அம்பாறையில் போதைப்பொருள் கும்பலுக்கு அதிரடி முற்றுகை சினிமா பாணியில் துரத்திச் சென்று காரை மறித்த பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க – ஹெரோயினுடன் மூவர் கைது



பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற கும்பலை சினிமா காட்சிகளை நினைவூட்டும் வகையில் துரத்திச் சென்று கைது செய்த அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சனிக்கிழமை (04) அதிகாலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவின் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாலை 3.00 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்துவதற்காக அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சென்றிருந்தனர்.

அப்போது, குறித்த வீட்டின் அருகிலிருந்து இருவர் கார் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்றனர். இதேவேளை, மற்றொரு சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் சென்று தப்பியோடியவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒத்துழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற துரத்தல் நடவடிக்கையின் போது, சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக தப்பியோடிய காரை பொலிஸார் மறித்து நிறுத்தினர்.

அந்த வேளையில், சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திச் சென்ற பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க, காரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக தனது தலைக்கவசத்தை எறிந்து காரை கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காரிலிருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 32, 33 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 15 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு கைத்தொலைபேசிகள், பணம் மற்றும் வங்கி அட்டைகள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பொலிஸார் சோதனைக்காக சென்றடைவதற்கு முன்னரே குறித்த வீட்டில் இருந்த கிலோகிராம் கணக்கான போதைப்பொருட்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு, மோப்ப நாய் பிரிவு மற்றும் ஏனைய புலனாய்வு பிரிவினரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலிலும், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையிலும், பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இதேவேளை, கடந்த மாதமும் நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் இதே பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நடவடிக்கையையும் அப்பகுதி மக்கள் வரவேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :