பிரதமர் வேட்பாளருக்கே அருகதையற்றவர் நரேந்திர மோடி -அன்னா ஹசாரே


பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் வேட்பாளர் பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயரும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பெயரும் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடிவரும் பிரபல சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவிடம், பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரில் யார் தகுதிவாய்ந்தவர்கள் என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதில் அளித்த அன்னா ஹசாரே, அவர்கள் இருவருமே பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்டார். உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் நேற்று நிருபர்களிடம் பேசிய அன்னா ஹசாரே மேலும் கூறுகையில், ´பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகள் அல்ல´ என்று குறிப்பிட்டார்.

வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் எம்.பி.க்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அன்னா ஹசாரே ´ஜன் தந்திர யாத்திரை´ மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மார்ச் 31-ந் திகதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் தொடங்கிய இந்த யாத்திரை, நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தை வந்தடைந்தது. ரூர்கி நகரில் திரண்ட மக்கள் மத்தியில் பேசிய ஹசாரே, ´இந்த யாத்திரையின் நோக்கம் ஆட்சியை மாற்றுவது அல்ல, ஆட்சி அமைப்பு முறையை மாற்றுவதே´ என்றும், விளக்கம் அளித்தார்.

இந்த யாத்திரையில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங்கிடம், ஹசாரேவின் யாத்திரையில் யோகா குரு கலந்து கொள்வாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதில் அளித்த வி.கே.சிங், ´யாத்திரையில் பங்கேற்கும்படி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளுக்கும் ஹசாரே அழைப்பு விடுத்து இருக்கிறார். அது குறித்து சாதகமான முடிவு எடுக்க வேண்டியது ராம்தேவ்தான்´ என்று கூறினார்.

மத்தியில் தற்போது நடைபெறும் ஆட்சி இதுவரை பதவி வகித்த அரசுகளில் மிகவும் மோசமான ஊழல் அரசு என்றும், அதிகமான பேராசை கொண்ட, மக்களை பாதித்த அரசு என்றும், வி.கே.சிங் தாக்குதல் தொடுத்தார்.

நாட்டை வழிநடத்துவதற்கான வழிகாட்டும் கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காக வருகிற செப்டம்பர் மாதத்தில் மக்கள் பாராளுமன்றம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அவர், இதில் பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :