தொடரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கைது!!

Share on
ப.சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக மாற்றப்பட்டு, சுஷில் குமார் ஷிண்டே பாதுகாப்புத்துறை அமைச்சராகி சில வாரங்களே ஆன சமயம் அது. 2எ ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் அமைதி கண்டு நிலக்கரி சுரங்கம் (Coal gate) சம்மந்தமான முறைகேடுகளும், ஊழல்களும் தலைதூக்கி நாட்டையே உலுக்கி கொண்டிருந்த நேரம் அது. நம் நாட்டின் மதிப்புமிக்க பாராளுமன்றம் செயல்படாத வகையில் முடக்கப்பட்டு, அதன்
 குளிர்காலத் தொடர் வீணடிக்கப்பட்டு, மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் குப்பையில் வீசப்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்தியாவின் தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களை, குறிப்பாக அஸ்ஸாமிய மக்களை குறிவைத்து அவர்களுக்கு மத்தியில் பீதிகளை ஏற்படுத்தி, அதிலும் முஸ்லிம்களின் பெயர்களை சம்மந்தப்படுத்தி, சில வகுப்புவாத பாசிச சக்திகள் குளிர்காய்ந்து கொண்டிருந்த நாட்களும் கூட! மிக முக்கியமாக, 2002 குஜராத் நரோடா பாட்டியா இனக்கலவர வழக்கு விசாரிக்கப்பட்டு, இந்துத்துவா தீவிரவாதிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கக்கோரிய தீர்ப்பு வெளியாகி ஒரிரு நாட்களே ஆன ஒரு நிலை.

அதே சமயத்தில், பா.ஜ.க.விற்கு எப்போதெல்லாம் இந்துக்களின் ஓட்டுக்களை கவர வேண்டுமோ, அப்போதெல்லாம் அதன் சங்பரிவார் கும்பல் சட்டத்தையும், இந்துத்துவ கொள்கைகளையும் தீவிரமாக கையில் எடுக்கும் ஒரு சூழலை நம்மால் காணமுடியும். இதற்கு 1992ல் ஷஹிதாக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் சம்பவம் ஒரு சரியான உதாரணமாகும். சங் பரிவார் அரசுகள் ஆளும் குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இவ்வருட இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என்பது மற்றொரு தகவல். இத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள கர்நாடகா, எவ்வாறெல்லாம் இந்துத்துவ பிடியில் சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றது என்பதனை சில மாதங்களுக்கு முன்பு “குஜராத்தாக மாறிவரும் கர்நாடகா” என்று தலைப்பிட்ட கட்டுரையில் நாம் தொகுத்தளிதிருந்தோம்.

கைது நடவடிக்கை

29 ஆகஸ்ட் 2012: 2006 ல் மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானிய தீவிரவாதியான கசாபின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதேசமயம் இவ்வழக்கில் திட்டமிட்டு பலிகடாவாக்கப்பட்ட பஹிம் அன்சாரி, சபாபுத்தீன் ஆகிய அப்பாவி முஸ்லிம்களை நிரபராதிகள் என்று அறிவித்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஒரு பக்கம் நிரபராதி முஸ்லிம்கள் விடுவிப்பு; மறுபுறத்தில் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை. இச்சூழல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். வெகு நாட்களாக மறுக்கப்பட்டு வந்த நீதி, மீண்டும் மலர்ந்து வருவதை கண்டு இந்திய முஸ்லிம்கள் சந்தோஷத்தில் ஆழ்திருந்த நேரம் அது. மறுநாள் சூரியனும் உதித்தது. ஆகஸ்ட் 30,2012 முஸ்லிம்களின் இம்மகிழ்ச்சி தற்காலிகமானது என்று நிரூபிக்கப்பட்டது.

ஆம், அப்பாவி முஸ்லிம்களின் கைதுகள் மீண்டும் தொடங்கின. கர்நாடக குற்றப்பிரிவு 30 ஆகஸ்ட் அன்று முதல் கட்டமாக பெங்களுர் மற்றும் ஹூப்ளியில் 11 இளைஞர்களை தீவிரவாதிகள் என்று கூறி கைது செய்தது. ஜே.சி. நகர் உள்ள முபாரக் முஹல்லாவை சார்ந்த ஷுஹைப் அஹமத் மிர்சா (25), அப்துல்லா என்கின்ற அப்துல் ஹகீம் ஜமீந்தார் (25), அஜாஸ் முஹம்மத் மிர்சா (25), முஹம்மத் யூசுப் நல்பந்த் (28), ரியாஸ் அஹமது பைஹதி (28), மற்றும் முத்தீயுர் ரஹ்மான் சித்தீகி (26), ஆகியோர் பெங்களுரிலும், இம்ரான் பகதூர் (24), முஹம்மது சாதிக் லஷ்கர் (28), வாஹித் ஹுசைன் (26), மெஹபூப் பகால்கொட் (26), மற்றும் டாக்டர் ஜாஃபர் இக்பால் ஹூப்ளியிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கம் போல் இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹர்கதுல் ஜிஹாதி இஸ்லாமி போன்ற சர்வதேச இயக்கங்களுடன் தொடர்பிருப்பதாக கூறிவருகிறது காவல்துறை.

குஜராத்தில் போலி என்கௌண்டர்களின் காரணிகளை (மோடி, அத்வானி, தொகாடியா ஆகியோரை தீவிரவாதிகள் கொள்ளவந்துள்ளதாக கூறி, அப்பாவி முஸ்லிம்களை கொன்றழிப்பது) போலவே இங்கும் போலீஸார் பழைய வசனத்தையே எழுதுகின்றனர். இவ்விளைஞர்களின் கைதின் மூலம் மிகப்பெரியதொரு அசம்பாவிதத்தை தடுத்துவிட்டார்களாம் காவல்துறையினர். இந்த இளைஞர்கள் சவுதி அரேபியாவில் பயிற்சி பெற்றவர்களாம். கர்நாடக எம்.எல்.ஏ.கள்., எம்.பி.க்கள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய மீடியாகாரர்களை கொலை செய்ய தங்களின் தலைமையின் கட்டளையுடன் வந்திருந்ததாகவும் கூறுகிறது போலீஸ். இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் இதுபோன்ற தீவிரவாதிகள் அவ்வப்போது வந்து செல்கின்றார்கள் என்ற போலீஸாரின் கூற்றுதான்!

ஒரு நாள் கழித்து இக்கைதுகள் மற்ற இடங்களுக்கு பரவின. செப்டம்பர் 1 அன்று, ஹைதராபாத்தை சேர்ந்த உபைதுர் ரஹ்மான் என்ற இளைஞன், முன்பு கைது செய்யப்பட்டவர்களுக்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டார். மேலும், ஆந்திராவை சேர்ந்த இந்துத்துவ வாதிகளை கொலை செய்யவும் அவர் திட்டம் தீட்டினார் என்பது அவர் மேல் சுமத்தப்பட்டுள்ள பழி. அதே தினத்தன்று நான்கு முஸ்லிம் இளைஞர்களை மஹாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்பு படை நந்தித் நகரில் வைத்து கைது செய்தது. இதை ஏ.டி.எஸ். தலைவர் உறுதி செய்தாலும், கைதானவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இவர்கள் மகாராஷ்டிரா மாநித்தில் உள்ள கைகா அணுஆயுத கூடத்தை தகர்க்க திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்கைதுகள் இத்துடன் நிற்கவில்லை. ஓரிரு நாட்கள் கழித்து, செப்டம்பர் 3 அன்று, பெங்களுர் குற்றப்பிரிவு போலீஸ் டாக்டர் நயீம் சித்தீகி என்ற மருத்துவரை, தீவிரவாதிகளுக்கு பணம் மற்றும் ஆதரவு அளித்தாக கூறி கைது செய்தனர். கடந்த கால அனுபவங்களின் படி, காவல்துறை இதுவரை ஏழை முஸ்லிம்களை தான் பிடித்துச் செல்லும். இம்முறை வழக்கத்திற்கு மாறாக கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வசதிபடைத்தவர்களும் சமுதாயத்தில் நல்ல மதிப்பினை பெற்றவர்களும் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்கள், ஒரு சிறந்த பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர், பட்டம் மற்றும் உயர்கல்வி பயின்ற இளம் மாணவர்களும் அடங்குவர். இவை அனைத்தும் ஒப்பிட்டு பார்க்கையில், வட மாநிலங்களில் நிலவிய அப்பாவி முஸ்லீம்களின் கைது நடவடிக்கை தற்போது தென் இந்தியாவையும் தாக்கியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

பெற்றோர்கள் குமுறல்

சில பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கைதாகி மூன்று நாட்கள் கழிந்தும் வெளி நிலவரங்கள் தெரியவில்லை. அவர்களை தேடியபடியே காவல்துறையினரை அணுகிய பிறகே கைது பற்றிய தகவல் தெரியவருகிறது. பல பெற்றோர்கள் மீடியாக்களின் மூலம் தான் தங்கள் மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிந்து கொண்டனர். சிலர் வீடுகளுக்கு மட்டும் போலீஸ் தொலைபேசியில் தகவல்களை தெரிவித்தது. ஆனால் எதற்காக கைது செய்தீர்கள்? என்ற பெற்றோர்களின் கேள்விக்கு அழைப்பு துண்டிப்பே பதிலாக இருந்தது. தங்கள் மகன்களின் கைதை அறிந்த பெற்றோர்களின் மனம் சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆளானது. அவர்களின் ஏக்கமும், பரிதவிப்பும் கல்நெஞ்சக்காரனையும் ஈரப்படுத்தியது. “என் மகன் அப்பாவியே! அவனை வேண்டுமென்றே காவல்துறை சதி செய்து சிக்கவைத்துள்ளது! என் மகன் மிகவும் நல்லவன்! தீவிரவாத போக்குகளை ஒருபோதும் அவன் ஆதரிக்காதவன்!” இது போன்ற வார்த்தைகளே பெற்றோர்களின் நாவிலிருந்து காவல் நிலையத்திலும், சிறைச்சாலையிலும் ஒலித்தது.

ஹைதராபாத்தை சேர்ந்த உபைதுர் ரஹ்மான் ஆகஸ்ட் 30 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மறுதினம் இரவு பெங்களுர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரின் கைது குறித்து காவல்துறையினர் முறையான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. தன் மகன் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் பொழுது “ஹைதராபாத் காவல்துறை தங்களின் முழு அதிகாரங்களையும் பிறமாநில காவல்துறைக்கு வழங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன்” என்று கௌசர் சுல்தானா தெரிவித்தார்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் உபைதுர் ரஹ்மான் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்றும் இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். குஜராத் வழக்கு ஒன்றில் அநியாயமாக கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட மௌலானா நஸ்ருதீன் அவர்களின் உறவினர் தான் இந்த உபைதுர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட முத்தியுர் ரஹ்மான் சித்தீகி டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்துள்ளார். அஜாஸ் முஹம்மது மிர்சா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கண்ணியமான பணிகளில் பணியாற்றி வந்த இவர்களையும் தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கர்நாடகா காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்களை கைது செய்த பின்னரும் வழக்கமான கதைகளையே காவல்துறை கூறியது. இவர்களில் சிலரை கைது செய்த பொழுது அவர்கள் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்தாக பெங்களுர் காவல்துறை உயர் அதிகாரி லால் ரோகுமா பச்சாவு தெரிவித்தார். க்ரைம் நாவல்களில் வரும் கற்பனையும் மிஞ்சிவிடும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார் இந்த உயர் அதிகாரி.

இவர்கள் அல்லாமல் வேறு சிலரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.

கண்டனங்கள், எதிர்ப்பலைகள்

வழக்கம் போல, இக்கைதுகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. மனித உரிமை ஆணையங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டும தான் தங்கள் விமசர்களர்களை வெளியிட்டது. The Civil Liberties Monitoring Committee என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இக்கைதுகளை கண்டித்தும், மத்திய அரசின் தலையீட்டினை வலியுறுத்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மனு ஒன்றை அனுப்பிவைத்தது. அதில் “நாடு முழுவதும் காவல்துறையினரின் முஸ்லிம் இளைஞர்களின் வேட்டை ஒரு நேர்மையற்ற செயலும், உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இது காவல்துறையில் உள்ள சில காவி கறைபடிந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கைதாகும். மேற்கொள்ளப்பட்ட கைதுகளும் சட்ட விரோதமாகத்தான் நடைபெற்றுள்ளது. ஆதாரங்களின் படி கைது நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்வதற்கு முன்கூட்டியே, இவ்விளைஞர்கள் காவல்துறையினரின் கஸ்டடியில் இருந்துள்ளனர். பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளை விசாரிக்க நடுநிலையான போலீஸ் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்று கோமு சௌஹார்த்த வேதிகே என்ற மனித உரிமை ஆணையங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.எல். அசோக் கருத்து தெரிவித்தார். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பக்கம் தீவிரவாதிகளாகவும், மறுபக்கம் அரசிற்கெதிராக அவர்கள் குரல் கொடுத்தால் மாவோயிஸ்ட்களாகவும் சித்தரிக்கப்படுவது வருத்தத்திற்குரியது. சிறுபான்மையினருக்கு எதிரான வேட்டைகளில் மீடியா நீதிமன்றமாக செயல்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் ஏ.கே. சுப்பையாவும் இக்கைதுகளை போலியானதொரு நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார். போலிஸாரின் இந்நடவடிக்கைக்கு பின்புலமாக அரசு இயந்திரங்கள் இல்லை. மாறாக இந்துத்துவ இயக்கங்களே உள்ளன. காவல்துறையினரின் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) ஒன்றே இவ்வழக்குகள் பொய் என்று நிரூபிக்க போதுமானது என்றார் அவர். “சரியான முஸ்லிம் இளைஞர்களை தேர்ந்தெடுத்து, இந்தியாவில் பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்து, பின்னர் பெங்களுரில் அவர்களுக்கெதிராக அடிப்படையற்ற கடுமையான குற்றங்களை சுமத்தி வழக்குகளை தொடுப்பது, இது முன்கூட்டியே சரியாக திட்டம் தீட்டடப்பட்ட ஒரு சதிச் செயல் என்பதாக வஹ்தத்இ இஸ்லாமி இயக்கத்தின் தலைவருமான மௌலான நசீருத்தின் அவர்கள் கூறியுள்ளார். முஸ்லிம்கள் அனைவரும் இதற்கெதிராக ஒன்று திரண்டு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற பல்வேறு தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

வழக்கமாக முஸ்லிம்கள் படிப்பது கிடையாது. இதுதான் அவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களில் பலரும் கூறி வந்தனர். ஆனால் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் கல்வி கற்று பல சிக்கல்களுக்கு மத்தியில் வேலையிலும் அமர்ந்துள்ள இளைஞர்களை குறிவைத்து காவல்துறையும் உளவுத்துறையும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இடங்களில் தான் என்றில்லாமல் தற்போது இந்நிலைமை அனைத்து மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும் தயங்கும் நிலை ஏற்படும்.

இந்த விவகாரத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் தங்களின் கடமையை மறந்து செயலாற்றினர். விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட உபைதுர் ரஹ்மானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்று தெலுங்கு பத்திரிகைகள் தெரிவித்தன. ஆங்கில பத்திரிகைகள் அவரை ஹுஜி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறினர். இதே அளவுகோலை தான் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விஷயத்திலும் கையாண்டனர். அப்பாவிகளின் வாழ்க்கையை சீரழிப்பதில் இத்தகைய பத்திரிகைகளும் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.

இத்தகைய மோசமான நிலையை மாற்றுவதற்கு அனைவரும் முன் வரவேண்டும். இல்லையென்றால் இந்த விஷச்செடி மற்ற இடங்களுக்கும் பரவுவதை நம்மால் தடுக்க முடியாது. நாட்டின் நலன் கருதி அனைவரும் இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :