மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து
இடைத்தங்கல் முகாமில் வாழும் மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர உதவிகளை
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கியுள்ளது.இவ் உதவிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் பேரவை குழுவினர் வழங்கினர்.
வாகரைப் பிரதேசத்தில் உள்ள ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் உள்ள 35 குடும்பங்களுக்கு பாய் எழுபது, வெற்சீற் முப்பத்தைந்து, பால்மா முப்பத்தைந்து, ஊரியன்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு பாய் முப்பதிரண்டு, பால்மா பதினாறு, வெற்சீற் பதினாறு, வாகரை அழகாபுரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் உள்ள 29 குடும்பங்களுக்கு பாய் ஐம்பத்தி எட்டு, பால்மா இருபத்தொன்பது, வெற்சீற் இருபத்தொன்பது மற்றும் தட்டுமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள 141 குடும்பங்களுக்கு பாய் இருநூற்று எண்பத்திரண்டு, பால்மா நூற்றி நாற்பத்தி ஒன்று, வெற்சீற் நூற்றி நாற்பத்தி ஒன்று என்பன இவர்களால் வழங்கப்பட்டது.
மேற்தரப்பட்ட உதவிகளுக்காக அகில இலங்கை இந்து மாமன்றம் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கியிருந்தது. இவ்உதவியை புரிந்த அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், மட்டக்களப்பு மாவட்ட மக்களும் நன்றியை தெரிவிக்கின்றனர்.
இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் ஊரியன்கட்டு, கதிரவெளி ஆகிய கிராம இடைத்தங்கல் முகாம்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு 400 பாண் உதவியையும் அவசரமாக வழங்கியது.
0 comments :
Post a Comment