Share on
கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருந்தாலும், நிர்வாக ரீதியாக தமிழ் சகோதரர்களே அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ துறை தலைவர் வ.கனகசிங்கம் எழுதிய ‘நவீன முகாமைத்துவ நடைமுறைகள்’ எனும் நூலின் வெளியீட்டு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“இன்றுள்ள கிழக்கு மாகாண சபையானது அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் அதிகாரங்கள் கூடியதொரு சபையாக உள்ளது. ஒரு இஸ்லாமிய அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்ற தொரு சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கிடைத்து இருக்கின்றது.
இன வேறுபாடுகளை மறந்து, இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, முழுக் கிழக்கு மாகாணத்தினையும் முன்னேற்றிக் காட்டுவோமாக இருந்தால் முழு இலங்கைக்கும் உதாரணமாக கிழக்கு மாகாணம் திகழும். மாகாண சபை முறைமையினூடாக எடுத்துக் காட்டான வெற்றிகளை நாம் அடைந்து கொள்ளும் போது, மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் சிந்தனைகள் எடுபடாமல் போய்விடும்.
கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருந்தாலும், நிர்வாக ரீதியாக தமிழ் சகோதரர்கள் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆகையினால் இம்மாகாண சபையில் அரசியலில் இருப்பவர்களும் நிர்வாகிகளும் இன, மத பேதங்களை மறந்து நியாயமான முறையில் ஒருங்கிணைந்து செயற்பட்டால் வெற்றிகரமான கிழக்கு மாகாணத்தினை காணலாம்.
ஒரு மாகாண சபையானது அதனுடைய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாக இருந்தால் அதனை அழிக்க முடியாது. இன்று மாகாண சபை முறைமையினை இல்லாமலாக்கப் போவதாக அரசியல் அரங்கில் பல்வேறு பேச்சுக்கள் உலாவுகின்றன. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாமலாக்குவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை எதுவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.
மாகாண சபைக்குரிய அதிகாரங்களை சரியான முறையில் அமுல்படுத்த முடியுமாக இருந்தால், மாகாண சபை முறைமை வெற்றிகரமானதாக மாறும். வெறுமனே அமரந்து கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், மாகாண சபைகளின் வளங்களையும், அதிகாரங்களையும் நன்கு பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகளாக இருப்போமாயின் மாகாண சபைகளை வெற்றிகரமானதாக மாற்ற முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment