
நிறைவேற்றுவதுடன், இயலுமானவரை எமது மக்களுக்கு சேவை செய்வதே எனது அரசியல்
பயணத்தின் இலட்சியமாகும். இந்த இலட்சியங்களை அடைவதே எனது
சிந்தனையாகவுமுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க
வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்
என்றார்.
0 comments :
Post a Comment