Share on
meelparvai
அரசாங்கத்தை வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பதால் சமூகத்திற்கு எவ்விதப்பயனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே, அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சமூகத்திற்கு அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தை ஆதரிக்க முன்வந்ததாக மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எம்.ஆர்.எம். ஹம்ஜாத் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான எம்.ஆர்.எம். ஹம்ஜாத் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு தனது ஆதரவை வழங்கினார்.
இந்நிலையில் புதன்கிழமை 05.12.2012 கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபர் சி.எம்.எம். மஹ்பூப் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விழாவில் தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
நாம் வெளியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து திரிவதால் சமூகத்திற்கு எப்பயனும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் பேரில் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தேன்.
கண்டியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் அவசியம் உணரப்பட்டுள்ளது. ஆனால் கண்டி முஸ்லிம்களின் இக்கனவு இதுவரை நனவாகவில்லை. இதற்கு மத்திய மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்மையும் ஓர் பலமான காரணமாகத் தெரிவிக்கபட்டு வருகின்றது. இக்குறைபாட்டை நாம் நீக்க வேண்டும். இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்ந்தும் இருப்பதால் சமூகத்திற்கு சேவையாற்ற முடியாது. நாட்டில் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி காணும் போது முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் அபிவிருத்தி காண வேண்டும். எனவே எனது கட்சி அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது.
மலையகத்தில் இ.தொ.கா தலைமைத்துவம் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு வழங்கி வரும் ஆதரவின் மூலம் மத்திய மாகாண தமிழ் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கண்கூடாக காணலாம். மத்திய மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு போதிய பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுத்து முஸ்லிம் கல்விக்கு கைகொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment