மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண 2025 மின்னொளி சுற்றுப் போட்டி சீராக நடைபெறும் என அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.எம்.றஷீட் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் அப்துல் அஸீஸ் அன் சன்ஸ் நிறுவனத்தின் அணுசரனையுடன் நடைபெறும் 2025 மின்னொளி உதைபந்தாட்டப் போட்டி தொடர்பாக செவ்வாய்க்கிழமை(29) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம்-2025 ஜுலை மாதம் 12 ஆந் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்தது.குறித்த மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட நடுவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னின்று நடாத்தி வந்தன.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆந் திகதி கல்முனை கல்வி வலயங்களுக்கு உட்பட்ட முஸ்லீம் பாடசாலைகளில் நடைபெறவுள்ள இரண்டாம் தவணை பரீட்சையை கருத்திற் கொண்டும் மாணவர்களின் கல்வி நலனை அடிப்படையாக கொண்டும் எம்மால் நடாத்தப்படும் சுற்றுப்போட்டியின் பிரதான அணுசரனையாளர் மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சமூக சேவகர் அப்துல் அஸிஸ் அப்துல் கபீல் அவர்களின் வேண்டுகோளிற்கமைய இச்சுற்றுப் போட்டித் தொடரானது 2025.08.03 அன்று முதல் நடைபெறும் போட்டிகளைத் தொடர்ந்து ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளொம்.
எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை இரண்டாம் தவணை பரீட்சைகள் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சுற்றுப் போட்டிக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் இப்போட்டிகள் மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆந் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இச்சுற்றுப்போட்டி பிற்போடுவதற்கான காரணம் எமது மருதமுனை பகுதியின் கல்வி வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனவே அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்தும் கிழக்கு மாகாண முன்னணி கழகங்கள் விளையாடும் மாபெரும் இம்மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை சிறப்பாக நடாத்த இச்சுற்றுப்போட்டியை காண வருகின்ற பார்வையாளர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்படி விடயமாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.கே.றஹ்மானும் பங்கேற்று விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment