சமூக அமைப்புகளின் சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் செயற்பாடுகளே மஜ்லிஷ் அஷூரா சபையின் அடிப்படை நோக்கங்களாக அமைய வேண்டும் என, சம்மாந்துறை மஜ்லிஷ் அஷூரா சபையின் கௌரவ தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் தெரிவித்தார்.
சம்மாந்துறை மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசலில் புதன்கிழமை (15) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், சமூக அமைப்புகள் தங்களுக்குரிய பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, சட்டப்பூர்வமான நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் செயற்படுவது காலத்தின் அவசியமாகும் என்றார்.
ஜமாஅத் நிர்வாகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் மஜ்லிஷ் அஷூரா ஆகியவற்றின் அதிகார வரம்புகள் தெளிவாக மதிக்கப்பட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தமக்குரிய பொறுப்புகளை நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தில் தோன்றும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் மற்றும் சவால்களுக்கு நடுநிலையான முறையில் தீர்வு காணும் அமைப்பாக மஜ்லிஷ் அஷூரா செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தேவையான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அரச நிர்வாகத்தில் பெற்றுள்ள தனது நீண்டகால அனுபவத்தை சமூக நலனுக்காக அர்ப்பணித்து, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, கலந்தாலோசனை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை மத்தியஸ்தர் சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் மௌலவி எம்.வை. அஹமது ஜலீல் (JP) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம நம்பிக்கையாளர் மௌலவி கே.எம்.கே.ஏ. ரம்சின் காரியப்பர், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எச். பஷீர் மதனி, குவாஸி நீதிபதி அல்ஹாஜ் எம்.எல். தாஸிம் (JP), மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசலின் இமாம் மௌலவி எம்.ஏ.எம். ஜாபீர், மஜ்லிஷ் அஷூரா சபையின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எம். இலியாஸ், செயலாளர் அல்ஹாஜ் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், உலமாக்கள், சமூகப் பெரியார்கள், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, புதிய கௌரவ தலைவருக்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில், மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் நிர்வாகச் செயலாளரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஓய்வுபெற்ற முகாமையாளருமான ஏ. அப்துல் அசீஸ் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை நிர்வாக உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.எச்.எம். சித்தீக் தொகுத்து வழங்கினார்.

0 comments :
Post a Comment