முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தொகுதி



லங்கை முஸ்லிம்களுக்கென ஒன்பது மாடிகளைக் கொண்ட ஒரு பாரிய கட்டிடத்தொகுதி சுமார் 596 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தால் முஸ்லிம் விவகாரங்களுக்கென வழங்கப்பட்டது. இதனை 2017 ஜனவரி 17ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வைபவரீதியாகத் திறந்து வைத்தார்கள்.

இக்கட்டிடம் இல. 180, டி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரியில் அமைந்துள்ளது. மருதானைப் பாலத்திலிருந்து நோக்கும்போது, இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் தலைநகரின் மிகப் பெறுமதியான இடமொன்றில் கம்பீரமாகத் தோற்றமளிப்பதைக் காணலாம்.

இக்கட்டிடத்தொகுதியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு பிரிவு, வக்பு சபை, வக்பு நீதிமன்றம் என்பன ஒரே கூரையின் கீழ் இயங்கவுள்ளதுடன், தொழுகை அறை, மாநாட்டு மண்டபம், நூலகம், இஸ்லாமிய அரும்பொருட்காட்சிசாலை என்பனவும் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தன.
தற்போதைக்கு இக்கட்டிடமே இலங்கை முஸ்லிம்களுக்குள்ள மிகப்பெரிய கலாச்சார கட்டிடத்தொகுதியாகும்.
இதுபோன்ற நிரந்தரக் கட்டிடம் இந்து கலாச்சாரத் திணைக்களத்திற்கோ அல்லது கிறிஸ்தவ கலாச்சாரத் திணைக்களத்திற்கோ இல்லை.

தற்போதைய அரசியல்–சமூக சூழ்நிலையில் இத்தகைய இடத்தில் இவ்வாறான கட்டிடமொன்றை உருவாக்குவது கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1981ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டு, அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த மர்ஹூம் எம். எச். முஹம்மத் அவர்களின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பு கொழும்பு – 5, கெப்படிபொல மாவத்தியில் இயங்கிவந்த வக்பு பிரிவும் இத்திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இத்திணைக்களம் ஆரம்ப காலத்தில் டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்திருந்த போக்குவரத்து அமைச்சின் ஒரு பகுதியாக, அதன் மேல்மாடியில் இயங்கிவந்தது. (இக்கட்டிடம் தற்போது அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு எதிரே பாதையோரத்தில் அமைந்துள்ளது.) இக்கட்டிடத்திலேயே 1990ஆம் ஆண்டு வரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவந்தது.

அக்காலத்தில் தற்போதைய புதிய கட்டிடம் அமைந்துள்ள பகுதி பெரும் காடுகள் நிறைந்த பகுதியாகக் காணப்பட்டதுடன், அங்கு எவ்வித கட்டிடங்களும் இருக்கவில்லை. அந்தக் காணிகள் அனைத்தும் போக்குவரத்து அமைச்சிற்குச் (CGR) சொந்தமானவையாக இருந்தன.

1986ஆம் ஆண்டளவில் மர்ஹூம் எம். எச். முஹம்மத் அவர்கள் மாளிகாவத்தை, ரஜபொகுன மாவத்தையில் அரசாங்க காணியொன்றைப் பெற்று, தமது சொந்த முயற்சியில் “இஸ்லாமிய மத்திய நிலையம்” என்ற பெயரில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது திணைக்கள ஊழியர்கள், “இஸ்லாமிய மத்திய நிலையத்திற்கு பதிலாக, முஸ்லிம் திணைக்களத்திற்கே நிரந்தரமான கட்டிடத்தை திணைக்களத்திற்கு அருகிலுள்ள CGR காணியில் அமைக்கலாமே” என அமைச்சர் மீது விமர்சனம் செய்தனர்.

இதன் காரணமாக 1986ஆம் ஆண்டிலிருந்தே முஸ்லிம் திணைக்களத்திற்கு தனியான இடம் தேவை என்பது திணைக்கள ஊழியர்களினதும் முஸ்லிம் புத்திஜீவிகளினதும் உள்ளங்களில் வலுவடைந்தது.

எம். எச். முஹம்மத் அவர்கள் சபாநாயகராகப் பதவி மாற்றம் பெற்றதன் பின்னர், இத்திணைக்களம் 1990ஆம் ஆண்டு கொழும்பு – 2, இல. 34, மாலே வீதியில் அமைந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அக்காலத்தில் அந்தக் கட்டிடத்தில் கல்வி அமைச்சராக மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பணியாற்றி வந்திருந்தனர்.

1994ஆம் ஆண்டளவில், போக்குவரத்து அமைச்சராக ஸ்ரீமதி சிறிமானி அதுலத் முதலி அவர்கள் பதவி வகித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் இணைப்புச் செயலாளராக இஸ்ஸத் என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் அடிக்கடி மாலை நேரங்களில் எமது திணைக்களத்திற்கு வருபவராக இருந்தார்.

அக்காலத்தில் திணைக்களத்தின் பணிப்பாளராக மர்ஹூம் யு. எல். எம். ஹால்தீன் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், நானும் ஹால்தீன் அவர்களும் உரையாடிக் கொண்டிருந்தபோது, இஸ்ஸத் மூலமாக ஸ்ரீமதி அதுலத் முதலியிடம் குறித்த காணியைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யலாமே என முன்மொழிந்தேன். அதனை ஹால்தீன் அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

இஸ்ஸத் என்பவர் அமைச்சருடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததாலும், அக்காலத்தில் அமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஓரளவு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாலும், அவரது முயற்சி வெற்றியடைந்தது.

அக்காலத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கியது. அப்போது கலாச்சார அமைச்சராக மர்ஹூம் லக்ஷ்மன் ஜயக்கொடி அவர்கள் இருந்தார்கள். அத்திணைக்களத்தின் இணைப்பு அதிகாரியாக எம். எச். எம். உவைன் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அமைச்சருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததால், அமைச்சிலிருந்து வரக்கூடிய நன்மை–தீமைகளைச் சமாளிக்கக் கூடியவராக இருந்தார்.

இதேபோன்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுடன் வபான் என்பவர் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற வரவு–செலவுத் திட்ட உரையின்போது, முஸ்லிம்களுக்கென ஒரு வக்பு ஹவுஸ் அமைக்கும் திட்டம் தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், ஸ்ரீமதி அதுலத் முதலி அவர்கள் அனுமதி கோரியபோது, ஜனாதிபதி அவர்கள் உடனடியாக அனுமதியளித்தார். இதன் மூலம் 7 பேர்ச் CGR காணி வக்பு ஹவுஸ் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. இக்காணியைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்று உழைத்தவர் திணைக்களத்தின் பணிப்பாளர் யு. எல். எம். ஹால்தீன் அவர்கள் ஆவார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாத சூழ்நிலையிலேயே, பணிப்பாளரதும் சில இணைப்பு அதிகாரிகளினதும் அயராத முயற்சியினால் இவ்வளவு பெறுமதியான காணி பெற்றுக் கொள்ளப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர்களாக இரு முஸ்லிம்கள் இருந்தபோதிலும், அவர்களால் இக்காரியம் முன்னெடுக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில், தற்போதைய கட்டிடத்திற்கு முன்பாக, அதாவது பாதையோரத்தில் — முன்பு காமினி படமாளிகை இருந்த இடத்திலேயே காணி ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர், மர்ஹூம் எம். எச். முஹம்மத் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் (மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி), அந்தக் காணி நகர அபிவிருத்திக்கு தேவைப்படுவதாகக் கூறி, அதற்கு மாற்றாக தற்போதைய இடத்தில் காணி ஒதுக்கப்பட்டது.

இது அவர்களின் சுயநலத்திற்காக இடம்பெற்றதாக இருந்தாலும், முஸ்லிம் திணைக்களத்திற்கு அது நன்மையாகவே அமைந்தது. காரணம், தற்போதைய இடம் ஓரளவு பொதுக் கண்களிலிருந்து ஒதுங்கியதாக அமைந்துள்ளது.

1996ஆம் ஆண்டு, சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பாராளுமன்றக் குழுவினால், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் மர்ஹூம் யு. எல். எம். ஹால்தீன் அவர்களின் முயற்சியால் நாட்டப்பட்டது. எனினும், அது பலன் அளிக்கவில்லை.

ஈரானிய தூதரகம் கட்டிடத்தை அமைத்துத் தர முன்வந்தபோதும், அதனைப் பெரும்பாலானோர் விரும்பாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

1998ஆம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டபோது, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில், இக்கட்டிடத்தொகுதியின் பெரிய மாதிரி ஒன்றை நான் உருவாக்கி மக்கள் மத்தியில் காட்சிக்கு வைத்தேன். இதன் மூலம் கட்டிடத்தின் வடிவமைப்பு பொதுமக்களிடையே பரவலாக அறிமுகம் பெற்றது.

கட்டிடத்திற்கான வடிவமைப்பு, வரைபடங்கள், திட்டங்கள் ஆகிய அனைத்தும் மர்ஹூம் யு. எல். எம். ஹால்தீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

2004ஆம் ஆண்டு, கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் துறைமுகங்கள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்காக தற்காலிக கட்டிடம் ஒன்று, குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டது. அதே ஆண்டில், திணைக்களம் மாலே வீதியிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.

கொழும்பு – 5, கெப்படிபொல மாவத்தியில் இயங்கிவந்த வக்பு பிரிவும் இக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதால், கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால் புதிய நிரந்தர கட்டிடத்தின் அவசியம் தெளிவாக உணரப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், அமைச்சர் அலவி மௌலானா, அமைச்சர் பௌஸி உள்ளிட்டோர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் நிதி கோரியதன் விளைவாக, 295 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இக்காலத்தில் எம். ஐ. அமீர் அவர்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்தார். அவரின் முயற்சியினாலும் இக்கட்டிடம் முன்னெடுக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் கலாச்சார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரளியத்த அவர்களால் நாட்டப்பட்டது. ஆரம்பத்தில் கட்டிட வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டாலும், பின்னர் ஆமை வேகத்தில் தொடர்ந்தன.

2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப் பணிகள் 2017ஆம் ஆண்டிலேயே ஓரளவு நிறைவடைந்தன. கட்டிட நிர்மாணப் பணிகள் CEB நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிதி கிடைக்கும்போது வேலைகள் முன்னெடுக்கப்பட்டதும், நிதி முடிந்தவுடன் பணிகள் நிறுத்தப்பட்டதும் இக்காலத்தின் தன்மையாக இருந்தது.

இக்காலப்பகுதியில் திணைக்களத்தின் பணிப்பாளர்களாக எம். ஐ. அமீர், வை. எல். எம். நவ்வாவி, எம். ஸமீல் ஆகியோர் பணியாற்றினர். அவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அலவி மௌலானா ஆகியோரின் உதவியுடன், நிதி அமைச்சர் மற்றும் பெசில் ராஜபக்ஷ மூலமாக காலத்திற்கு காலம் நிதிகளைப் பெற்றுத் தந்தனர்.

கட்டிடத்தின் இறுதி மாடியில் இஸ்லாமிய கட்டிடக்கலையின் அடையாளமான குப்பா வடிவமைக்கப்பட்டமை கலாச்சார அமைச்சின் செயலாளர்களுக்கும் சில அரசாங்க அமைச்சர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மருதானைச் சந்தியிலிருந்து பார்க்கும்போது, இக்கட்டிடம் பள்ளிவாசலைப் போன்ற தோற்றமளிப்பதாக அவர்கள் கருதினர்.

முன்னைய கலாச்சார அமைச்சின் செயலாளர், “இந்த கட்டிடத்தின் வடிவமைப்பை முன்கூட்டியே அறிந்திருந்தால், இதனை நான் நிறுத்தியிருப்பேன்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சில காலம் கட்டிடப் பணிகள் தேக்க நிலை அடைந்தன. எனினும், பூச்சு வேலைகளைத் தவிர்ந்த பெரும்பாலான கட்டிடப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்திருந்தன.

அடுத்து வந்த அரசாங்கத்தில், கௌரவ எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். திணைக்களத்தின் இடநெருக்கடியைக் கண்ணுற்ற அவர், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க அவர்களை அழைத்து வந்து கட்டிடத்தை நேரில் காண்பித்தார். அதன் விளைவாக, பல கோடி ரூபாக்கள் ஒதுக்கப்பட்டு, கட்டிடத்தின் மூன்று மாடிகளில் பூச்சு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

இதன் பின்னர் 2017 ஜனவரி 17ஆம் திகதி கட்டிடம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாதிருந்தால், இக்கட்டிடப் பணிகள் மேலும் இழுத்தடிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதும், கட்டிடத்தின் முழுச் செலவும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டதுமான காரணத்தால், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை பிற அமைச்சுகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. மேலும், கட்டிட பராமரிப்பிலும் திணைக்களம் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சர் உள்ளார். ஆகவே, இக்கட்டிடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தொகுதியாகத் தக்கவைத்துக் கொள்வதில் அவருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

சில மாடிகள் இந்து மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள மாடிகளையாவது பாதுகாத்து, முஸ்லிம் திணைக்கள கட்டிடத்தொகுதியாகவே செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.


மௌலவி ஜே. மீரா மொஹிதீன்
முன்னாள் பிரதிப் பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :