தென்கிழக்குப் பல்கலையின் 29 ஆவது வருட பூர்த்தியும் ஸ்தாபகர் தினமும்.



தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 29 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்வையும் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகருமான மறைந்த கலாநிதி அஷ்ரப் அவர்களை நினைவுகூரும் நிகழ்வும் அஷ்ரப் பிறந்த தினமான இன்று 2025.10.23 ஆம் திகதி பல்கலைக்கழக ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான பேச்சாளராக பேராதனைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் சிரேஷ்ட எமிரிட்டஸ் பேராசிரியர் எம். ஏ. கரீம் கலந்துகொண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆற்றிய பங்கு குறித்து உரையாற்றினார்.

நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. யூ.எல். அப்துல் மஜீத் வரவேற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆற்றினார்.

இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலாநிதி எம். எச். எம். அஷ்ரப் நினைவு நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய பேராசிரியர் எம். ஏ. கரீம் அவர்கள், பல்கலைக்கழகத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து விரிவாகப் எடுத்துரைத்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம், 1990 களில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக பணியாற்றிய முன்னாள் அமைச்சர் கலாநிதி எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் தொலைநோக்கு சிந்தனைக்குச் சான்றாகும் என அவர் தெரிவித்தார். கல்வி என்பது சமூக நீதிக்கும் முன்னேற்றத்துக்கும் அடித்தளம் என நம்பிய அஷ்ரப் அவர்கள், வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வியில் பின்னிலையில் இருந்த முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் நோக்கில் 1995ஆம் ஆண்டு “South eastern University College” எனும் பெயரில் இந்நிறுவனத்தைத் ஆரம்பிக்கப்பட்டு. பின்னர் இது 1996ஆம் ஆண்டு முழுமையான பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.

அப்போதைய முதல் உபவேந்தர் பேராசிரியர் எம். எல். ஏ. கதர் அவர்களின் வழிகாட்டுதலில், பிரயோக விஞ்ஞான பீடத்தை (Faculty of Applied Sciences) அமைக்கும் பொறுப்பை ஏற்றதாக கூறினார். ஒலுவிலில் தற்காலிக வசதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பீடம், மிகக் குறுகிய காலத்திலேயே விரிவுரைக் கூடங்கள், ஆய்வுகூடங்கள், மற்றும் பாடத்திட்டங்களுடன் மாணவர்களைச் சேர்க்கத் தயாரானது.

1997 ஒக்டோபரில் உயிரியல், இயற்பியல், மற்றும் கணிதம் ஆகிய மூன்று துறைகளுடன் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்த போதிலும், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பினால் ஒரு சுறுசுறுப்பான கல்வி சூழல் உருவானது.

இன்று பிரயோக விஞ்ஞான பீடம், 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், நவீன ஆய்வுகூடங்கள், கணினி நிலையங்கள், ஆராய்ச்சி பிரிவுகள், மற்றும் பட்டமேற்படிப்பு பிரிவுகளுடன் இயங்கிவருகிறது. இது தற்போது ஐந்து துறைகளைக் கொண்டது மற்றும் பல்கலைக்கழகத்திலும் தேசிய மட்டத்திலும் முன்னணி பீடமாக வளர்ந்துள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் கரீம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது ஆறு பீடங்களுடன் வளர்ந்து வருவதையும், மருத்துவ பீடம் உருவாக்கப்படும் நிலையிலும் இருப்பதையும் குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்தில் பட்டமேற்படிப்பு கல்வியை விரிவுபடுத்தல், ஆராய்ச்சி நிலையங்களை வலுப்படுத்தல், மற்றும் ஒலுவில் வளாகத்தை பசுமைமயமான சர்வதேச தரமிக்க வளாகமாக மாற்றுவது என்பன பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களாகும் என தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனத்தை விட, அது ஒரு கனவு, தைரியம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சின்னம் என அவர் வலியுறுத்தினார். கலாநிதி அஷ்ரப்பின் கல்வி சமத்துவக் கனவும், பேராசிரியர் காதர் அவர்களின் தலைமையும், பின் வந்த பல்கலைக்கழக நிர்வாகிகளின் உழைப்பும் இணைந்து இந்நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஸ்தாபகர் தினத்தின் சிறப்புரையாளர் பேராசிரியர் (Emeritus) எம். ஏ. கரீம் அவர்கள், பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை ஏற்பட்ட முன்னேற்றங்களையும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களையும் விரிவாக விளக்கினார். அவர் தனது உரையில், “ஒரு காலத்தில் பாழடைந்த நிலமாக இருந்த இந்த இடம் இன்று அறிவுத் திறன் மலரும் தளமாக மாறியுள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் 16,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம், நாட்டின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கை வகித்து வருகிறது” எனக் கூறினார்.

மேலும், கல்வி மட்டுமின்றி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் செயற்பாடு, சமூக தொழில்முனைவோர் வளர்ச்சி ஆகிய துறைகளில் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் முயற்சிகள் எதிர்கால இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவரது உரையின் இறுதியில், “இலங்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கல்வி, ஒற்றுமை மற்றும் சமூகநீதியின் அடையாளமாக தொடர்ந்துமிளிர” பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைதீன் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 29 ஆண்டுகளுக்கு முன் மிகக் குறைந்த வசதிகளுடன் தொடங்கியபோதும், இன்று கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனமாக உருவெடுத்திருப்பது பெருமைக்குரிய சாதனையாகும் என்று குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகத்தின் துவக்கத்திற்கான கனவையும் தூரநோக்குச் சிந்தனையையும் கொண்டிருந்த மறைந்த கலாநிதி எம். எச். எம். அஷ்ரப் அவர்களும், அந்த கனவை நனவாக்கிய முதல் உபவேந்தர் பேராசிரியர் எம். எல். ஏ. காதரும் இந்தப் பல்கலைக்கழக வரலாற்றின் மறக்க முடியாத நாயகர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நாம் 30ஆவது ஆண்டு நிறைவுக்குத் தாவும் இந்த கட்டத்தில், எதிர்காலத்தை நோக்கி புதிய திட்டங்களுடனும் தன்னம்பிக்கையுடனும் முன்னேறுவது அவசியம் என்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மற்றும் காலநிலைச் சவால்கள் நிறைந்த உலகில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் புதிய திட்டங்கள், ஆராய்ச்சி, சமூக மாற்றம் ஆகியவற்றில் முன்னோடி பல்கலைக்கழகமாக மாற வேண்டும். இளம் தலைமுறையை வலுப்படுத்தி சமூகத்தை மாற்றும் திறனுடன் செயல்படுவதே எங்கள் இலக்கு” என அவர் கூறினார்.

நிகழ்வின் ஒரு முக்கிய அங்கமாக,பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள், ஆய்வுத்துறை சாதனையாளர் விருதுகள் மற்றும் பல்கலைக்கழக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களும் இந்நாளில் மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வு முடிவில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளும் இடம்பெற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளாகக் கனவை வலியுறுத்தும் வகையில் ஆண்டு விழாவை நினைவூட்டும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த 29ஆவது ஆண்டு பூர்த்திதி நிகழ்வு, கலாநிதி எம். எச். எம். அஷ்ரப்பின் கல்வி சமத்துவக் கனவை நினைவு கூர்ந்து, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றப் பயணத்தை மீண்டும் ஒளிபரப்பிய ஒரு சிறப்பான நாளாக அமைந்தது.

நிகழ்வின்போது பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், நூலகர், திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பதில் நிதியாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

எம்.எச்.எம். அஷ்ரப் – இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தோற்றத்துக்குப் பின்னாலான நாயகன்

இலங்கையின் கிழக்குப் பகுதி முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்திய பெரும் கனவை நனவாக்கியவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார்.

அவரது முயற்சியின் விளைவாகவே இன்று நாம் “இலங்கை தென்கிழக்குப்  பல்கலைக்கழகம் எனும் உயர்கல்வி நிலையத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல முடிகிறது.

1980 களின் இறுதியில், கிழக்கில் முஸ்லிம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்தன.

அந்த நிலையிலேயே எம்.எச்.எம். அஷ்ரப், தமது அரசியல் பார்வை, சமூகப் பணி மற்றும் கல்வி மீதான அக்கறையால், “கிழக்கில் ஒரு தனித்துப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும்” எனும் கோரிக்கையை அரசின் முன் வலியுறுத்தினார். அவரது தாராளமான உழைப்பின் பலனாக, 1995 ஆம் ஆண்டில் South Eastern University College எனும் வடிவில் ஒலுவில் பகுதியில் நிறுவப்பட்டது.

பின்னர், 1996 நவம்பர் 15ஆம் தேதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம், அது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எனும் முழுமையான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இது இலங்கையில் முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான தனித்துவ வாய்ப்பை அளித்தது.

அஷ்ரப் அவர்களின் கனவு மிகத் தெளிவானது “கிழக்கில் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய மூன்றையும் ஒருங்கே வளர்த்தல்.”
அவர் வலியுறுத்தியது: கல்வி என்பது சமத்துவத்திற்கான பாதை, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பொது மேடை பல்கலைக்கழகம் ஆக வேண்டும், முஸ்லிம் சமூகமும் தேசிய வளர்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கமே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடித்தளமாக இருந்தது.

அஷ்ரப் அவர்களின் கல்வி பார்வையின் தாக்கம்

இன்று தென்கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. அதில் பல பீடங்கள் செயல்படுகின்றன:

• கலை மற்றும் கலாசார பீடம்,

• முகாமைத்துவ வர்த்தக பீடம்,

• தொழில்நுட்ப பீடம்,

• இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடம்,

• பொறியியல் பீடம்,

• பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவை.

இவை அனைத்தும் அஷ்ரப் அவர்களின் கல்வி நோக்கு “கிழக்கை வளர்ச்சியின் மையமாக மாற்றுதல்” என்ற இலக்கை இன்று நனவாக்கி வருகின்றன.

எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் “நிலையான அடையாளம்” ஆகும். அவர் இல்லாமலிருந்தால், ஒலுவில் பகுதியில் இன்றையபோல் ஒரு உயர்கல்வி நிறுவனம் உருவாகியிருக்காது என்பது அனைவரின் ஒருமித்த கருத்தாகும்.



































































































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :