மறைந்தது மருத்துவத்தின் முத்து
அம்பாறை மாவட்டத்தின் புகழ்பூத்த கல்முனை நகரில் மருத்துவத் துறையின் முத்தாக திகழ்ந்தவர்களில் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் மறக்க முடியாத ஒருவர். டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் 1958.02.01ம் திகதி உதுமாலெப்பை அஹமட் லெப்பை மற்றும் முஹம்மட் இப்றாஹீம் பாத்துமா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். குடும்பத்தின் முதல் வாரிசாக பிறந்த இவர் மருத்துவத் துறையின் முத்தாக உருவெடுத்தார்.
தனது ஆரம்ப கல்வியை கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கைதடி மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்ற டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் 1978ம் ஆண்டு மருத்துவத் துறையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பினை முடித்த டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் இலங்கையின் சுகாதாரத் துறையின் முத்தாகத் திகழ்ந்தார்.
டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் முதன் முதல் மருத்துவ துறை பயிலுனராக பதுளை பொது வைத்தியசாலையில் தனது மருத்துவ பணியை ஆரம்பித்துள்ளார். அதேபோன்று Relief MO வாகவும் அங்கு பணியாற்றியுள்ளார். மேலும் ருகுணு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு பதுளை பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கல்முனை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் பதுளை பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகராகவும் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் ஸ்தாபக பணிப்பாளராகவும் ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி மாகாண பணிப்பாளராகவும் அதன் பின்னர் பதுளை பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 2012 முதல் 2016 வரையான காலப்பகுதியில் வைத்திய அத்தியட்சகராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த வங்கியை கொண்டு வருவதில் பங்களிப்பு செய்துள்ளார்.
மேலும் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதோடு சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றை மீள்புனருத்தானம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார். இறுதியாக கொழும்பு சீமாட்டி லேடி ரிஜ்வேய் சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகவும் சிறப்புற பணியாற்றிய வேளையில் ஓய்வு பெற்றிருந்தார்.
மேலும் ஊவா மாகாண சுகாதாரப் பிரதிப் பணிப்பாளாராக (Deputy Provincial Director Of Health Service) பதவியேற்று அப் பிராந்திய மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கிய முதல் முஸ்லிம் பணிப்பாளர் என்ற பெருமையும் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களையே சாரும். ஊவா மாகாணத்தின் தலைநகரான பதுளை நகரில் அவர் பணியாற்றிய காலத்தை அப் பிரதேச மக்கள் தங்கள் வாழ்க்கையின் பொற்காலம் என்றே இன்றும் நினைவு கூறுகின்றனர். இது டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். அதுமட்டுமல்லாது ஊவா மாகாணத்தின் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் மறுமலர்ச்சி உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய ஊவா முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (UMEDA) தலைவராகவும் டாக்டர் ஏ.எல்.எம் நஸீர் பணியாற்றினார்.
சுகாதாரத்துறை மட்டுமல்லாது கல்வி, வர்த்தகம், சமயம் மற்றும் சமூகம் என எல்லாத் துறைகளிலும் சிறப்பான முறையில் பணியாற்றி எல்லாப் பிரதேச மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்த ஒரு பன்முக ஆளுமையாக இவர் திகழ்ந்தார்.
கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் பின்னர் கல்முனையை கல்வி, வர்த்தகம் மட்டுமன்றி சகல துறைகளிலும் மீள கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் (Kalmunai Development and Management Council ) ஸ்தாபக தலைவராகவும் கல்முனை ஸகாத் அமைப்பின் ஸ்தாபக தலைவராக கடந்த 2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சுமார் 18 ஆண்டுகளாக கடமையாற்றி கல்முனையின் அபிவிருத்திக்காக பெரும் பங்காற்றிய பெருமகனை இன்று கல்முனை நகரம் இழந்து நிற்கின்றது.
டாக்டர் நஸீர் 1989ம் ஆண்டு பதுளையைச் சேர்ந்த பஹ்மிதா (நில அளவையாளர்) என்பவரை கரம் பிடித்தார். நுஸ்ஹா நஸீர் , நாதிரா நஸீர் , நவீட் நஸீர் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலம் சென்ற புவாட் இஸ்மாயில் மற்றும் கதீஜா தம்பதிகளின் மருமகனும் ஆவார். மேலும் ஹக்கீம் (பொறியியளாளர்) , அப்துல் சலாம் (ஓய்வுநிலை முகாமையாளர்) , சம்சுன் நிஹாரா , சித்தி பௌசியா மற்றும் மர்ஹூம் தமீம் (சென்ட்ரல் ஹார்ட்வெயார்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இன்று கல்முனை மாநகரம் வரலாற்றுப் பொக்கிஷமான டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களை இழந்து நிற்கின்றது. டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் 2025.11.14ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை தனது ராஜகிரிய வீட்டில் திடீர் சுகவீனம் காரணமாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தனது 67வது வயதில் வபாத்தானார்கள். அன்னாரது ஜனாஸா மறுநாள் 2025.11.15ம் திகதி சனிக்கிழமை கொழும்பு - 07 ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இழப்பு எம் மத்தியில் என்றுமே நிரப்ப முடியாத ஒரு பேரிழப்பாக இருக்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் மற்றும் பாவங்களை பொறுத்து அவரின் நற்செயல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக... ஆமீன்...

0 comments :
Post a Comment