புதிய ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் - பைஸர் முஸ்தபா வாழ்த்து

ஐ. ஏ. காதிர் கான்-

நாட்டை உண்மையாக நேசிக்கின்ற, குடிமக்களின் சிறந்த நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவரான புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலிமையும் மனோ தைரியமும் கிடைக்க வேண்டுமென, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு கோட்டாபய ராஜபக்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு என்னுடையதும் கொழும்பு வாழ் மக்களினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் இன, மத, மொழி பேதமின்றி சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை, பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் நிச்சயம் செயற்படுவார். 

புதிய ஜனாதிபதி அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு கொழும்பு நகரையும் நாட்டையும் மீண்டும் அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு.

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ்வின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு ஒத்துழைத்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் போன்றவற்றுக்கு ஆதரவாக மக்கள் தமது தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இத்தருணத்தில், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையர்கள் எனும் உயரிய நோக்கோடு எமது தேசத்தினை அழகிய முறையில் கட்டியெழுப்ப முன்வருமாறு, அனைவரிடமும் அன்பு அழைப்பு விடுக்கின்றேன்.

தேசப்பற்றுக்குக் கிடைத்த இந்த வரலாற்று வெற்றியில் குறுகிய வேறுபாடுகளை மறந்து அனைத்து முஸ்லிம்களும் இத்தருணத்தில் ஒன்றிணைய வேண்டும். பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்புக்கள், அபிலாஷைகளுக்கு இணங்கிச் செல்வதே சிறுபான்மைச் சமூகங்களாகிய எங்களைப் பாதுகாக்கும். 

எனவே, இச்சந்தர்ப்பத்தில் நாம், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள
கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். இதற்கு பெரும்பான்மைச் சமூகத்துடன் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்.

இதுவே பிரிவினைகளைத் தோற்கடித்து, தேசப்பற்றைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -