Share on
நீதியமைச்சின் ஊடகப் பிரிவு
இலங்கைச் சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் விவகாரம் பற்றி உரிய கவனம் செலுத்தப்படுமென்றும், அவர்களுக்கான தண்டனை மற்றும் தண்டனை அனுபவிக்கும் காலம் என்பன தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டை களைவதற்கு ஏதுவாக இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உடன்பாடு காணப்படுவது மிகவும் அவசியமாக இருப்பதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமது பதவிக்காலத்தின் முடிவில் இங்கிருந்து நாடுதிரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் திருமதி சீமா பலோச், அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பிரியாவிடை பெறுவதற்காக திங்கள் கிழமை (03) முற்பகல் நீதியமைச்சில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய போது, இங்கு சிறைவாசம் அனுபவிக்கும் பாகிஸ்தான் கைதிகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் சட்டங்களுக்கும், இலங்கையின் சட்டங்களுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளதால் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனைகள், தண்டனை அனுபவிக்கும் காலம் என்பன தொடர்பில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் எடுத்துக்காட்டாக பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒரு கிலோவுக்கு அதிகமான போதைப்பொருளை வைத்திருப்பவருக்கே சிறைதண்டனை விதிக்கப்படுவதாகவும், இலங்கையில் இரண்டு கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் தண்டனை வழங்கப்படுவதாகவும் கூறியதோடு, அந் நாட்டைச் சேர்ந்த கைதியொருவர் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதன் பின்னர் நிகழக்கூடியவற்றையும் விபரித்தார். இலங்கைச் சிறைகளில் 20 பாகிஸ்தான் கைதிகள் உள்ளதாகவும், அவர்கள் போதைப்பொருள் மற்றும் வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னர் குற்றச்செயல்கள் தொடர்பான கைதிகள் விவகாரம் பற்றி இரு நாடுகளுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை இருந்ததாகவும், இன்றைய சூழ்நிலையில் காலமாற்றத்திற்கு ஏற்ப அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் தாம் விரைவில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தண்டனைக் கொள்கைச் சட்டத்தின் கீழ் குற்றச்செயல்கள், அவற்றுக்கான தண்டனைகள் என்பன பற்றி திட்டவட்டமாக வரையறுக்கப்படுமென்றும் நீதியமைச்சர் ஹக்கீம் கூறினார். அத்துடன், ஏறத்தாழ ஒரேவிதமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பொஸ்வானாவில் நடைபெறவுள்ள நீதியமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் நீதியமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
முஸ்லிம் நாடுகளின் உல்லாச பயணிகளை இலங்கைக்கு ஈர்த்தெடுக்கும் விதத்தில் இஸ்லாமிய சமய, பண்பாட்டு, கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் விதத்திலும் அவற்றுக்கேற்ப அவர்களுக்கான தங்குமிட வசதிகள் முதலானவற்றை செய்து கொடுப்பது பற்றி அமைச்சர் ஹக்கீம் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அபிப்பிராயத்தை கேட்டறிந்தார்.
இஸ்லாமிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளினதும் வர்த்தக சந்தைகளை (ஈத் பஸார்) முஸ்லிம்களின் பெருநாள் தினங்களை அண்டியதாக தலைநகர் கொழும்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதன் மூலம் அந் நாடுகளின் உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏனையோருக்கும் கிட்டும் என்று இருவரும் ஏற்கனவே கலந்துரையாடிய விடயம் தொடர்பில் மேலும் கருத்துப்பறிமாற்றங்களை அவர்கள் மேற்கொண்டனர்.
மேற்கு நாடுகளிலிருந்து இங்கு வரும் இராஜதந்திரிகளிலும் ஏனைய உயர் அதிகாரிகளிலும் சிலர் இலங்கை முஸ்லிம்களுக்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு உண்டா என்றும், எந்த வெளிநாடுகளின் நிதி உதவி, பயிற்சி என்பன அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் அறவே அடிப்படையற்றதும், அவசியமற்றதுமான கேள்விக்கணைகளை தம்மிடம் தொடுப்பது குறித்து தாம் ஆழ்ந்த மனவேதனை அடைவதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்
0 comments :
Post a Comment