மறைந்த தேசியத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து கல்முனை நகரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்முனை பிரதிநிதிகளின் அசமந்தமான மற்றும் பொறுப்பற்ற அரசியல் போக்கின் காரணமாகவே அந்தப் பணியகம் பின்னர் அம்பாறை நகரத்திற்கு மாற்றப்பட்டதாக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், கல்முனை மற்றும் அதனைச் சூழவுள்ள கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகள் மற்றும் பயிற்சிகளைப் பெறுவதற்காக அம்பாறைக்கு பல தடவைகள் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அதிகளவு பொருளாதாரச் சுமையையும் தேவையற்ற கால இழப்பையும் சந்தித்து வருவதாகவும், குறிப்பாக மொழி தொடர்பான சிக்கல்கள் அவர்களுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அம்பாறையில் உள்ள பணியகத்தை மீள கல்முனைக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பின், குறைந்தபட்சமாக கல்முனையில் ஒரு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியுள்ளது. இது கல்முனை மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும், நியாயமான அடிப்படை உரிமையாகவும் இருப்பதாக அந்தக் கட்சி கூறுகிறது.
மேலும், பிரதியமைச்சர் அருன் பிரேமசந்திர அவர்களின் கருத்துக்கு இணங்க, பொதுமக்கள் சார்பில் இக்கோரிக்கையை முன்வைப்பதுடன், கல்முனை மக்களின் மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆதம்பாவா அவர்கள் இதுதொடர்பான கோரிக்கையை பாராளுமன்றத்திலும் அரசின் கவனத்திற்கும் முன்வைப்பார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து, கல்முனை மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்

0 comments :
Post a Comment