கடற்கரை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி! கல்முனை – சாய்ந்தமருதில் சட்டவிரோதக் கட்டிடங்களை அகற்றக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம்!
“பாரம்பரிய மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்; கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்” – மீனவர்கள் ஆவேசம்!
பாறுக் ஷிஹான்-
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் கடற்கரை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, அப்பகுதி மீனவர்கள் இன்று சனிக்கிழமை (28) வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்கரைப் பகுதிகளில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் முறையற்ற கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்கள், தமது வாழ்வாதாரமான பாரம்பரிய மீன்பிடித் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக, கடற்கரை வீதியை அண்டிய கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும், மீன்பிடித் தொழிலுக்கான அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடற்கரை என்பது ஒரு சிலரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான இடமல்ல; அது மீனவர்களின் வாழ்வாதாரத்துடனும் பொதுமக்களின் உரிமையுடனும் தொடர்புடைய பொதுச் சொத்து என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேவேளை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் கடற்கரைப் பகுதிகளைச் சீரமைத்து அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் வெறுமனே அழகுபடுத்தலுடன் மட்டுப்படுத்தப்படாமல், சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக அகற்றி, கடற்கரையை மீனவர்களும் பொதுமக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மீனவர்களின் வாழ்வாதார உரிமை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கல்முனை – சாய்ந்தமருது கரையோரப் பகுதிகளில் நிலவும் ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
0 comments :
Post a Comment