நூலறிமுகம் -கிராமத்து உள்ளங்கள்

நூல் : கிராமத்து உள்ளங்கள்
நூலாசிரியர் : மூ. அருளம்பலம் (ஆரையூர் அருள்)
(நாட்டாரியர்)
வெளியீடு : புரவலர் புத்தகப் பூங்கா
விலை : ரூ.250.00

நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்

கிராமம் என்பது இயற்கையின் அருள்கொடைகள் நிறைந்துள்ள பிரதேசமாகும். அங்குள்ள மக்களும் இயற்கையை இரசித்து, ருசித்து வாழ்கையை கொண்டுசெல்வர். அந்த இயற்கைக்கே உரித்தான பல விடயங்கள் இன்றைய நவீனத்துவத்தின் காரணமாக மங்கி மறைந்து கொண்டு செல்வதையும் பார்க்கின்றோம். அதனை மங்கவிடாது அதனைப் பாதுகாத்து நூலுருவாக்கியுள்ளார் கவிஞர் ஆரையூர் மூ. அருளம்பலம்.

பொதுவாக இயற்கைக் கவிஞர்களாகிய பாமர மக்கள் தங்கள் அனுபவத்தைக் கற்பனைக் களஞ்சியமாகக் கொண்டு பாடப்படுபவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் என்கிறோம். தமக்கிடையே தான்கொண்டுள்ள இன்பத்தைப் பாட்டால் பகிர்ந்து கொள்ளவும் சோர்வை போக்கிக் கொள்ளவும் வாய்மொழியாகத் தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை, விளையாட்டு, பழமொழி ஆகியவற்றின் ஊடாக வெளிப்படுத்துவர். தொல்காப்பியர் வாய்மொழி பண்ணத்தி என்று சுட்டுவதும் இவ்வகையான நாட்டுப்புறப் பாடல்கயே ஆகும். மக்கள் தங்கள் வாழ்வியலிலும் வாழ்வியல் முறைகளிலும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்வர். ஆனால் இவை மங்கி மறைந்து கொண்டு வருவதையும் நாம் காணலாம். கிழக்குமாகாணத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு கிராமங்களிலும் இவை காணப்பட்டாலும் அதன் செழுமையை, தொண்மையை காலமறிந்து மேற்கொண்ட கவிஞர் மூ. ஆருளம்பலம் போற்றத்தக்கவராவார்.

இந்நூலுக்கான ஆசியுரையனை சிவபதி. கணேச சோதிநாதக்குருக்கள் வழங்கியுள்ளார். 'எமது சமுதாயம் பாரம்பரியமாகப் பின்பற்றிவருகின்ற நாட்டாரியல் அம்சங்கள் இன்று நவீனம் என்ற போர்வையில் வழக்கொழியும் துர்ப்பாக்கிய நிலை தோன்றி வருகிறது. இதனைத் தடுத்து, காலத்தின்தேவை கருதி காத்திருக்கின்றார் ஆரையூர் அருள்' என்கிறார் குருக்கள் ஐயா. பேராசிரியர் செ. யோகராசா அவர்களின் அணிந்துரையில் 'இலங்கையின் தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற பெரும்பாலான பிரதேசங்களில் காணப்படுகின்ற பலவகையாக நாட்டார் பாடல்களையும் இயன்றளவு விளக்கியுள்ளார்' எனக் கூறுகின்றார் பேராசிரியர் செ.யோகராசா.

நூலின் உள்ளே நுழைந்தால் 'நாட்டாரிலக்கியம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் 'கல்வியறிவோ, பாடசாலை அனுபவமோ பெறாத பல இயற்கவிகள் கூட அவ்வப்போது தமது அனுபங்களை மூலதனமாகக் கொண்டு தாம் வாழ்ந்துவந்த கிராமியச் சூழலிலே கவித்துவ உணர்வோடு பலநயமும் செறிவும் மிக்க கவிகளையாத்து பிரமிக்கச் செய்தோடு, அவை காலம் காலமாக நாட்டாரியல் என்ற புதுமுறை இலங்கியங்களாக வளர்ந்து வந்திருக்கின்றன. இது தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கு மட்டும் ஏற்புடையதன்று. உலகில் தோன்றி வளர்ந்த செழுமை மிக்க மொழிகள் ஒவ்வொன்றுக்கும் உரித்தான ஒருமுறைமையே இது' என்கிறார் நூலாசிரியர்.

நாட்டாரியலின் மற்றொருவகைப் பாடலான தாலாட்டின் சிறப்புக்கள் பற்றியும், அதன் வடிவங்களில்; காணப்படுகின்ற பல்வேறு விடயங்களையும் இரத்தினச் சுருக்கமாகத் தந்துள்ளார். பொதுவாக குழந்தைகளைத் தாலாட்டுக்கின்ற ஒரு முறையாகவே இதனைக் கூறமுடியும். உதாரணங்களாக பல பாடல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர். குறிப்பாக சில பிரதேசங்களில் கையாளப்படுகின்ற தாலாட்டுக் களையும் குறிப்பிடும் நூலாசிரியர் பொத்துவில் பிரதேசத்தில் வாழ்ந்த பிரபல்யமிக்க புலவரான எஸ்.சேகு தாவூது அவர்களின் பாடலொன்றையும் இங்கு தந்துள்ளார்
ஆராரோ... ஆரிவரோ...
ஆருபெத்த பாலகரோ...
சீரும் சிவத்தேழை பெத்த
செல்வ மகனே நித்திரைசெய்
கற்பகக் குவளையில்
கண், காது, வாய், மூக்கு
உற்பத்திய நாயகனே – நீ
உத்துணர்ந்து நித்திரைசெய்
ஆசைக் கடலடிக்க
அல்லாஹ்வை நீ உணர்ந்து.... என்று தொடரும் அந்தப்பாடல் குழந்தையை நித்திரை செய்வதாக பாடப்படுகின்ற தாலாட்டுப் பாடலாகும்.

பிள்ளைகளின் விளையாட்டுப் பாடல்கள் எனும் தலைப்பில் பல்வேறு பாடல்களைத் தந்துள்ள கவிஞர். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, தாமரைப்பூவே சாந்தாடு, குத்துவிளக்கே சாய்ந்தாடு, கோவில் புறாவே சாய்ந்தாடு, பச்சைக் கிளியே சாய்ந்தாடு, பவளக் கொடியே சாய்ந்தாடு... என்கிற எல்லோருக்கும் தெரிந்த வரிகளும் இவரது குழந்தைகளின் விளையாட்டுப் பாடலில் இடம்பெறுகின்றன. கிட்டியடித்தல் விளையாட்டு, சங்கு விளையாட்டு, வேடிக்கைப் பாடல், களையெடுப்பு பாடல், தோனிக்காரன் பாடல், மலையகத் தோட்ட தொழிலாளர்களின் பாடல் போன்ற பல்வேறு பிரதேசப் பாடல்களையும் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார் நூலாசிரியர்.

மேலும், ஒப்பாரிப் பாடலில் தாய் ஒருவர் சிறுவயதில் இறந்துபோன தன் மகனை நினைத்து இவ்வாறு பாடுகின்றார். என்ர மகனே, பத்துக் கட்டுப் பனை யோல, நீ படிக்கும் சுருள் ஓல, படிப்பாய் என்றிருந்தேன், படித்து முடிய முன்னே பாலனுன்னை ஒப்படைத்தேன்... என்கிற வரிகள் கனதியானதாகவே உள்ளது.

நாட்டாரிலக்கியத்தில் மற்றொரு வகையான பழமொழிகளின் வகிபாகம் பற்றியும், நாட்டார் கதைகளின் பங்கு பற்றியும், கதைப்பாடல்கள் பற்றிய பார்வையும் என்கிற தலைப்புக்களிலும் ஓரளவுக்கு ஆராய்ந்து அதன் தாக்கம் நாட்டாரியலில் எந்தளவுக்கு காணப்படுகின்றது என்கிற வடிவில் தேடலுடன் சில சான்றுகளின் அடிப்படையில் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ள இந்நூல் கிராமத்திலுள்ள பல்வேறு விடயங்களைக் கூறி கொள்ளை கொள்ளவைக்கிறது.

புரவலர் புத்தகப் பூங்காவின் செயலாளர் சத்திய எழுத்தாளர் கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹூர் கனி அவர்களின் பார்வையில் கிராமத்து உள்ளங்களுக்கு கிரீடம் சூட்டுவோம் எனும் தலைப்பில் நாட்டார் இலக்கியத்தின் மேன்மையைப் பற்றி சிறப்பான முறையில் விளக்கம் தந்துள்ளார். 'பொதுச்சொத்தாகிய சகோதரர் அருளம்பலத்தின் தனிச் சொத்தான கிராமத்து உள்ளங்கள் நூலுக்கு கிரீடம் சூட்டும் இந்த சந்தோஷ சாகரத்தில் நீங்கள் சங்கமமாகிட இன்பத் தமிழால் அழைக்கின்றார் சத்திய எழுத்தார் எஸ்.ஐ. நாஹூர் கனி. மேலும் முன்னுரையில் இந்நூலின் வரவு, இதன் எழுச்சி போன்றவற்றையும், இந்நூலுருவாக்கத்திற்கு உதவியோருக்கும் நன்றி தெரிவிக்கும் நூலாசிரியர், நூலின் பின் அட்டையில் செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஸ்ணன் நூலாசிரியர் பற்றிய சிறப்பான கண்ணோட்டம் ஒன்றையும் தந்துள்ளார். பச்சைப்பசேலனத் தோன்றும் கிராமத்தையே நூலின் அட்டை கொண்டுள்ளமை வாசிப்பவர் மனதையும் நிச்சயம் கொள்ளை கொள்ளும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :