இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக குழுவினர் நீதியமைச்சரை சந்தித்தனர்.

Share on


சிறைப் பிடிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழ் கைதிகளில் பாரதூரமான குற்றம் சுமத்தப்படாத, போதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் அற்ற பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இன்னும் சிறு தொகையினரே விசாரணையை எதிர்நோக்கி எஞ்சியிருப்பதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் அவற்றை மேற்கொள்ளுமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவித்தார்.

அத்துடன், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விஷேட செயலணி செயல்திட்டமொன்றையும் வகுத்துள்ளதோடு, கால அட்டவணையொன்றின்படி படிப்படியாக அவை அமுல்படுத்தப்படுமென்றும் பிரஸ்தாப தூதுக்குழுவினரிடம் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.  

நிதியமைச்சில்  வியாழக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவற்றைக் குறிப்பிட்டார்.   
நியூயோர்க் நகரிலிருந்து இங்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையினதும் கொலம்பியா பல்கலைக் கழகத்தினதும் இந்த உயர்மட்டத் தூதுக்குழுவுக்கு ஜப்பானின் ஐ.நா. பிரதி நிரந்தர பிரதிநிதி கசுவோ கொடாமா தலைமை தாங்குகிறார். பங்களாதேஷ், நைஜீரியா, ரோமானியா ஆகிய நாடுகளின் ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதிகளுடன் அதன் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹனவும் இதில் இடம்பெற்றுள்ளார். இத்தாலி, தென்னாபிரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளின் தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் இக் குழுவில் உள்ளடங்குகின்றனர். 

அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாபக் குழுவினரிடம் விளக்கமளிக்கும் பொழுது, சர்வதேச சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் என்ற முறையில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டை சரிவரப் புரிந்துகொண்டு செயல்படுவதாகவும், யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் தற்பொழுது சிறைகளிலும் தடுப்புக் காவலிலும் உள்ள தமிழ் கைதிகள் விஷயத்தை காலதாமதமின்றி அணுகி உரிய தீர்வுகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பாக தமது அமைச்சு சட்டத்தோடும், நீதித்துறையோடும் சம்பந்தப்பட்ட அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். 

வழக்குத் தாமதத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில் தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் மன்னார், வவுனியா, அனுராதபுரம், கொழும்பு சிறைச்சாலை என்பவற்றில் விஷேட மேல் நீதிமன்றங்கள் மேற்கொள்வது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்க் கைதிகள் விவகாரத்தை கையாள்வதற்கென அவர்களது ஆவணங்களை 15 பேர் கொண்ட அரச சட்டத்தரணிகளை சட்டமா அதிபர் ஈடுபடுத்தியிருப்பதாகவும் சொன்னார். 
தமிழ் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து விளக்கமளிக்கும் பொழுது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அறவே இடமளிக்கப்படுவதில்லையென்றும், எடுத்துக்காட்டாக, இம்சைக்குள்ளாக்கப்படும் ஒருவர் எந்தவொரு விஷயத்திலும் குற்றவாளிகளாக காணப்படும் மற்றும் சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படையினர், பொலிஸார் சார்பில் நீதிமன்றங்களில் தோன்றி வழக்காடுவதற்கு அரச சட்டத்தரணிகளை அமர்த்துவதில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

எல்.ரீ.ரீ.ஈ ஈடுபாடு கொண்ட தமிழ் கைதிகள் விஷயத்தில் நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கும் வேளையில் குற்றம் புரிந்ததாக கூறப்படும் படைத்தரப்பினர் குறித்து எவ்வாறான நடைமுறை கையாளப்படுகிறது என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் பொழுது, அமைச்சர் ஹக்கீம் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகள் தொடர்பில் தமது அமைச்சு பதில் கூற முடியாதென்றும் கோர்ட் மார்ஷல் எனப்படும் இராணுவ நீதிமன்றமே அதற்குப் பொறுப்பென்றும், அது பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்த விடயமென்றும் கூறினார்.
சிறுபான்மை மக்களைப்பொறுத்தவரை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி தூதுக்குழுவில் இடம்பெற்ற நைஜீரியாவின் ஐ.நா. பிரதி நிரந்தர பிரதிநிதி உஸ்மான் ஷர்க்கி கேட்டபோது, அவருக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தாம் இந் நாட்டின் சிறுபான்மை சமூகம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசியலில் உரிய இடம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்றார். 

அதிகாரப் பகிர்வு பற்றி அவர் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகள் ஊடாக அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், வடக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகள் உரிய முறையில் செயல்பட்டு வருவதாகவும், எஞ்சியுள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடாத்தப்பட இருப்பதாகவும் சொன்னார். 

உள்ளுராட்சி அமைப்புகளும் நாட்டின் வடகிழக்கு உட்பட எல்லா மாகாணங்களிலும் செயல்படுவதாகவும் உள்ளுராட்சி நாட்டின் வடகிழக்கு உட்பட முல்லைத்தீவு தவிர ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறப்பாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார். 
நாட்டின் இனப்பிரச்சினை தீர்வின் முக்கியத்துவம் கருதி அதற்கான உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை உள்வாங்குவதற்கான உச்சகட்ட ஈடுபாட்டை இலங்கையில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மேற்கொண்டு வருவது பற்றி மகிழ்ச்;சி தெரிவித்து தூதுக்குழுவினர் மத்தியில் அவரைப் பாராட்டிய அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் நல்ல முன் அனுபவம் கொண்ட தென்னாபிரிக்காவின் பங்களிப்பை சிலாகித்துக் கூறினார். 

ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளினதும், கொலம்பியா பல்கலைக்கழகத்தினதும் இந்த உயர்மட்டத் தூதுக்குழுவினர் இலங்கையில் இம் மாதம் 9 ஆம் திகதி வரை தங்கியிருப்பர். 


டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர் 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :