கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு



நியாயாதிக்கம் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பில் ஆட்சேபனை; மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை

நூருல் ஹுதா உமர்-
கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக, வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் எக்ஸ். எச். விஜயகுமார் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த வழக்கை நிகல்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கின் சட்டரீதியான அம்சங்கள் மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பான தமது நிலைப்பாடுகளை மன்றில் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், மிப்ளால் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சட்டத்தரணிகளான சிபான் மஹரூப், சாரிக் காரியப்பர், எம். வை. அன்வர் சியாத், ஆரிகா காரியப்பர், ஏ.எல்.எம். றிபாஸ், துல்ஹர் நயீன் துல்சன், எம்.ஏ. அன்சில் மற்றும் பீ.எம். றசீன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அதேவேளை, வழக்காளியான டாக்டர் குணசிங்கம் சுகுணன் சார்பில் சட்டத்தரணி லக்சான் டயஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துகளை மையமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அடுத்தகட்ட விசாரணையில் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :